சேனல் 4-இன் (Channel 4) புகழ்பெற்ற யதார்த்த நிகழ்ச்சியான ‘Married at First Sight (MAFS) UK’இல் பங்கேற்ற பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக எழுந்துள்ள புகார்கள் இங்கிலாந்து ஊடகத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
படப்பிடிப்பின் போது இரண்டு பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகவும், ஒரு பெண் தனது சம்மதமின்றி பாலியல் செயலில் ஈடுபடுத்தப்பட்டதாகவும் பிபிசியின் ‘பனோரமா’ புலனாய்வு விசாரணையில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
தனது ஆன்-ஸ்கிரீன் கணவர் தன்னை வன்கொடுமை செய்ததோடு, அமில வீச்சு மிரட்டலும் விடுத்ததாக ஒரு பெண் கூறியுள்ளார்.
படப்பிடிப்பு ஒளிபரப்பாவதற்கு முன்பே பாலியல் வன்கொடுமை குறித்து புகார் அளித்தும், சேனல் 4 அந்த எபிசோட்களை ஒளிபரப்பியதாக மற்றுமொரு பெண் குறிப்பிட்டுள்ளார்.
பிராட்லி ஸ்கெல்லி என்பவர் தனது சம்மதமின்றி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக ஷோனா மேண்டர்சன் என்ற பெண் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டுகளை சம்பந்தப்பட்ட ஆண்கள் மறுத்துள்ளனர். அவர்கள் அனைவரும் இது சம்மதத்துடனேயே நடந்ததாகக் கூறியுள்ளனர்.
இந்தப் புகார்கள் மிகவும் “தீவிரமானவை” என்றும், இதில் ஏதேனும் குற்றச் செயல்கள் நடந்திருந்தால் அதற்குரிய விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் பிரிட்டிஷ் கலாச்சாரம், ஊடகம் மற்றும் விளையாட்டுத் துறை (DCMS) எச்சரித்துள்ளது.
இது குறித்து பொலிஸ் விசாரணை நடத்தப்பட அதிக வாய்ப்புள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் டான் ஜார்விஸ் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தைத் தொடர்ந்து, சேனல் 4 தனது ஸ்ட்ரீமிங் சேவையிலிருந்து அனைத்து எபிசோட்களையும் நீக்கியுள்ளதுடன், சமூக வலைதளப் பக்கங்களையும் முடக்கியுள்ளது.
எனினும், சேனல் 4-இன் தலைமை நிர்வாக அதிகாரி பிரியா டோக்ரா, பாதிக்கப்பட்ட பெண்களிடம் மன்னிப்பு கேட்க மறுத்து, பேட்டியின் பாதியிலேயே வெளியேறியுள்ளமை விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.
நிகழ்ச்சியைத் தயாரித்த CPL நிறுவனம், தங்களது பாதுகாப்பு விதிமுறைகள் “தங்கத் தரத்தில்” இருந்ததாகக் கூறியுள்ளது.
முன்பின் தெரியாத நபர்களைச் சந்தித்து, உடனடியாகத் திருமணம் செய்து கொண்டு, ஒரே படுக்கையைப் பகிர்ந்துகொள்ள வைக்கும் இந்த நிகழ்ச்சியின் வடிவமைப்பு, “விபத்துக்காகக் காத்திருக்கும் ஒரு சூழல்” என்று, நாடாளுமன்றக் குழுவின் தலைவர் கரோலின் டினெனேஜ் விமர்சித்துள்ளார்.
இந்த நிகழ்ச்சிக்கான தனது விளம்பர ஆதரவை ‘Tui’ நிறுவனம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
இனிவரும் காலங்களில் இத்தகைய யதார்த்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பாளர்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று பல்வேறு சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.