மின்னணு சிகரெட் (Vaping) பழக்கம் குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு உடல்நலப் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்றும், அவர்களுக்கு இதன் மீதான ஈர்ப்பைக் குறைக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
வேப்பிங் தொடர்பான சுமார் 81 ஆய்வுகளை, ‘ராயல் காலேஜ் ஆஃப் பீடியாட்ரிக்ஸ் அண்ட் சைல்ட் ஹெல்த்’ (RCPCH) அமைப்பு மறு ஆய்வு செய்துள்ளது.
இந்த மறு ஆய்வின் முடிவுகள் ‘ஆர்க்கிவ்ஸ் ஆஃப் டிசீஸ் இன் சைல்ட்ஹுட்’ (Archives of Disease in Childhood) என்ற மருத்துவ இதழில் வெளியிடப்பட்டுள்ளன.
வேப்பிங் செய்வதால் பின்வரும் பாதிப்புகள் ஏற்படுவதாக இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது:
– சுவாசப் பிரச்சினைகள் (மூச்சுத்திணறல் மற்றும் இருமல்) அதிகமாக ஏற்படுதல்.
– கர்ப்ப காலத்தில் தாய்மார்கள் வேப்பிங் பயன்படுத்துவதால் கருவில் உள்ள குழந்தைகளுக்கு பாதிப்புகள் ஏற்படுதல்.
– மோசமான வாய் மற்றும் பல் ஆரோக்கியம்.
– தூக்கமின்மை மற்றும் மனநலப் பிரச்சினைகள்.
– கண் தொடர்பான கோளாறுகள்.
வேப்பிங் செய்வதை “வளர்ந்து வரும் பருவத்தின் ஒரு பாதிப்பில்லாத பகுதி” என்று சாதாரணமாகக் கடந்துவிடக் கூடாது என இந்த ஆய்வு எச்சரிக்கிறது.
இந்த ஆய்வின் இணை ஆசிரியரான பேராசிரியர் வில் கரோல் (Prof Will Carroll) கூறுகையில், சுவாசக் கோளாறுகள், நிகோடின் சார்புநிலை மற்றும் அதைத் தொடர்ந்து சிகரெட் புகைக்கும் பழக்கம் ஆகியவற்றுடன் வேப்பிங் நேரடித் தொடர்பைக் கொண்டுள்ளது என்று சான்றுகள் காட்டுகின்றன என்றார்.
குழந்தைகள் இதனைப் பயன்படுத்துவதைக் குறைக்க நாம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
RCPCH அமைப்பின் கொள்கைக்கான துணைத் தலைவர் டாக்டர் மைக் மெக்கீன் (Dr Mike McKean) கூறுகையில், “வேப்பிங் என்பது இன்னும் ஒப்பீட்டளவில் ஒரு புதிய தயாரிப்பு ஆகும். குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் மீதான அதன் நீண்டகால தாக்கம் குறித்து நமக்கு இன்னும் முழுமையாகத் தெரியவில்லை என்றாலும், ஒரு கவலையளிக்கும் படம் தற்போது வெளிவருகிறது” என்று தெரிவித்துள்ளார்.
வேப்பிங் விற்பனைக்கு புதிய கட்டுப்பாடுகளை விதிக்கவும், அதில் கிடைக்கும் சுவைகளின் (flavours) எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தவும் இங்கிலாந்து அரசை RCPCH வலியுறுத்தியுள்ளது.