இங்கிலாந்தின் உள்நாட்டு அரசியலில் தலையிட்டு மக்களிடையே பிரிவினையைத் தூண்ட எலோன் மஸ்க் முயற்சிக்கிறார் என பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
யார்க்ஷயரில் உரையாற்றிய பிரதமர், கடந்த சில நாட்களாக மஸ்க் மீண்டும் மீண்டும் இங்கிலாந்து அரசியலில் தலையிட்டு வருவதாகவும், ஒரு நாடாக நாம் யார் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
கடந்த ஆண்டு இந்திய வம்சாவளி இளைஞரால் தாக்கப்பட்ட ஹென்றி நோவாக் என்ற வெள்ளையின மாணவனின் வழக்கு தொடர்பாக, எலோன் மஸ்க் தனது ‘எக்ஸ்’ (X) தளத்தில் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார்.
இங்கிலாந்து அரசு மற்றும் பொலிஸார் வெள்ளையின மக்களுக்கு எதிராகப் பாரபட்சமாகச் செயல்படுவதாக மஸ்க் வாதிட்டு வருகிறார்.
இந்தச் சம்பவத்தின் போது, கத்திக் குத்து காயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நோவாக்கை, அவர் இனவெறித் தாக்குதல் நடத்தியதாகக் கூறி பொலிஸார் கைது செய்ய முயன்ற வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக ஆலோசிக்க பிரதமர் ஸ்டார்மர், நோவாக்கின் குடும்பத்தினரை நேரில் சந்தித்தார்.
இங்கிலாந்து மக்கள் பகுத்தறிவு மற்றும் சகிப்புத்தன்மை கொண்டவர்கள் என்று குறிப்பிட்ட ஸ்டார்மர், மஸ்க் போன்றவர்களின் பிளவுபடுத்தும் முயற்சிகளுக்கு இடம்கொடுக்கக் கூடாது எனக் கூறினார்.
எலோன் மஸ்க் தொடர்ந்து இனத் தேசியவாதக் கருத்துகளைப் பதிவிட்டு வருவதோடு, இங்கிலாந்தின் தீவிர வலதுசாரிக் கட்சியான ‘Restore Britain’-இன் ஆதரவாளராகவும் செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.