இங்கிலாந்தின் எடின்பரோ நகரில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற பல்வேறு வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என ஸ்கொட்லாந்து பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்கு எடின்பரோ பகுதியில் உள்ள ஒரு மசூதிக்கு அருகில் தாக்குதல்களை ஆரம்பித்த குறித்த நபர், பின்னர் நகரின் பல பகுதிகளிலும் வன்முறைச் செயல்களில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவங்களில் சுமார் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் மூவர் மேலதிக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், அச்சுறுத்தல், கொள்ளை முயற்சி மற்றும் நாசவேலை உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்பாக பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், 36 வயதுடைய நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் உரிய நேரத்தில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார் என ஸ்கொட்லாந்து பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த பிரதமர் கெயர் ஸ்டாமர், வன்முறைக்கு கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார். மேலும், இந்த தாக்குதல் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புணர்வால் தூண்டப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும், சமூகத்தில் யாரும் இத்தகைய வன்முறைக்கு ஆளாகக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், சட்டத்தை மீறுபவர்கள் சட்டத்தின் முழுமையான நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.