இங்கிலாந்தின் கிழக்கு சசெக்ஸ் பகுதியில் உள்ள லூயிஸ் நகருக்கு அருகே ரயில் ஒன்று தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. பிபிசி செய்தி வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த விபத்தில் இருவர் பலத்த காயமும், 18 பேர் லேசான காயமும் அடைந்துள்ளனர்.
உள்ளூர் நேரப்படி மாலை 4 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. அப்போது ரயிலில் சுமார் 150 பயணிகள் பயணித்ததாக தெரிவிக்கப்படுகிறது. விபத்தில் சிலர் ஆரம்பத்தில் சிக்கிக் கொண்டாலும், அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டதாக இங்கிலாந்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து குறித்து பயணி ஒருவர், “ரயில் பெட்டி தடம் புரண்டபோது அது முடிவே இல்லாதது போல் இருந்தது. சாவதற்கு தயாராகிக் கொண்டிருந்தேன்” என்று உருக்கமாகக் கூறியுள்ளார்.
மற்றொரு பயணி தனது ஆறு வயது மகளுடன் பயணித்ததாகவும், “பெட்டி அசைய ஆரம்பித்தது, பின்னர் துள்ளிக் குதித்தது” என்று விவரித்துள்ளார்.
விபத்து நடந்த இடத்தில் பதிவான காட்சிகளில், தலைகீழாக கவிழ்ந்த ரயில் பெட்டியின் மேல் மக்கள் நிற்பதையும், பாதை சேதமடைந்துள்ளதையும் காண முடிகிறது.
நெட்வொர்க் ரயில் நிறுவனம், விபத்துக்கான காரணம் குறித்து இப்போதே கூற முடியாது என்று தெரிவித்துள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.