இந்தியா – ராஜஸ்தானின் மாநிலத் தலைநகர், ஜெய்ப்பூரின் மிகப்பெரிய பொது மருத்துவமனையில் மின்சாரக் கோளாறால் தீ மூண்டது. அதில் குறைந்தது 6 நோயாளிகள் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தீ சம்பவத்தில் மேலும் ஐவர் காயமடைந்துள்ளனர்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் தீ மூண்டதாக மருத்துவமனை அதிகாரி அனுராக் தாக்கட் இந்திய ஊடகங்களிடம் கூறினார். 13 நோயாளிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
தீயணைப்பாளர்கள் தீ மூண்ட 20 நிமிடங்களில் மருத்துவமனைக்கு வந்தனர். தீயை அணைக்க 2 மணி நேரமானது. அந்த நேரத்தில் மருத்துவமனையின் பொருள்கள் பல எரிந்துவிட்டதாக இன்னொரு மருத்துவமனை அதிகாரி கூறினார்.
தீக்கான காரணத்தைக் கண்டறிய பணிக்குழு ஒன்றை ராஜஸ்தான் அரசாங்கம் அமைத்திருக்கிறது. மருத்துவமனையின் தீயணைப்பு ஏற்பாடுகளையும் நிர்வாகத்தின் பதில் நடவடிக்கைகளையும் அக்குழு ஆராயும்.
இதற்குமுன் பல மருத்துவமனைகளில் மின்சாரக் கோளாறு ஏற்பட்டுத் தீ மூண்டிருக்கி்றது. ஒருமுறை உத்தரப் பிரதேசத்தில் இதேபோல் தீ மூண்டபோது 10 கைக்குழந்தைகள் உயிரிழந்தனர்.