அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பல்வேறு பொருட்களுக்கு 50 சதவீத வரியை விதிப்பதற்கான உத்தரவில் திங்கட்கிழமை (ஜூலை 20) கையெழுத்திட்டுள்ளார்.
அமெரிக்க மதுபானங்கள், வாகனங்கள் மற்றும் பால் பொருட்களுக்கு எதிராக கனடா அரசு பாரபட்சமான முறையில் செயல்படுவதாக டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்குக் கட்டுப்பாடு விதித்ததுடன், ஐரோப்பிய ஒன்றியத்தின் பால் பொருட்களுக்கு கனடா முன்னுரிமை அளிப்பதாக அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ஜேமிசன் கிரீர் தெரிவித்துள்ளார்.
இந்த புதிய வரி விதிப்பு அடுத்த 30 நாட்களில் அமலுக்கு வரும்.
மதுபானங்கள் (Wine), ஹாக்கி மட்டைகள் மற்றும் சிமெண்ட் உள்ளிட்ட நுகர்வோர் பொருட்கள் இந்த வரி விதிப்பின் கீழ் வரும். இது அமெரிக்க-மெக்சிகோ-கனடா வர்த்தக ஒப்பந்தத்தின் (USMCA) கீழ் உள்ள பொருட்களையும் பாதிக்கும்.
எரிசக்தி, பொட்டாஷ் மற்றும் ஏற்கனவே குறிப்பிட்ட துறைசார் வரி விதிப்புக்கு உள்ளான பொருட்களுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
1930ஆம் ஆண்டு வரிச் சட்டத்தின் ‘பிரிவு 338’-ஐப் பயன்படுத்தி இந்த வரிகள் விதிக்கப்பட்டுள்ளன. இச்சட்டம் இதற்கு முன்னதாக வரி விதிக்க பயன்படுத்தப்பட்டது இல்லை என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த ஆண்டு டிரம்ப் விதித்த வர்த்தக வரிகளுக்கு எதிராகப் பதிலடி கொடுத்த சீனா மற்றும் கனடா ஆகிய இரு நாடுகளில் கனடாவும் ஒன்று என வெள்ளை மாளிகை சுட்டிக்காட்டியுள்ளது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கை இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் மேலும் விரிசலை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது.