இங்கிலாந்தின் கேட்விக் விமான (Gatwick Airport) நிலையத்தில் தரையிறங்கிய பயணிகள் விமானம் ஒன்றின் சக்கரப் பகுதியில் இருந்து நபரொருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tangier நகரிலிருந்து இலண்டன் நோக்கிப் பயணித்த ஏர் அரேபியா மரோக் (Air Arabia Maroc) நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம் பாதுகாப்பாக தரையிறங்கிய பின்னர், இந்த சம்பவம் கண்டறியப்பட்டுள்ளது.
விமானத்தின் வழக்கமான பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப பரிசோதனைகளின் போது, சக்கரங்கள் அமைந்துள்ள பகுதியில் ஒருவர் உயிரிழந்த நிலையில் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து விமான நிலைய அவசர சேவைப் பிரிவினரும் பொலிஸாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்ட நபரின் அடையாளம் மற்றும் அவர் எவ்வாறு விமானத்தின் சக்கரப் பகுதிக்குள் சென்றார் என்பது தொடர்பில் அதிகாரிகள் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
ஆரம்பகட்ட தகவல்களின் அடிப்படையில், குறித்த நபர் விமானத்தின் சக்கர அமைப்புப் பகுதியில் மறைந்து பயணிக்க முயன்றிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
விமானத்தின் சக்கரப் பகுதியில் பயணிப்பது மிகவும் ஆபத்தானதாகும் என விமானப் பாதுகாப்பு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அதிக உயரத்தில் காணப்படும் கடும் குளிர், ஆக்சிஜன் பற்றாக்குறை மற்றும் சக்கர அமைப்பின் இயங்கும் தன்மை ஆகிய காரணங்களால் இத்தகைய சூழ்நிலைகளில் உயிர் பிழைப்பது மிக அரிதாகக் கருதப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், உயிரிழந்த நபரை அடையாளம் காணும் பணிகள் மற்றும் நீதி, மருத்துவ பரிசோதனைகளும் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுகிறது.