செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மஹிந்தவின் மகன் யோஷித ராஜபக்ஷ கைது! ரோயல் கடற்படை பயிற்சி கட்டணம் தொடர்பில் குற்றச்சாட்டு

மஹிந்தவின் மகன் யோஷித ராஜபக்ஷ கைது! ரோயல் கடற்படை பயிற்சி கட்டணம் தொடர்பில் குற்றச்சாட்டு

1 minutes read

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனான யோஷித ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான தொடர் விசாரணைகளின் அடிப்படையில் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் (CIABOC) கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்விவகாரம் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு வழங்கப்பட்ட அழைப்பாணைக்கு இணங்க, யோஷித ராஜபக்ஷ இன்று காலை ஆணைக்குழுவிற்கு வருகை தந்திருந்தார். முன்னதாக நேற்று ஆஜராகுமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும், நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த மற்றொரு வழக்கின் காரணமாக குறிப்பிட்ட நாளில் தம்மால் ஆஜராக முடியவில்லை என யோஷித ராஜபக்ஷ ஆணைக்குழுவிடம் தெரிவித்திருந்தார். இதையடுத்து இன்று காலை மீண்டும் ஆஜராகுமாறு அவருக்கு உத்தரவிடப்பட்ட நிலையில், விசாரணைகளின் பின்னர் அவர் காவலில் எடுக்கப்பட்டுள்ளார்.

2006ஆம் ஆண்டு அப்போதைய இலங்கை கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட, யோஷித ராஜபக்ஷவை இங்கிலாந்து ரோயல் கடற்படை அகாடமியில் இணைப்பது தொடர்பாக கோரிக்கை விடுத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கு பதிலளித்த இங்கிலாந்து கடற்படை அகாடமி, அவரை இணைத்துக்கொள்ள முடியும் என அறிவித்திருந்தாலும், அது முழுமையான கல்வி உதவித்தொகை அடிப்படையில் அல்ல என்றும், அதற்கான கட்டணங்கள் செலுத்தப்பட வேண்டியிருக்கும் என்றும் குறிப்பிட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், இலஞ்ச ஆணைக்குழுவின் விசாரணைகளில், இலங்கை கடற்படையில் அதிகாரி பயிற்சியாளராக இணைவதற்கான அடிப்படைத் தகுதிகள் தொடர்பிலும் கேள்விகள் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. பொதுவாக அதிகாரி பயிற்சியாளராக சேரும் விண்ணப்பதாரர்கள் உயர்தரத்தில் அறிவியல் அல்லது கணிதப் பிரிவுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

எனினும், யோஷித ராஜபக்ஷ உயர்தரத்தில் கலைப் பிரிவில் கல்வி கற்றிருந்ததால் ஆரம்பத்தில் அவருக்கு தேவையான தகுதிகள் இருக்கவில்லை என விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவரது நியமனத்தை எளிதாக்கும் நோக்கில் ஆட்சேர்ப்பு தகுதிகள் பின்னர் மாற்றப்பட்டு, புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டதாகவும் விசாரணைகளில் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், 2007ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அவர் இங்கிலாந்துக்குச் சென்று, இலங்கை அரசாங்கத்தின் செலவில் ஒன்றரை ஆண்டுகளுக்கும் அதிக காலம் இங்கிலாந்து ரோயல் கடற்படை அகாடமியில் பயிற்சி பெற்றதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக மேலதிக விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.