இந்த ஆண்டு முதல் உயர்தரப் பாடவிதானத்தில் கொரிய மொழியை வெளிநாட்டு மொழியாக உத்தியோகபூர்வமான ஏற்றுக் கொள்ளும் இலங்கை அரசாங்கத்தின் தீர்மானம் குறித்து கொரிய குடியரசின் தூதுவர் சந்தூஷ் வூன்ஜின் ஜியோங் தனது மகிழ்ச்சியைத் தெரிவித்தார். இத்தீர்மானமானது இலங்கைப் பாடசாலைகளில் கொரிய மொழி கல்வி விரிவாக்கத்திற்கு வழிவகுத்துள்ளது.
இந்தத் தீர்மானத்தின் மூலம், தேசிய பாடசாலைகளில் 12 ஆம் வகுப்பில் பிரவேசிக்கும் மாணவர்கள் இந்த ஆண்டு கொரிய மொழியை வெளிநாட்டு மொழியாகத் தெரிவு செய்யலாம், மேலும் 2023 ஆம் ஆண்டில் இலங்கையில் உள்ள பல்கலைக்கழகங்களில் பிரவேசிப்பதற்கு கொரிய மொழியில் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றலாம்.
தூதுவர் சந்தூஷ் இது குறித்து கருத்துத் தெரிவிக்கையில் “கொரிய மொழி உயர்தர வகுப்புகளில் ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பதால், கொரிய மொழியை வெளிநாட்டு மொழியாகக் கற்ற மாணவர்கள் 2023 ஆம் ஆண்டில் நடைபெறும் பல்கலைக்கழக நுழைவுப் பரீட்சைகளுக்கு அப்பாடத்துக்குத் தோற்ற முடியும். இது எங்கள் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கு பெரிதும் உதவும்.
கொரிய மொழிக் கல்விக்கான வலுவான அடித்தளத்தை உறுதி செய்வதற்காக இலங்கையில் உள்ள கொரிய மொழி ஆசிரியர்களுக்கான இணையமூலமான திறன் மேம்பாட்டு திட்டங்களை தேசிய கல்வி நிறுவகத்துடன் ஒருங்கிணைப்பதன் மூலம் கொரிய தூதரகம் தனது முழு ஆதரவை வழங்கும்” என்று குறிப்பிட்டார்.
கொரிய மொழியைக் கற்றுக் கொள்வது கொரியாவில் பல வேலைவாய்ப்புகளுக்கு சந்தர்ப்பம் அளிக்கும்” என்று தூதுவர் கூறினார். “சுமார் 23,000 இலங்கைப் பணியாளர்கள் தற்போது கொரியாவில் உள்ளனர். 2019 ஆம் ஆண்டில் சுமார் 520 மில்லியன் அமெரிக்க டொலர் கொரியாவிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்டது.
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இரு நாடுகளையும் இணைத்து ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் பாலம் அமைக்கின்றனர், ஏனெனில் அவர்கள் கொரியா மற்றும் இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்திற்கு தொடர்ந்தும் பங்களிப்பு செய்கிறார்கள்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
தூதுவர் சந்தூஷ் வூன்ஜின் ஜியோங் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸுடன் தேசிய கல்வி நிறுவகம், பரீட்சைத் திணைக்களம் மற்றும் தேசிய கல்வி ஆணைக்குழு ஆகியவற்றின் நெருக்கமான ஒத்துழைப்புடன் இலங்கையில் கொரிய மொழிக் கல்வியை எவ்வாறு மேம்படுத்துவது என்பது பற்றி ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார்.
இந்த ஆண்டு முதல் உயர் தர வகுப்புகளில் கொரிய மொழியை வெளிநாட்டு மொழியாக ஏற்றுக் கொள்ளும் தீர்மானத்தில் கல்வி அமைச்சும் கல்வி நிறுவனங்களும் மிகவும் ஒத்துழைப்பு வழங்கியுள்ளன. தற்போது, சாதாரண தரப் பரீட்சை வரை இரண்டாம் நிலை வகுப்புகளுக்கு கொரிய மொழி வெளிநாட்டு மொழியாக கற்பிக்கப்படுகிறது.
இலங்கை மாணவர்கள் கொரிய பொப்பிசை, கொரிய நாடகங்கள் மற்றும் கொரிய திரைப்படங்கள் உள்ளிட்ட கொரிய கலாசாரத்தில் துரிதமாகத் தமது ஆர்வத்தை வளர்த்து வருவதுடன், இது கொரிய மொழியைக் கற்கும் விருப்பத்திற்கும் வழிவகுத்தது.
கடந்த ஆண்டு வரை, கொரிய மொழியானது உயர்தர வகுப்புகளுக்கு வெளிநாட்டு மொழி விருப்பத் தெரிவாக வழங்கப்படவில்லை. எனவே மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் கொரிய மொழிப் படிப்பைத் தொடர விரும்பினாலும், கொரிய மொழியைக் கற்றுக் கொள்வதில் சாதாரண தரக் கல்விக்குப் பிறகு இரண்டு வருட இடைவெளி இருந்தது.
உயர் தர வகுப்பு மாணவர்களுக்கு இப்போது கொரிய மொழிக் கல்வி வழங்கப்படுவது ஒரு அதிர்ஷ்டமாகும். பல மாணவர்கள் உயர் தர பாடத்துறையில் முறையான கொரிய மொழி வகுப்பைத் தொடர தயாராக இருந்தாலும், தற்போதுள்ள கொரிய மொழி ஆசிரியர்களின் எண்ணிக்கை இலங்கையில் மாணவர்களின் அதிகரித்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்யக் கூடியதாகவில்லை.
எனவே கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில், கொரிய தூதரகத்துடன் இணைந்து தேசிய கல்வி நிறுவனம் இலங்கையில் கொரிய மொழி ஆசிரியர்களுக்கான இணைய மூலமான திறன் மேம்பாட்டுத் திட்டங்களை ஆரம்பித்ததன் மூலம் கொரிய மொழிக் கல்வியை மேம்படுத்த அணுகுமுறைகளை அறிமுகப்படுத்தியது. இது பல கொரிய மொழி ஆசிரியர்களுக்கு தொழில்முறை பயிற்சி பெற வாய்ப்பளித்தது. இலங்கையில் கொரிய மொழிக் கல்வியை விரிவாக்குவதில் கொரிய அரசாங்கத்தின் உறுதியான ஆதரவையும் உதவியையும் தூதுவர் வெளிப்படுத்தினார்.
“எங்கள் இரு கலாசாரங்களுக்கிடையிலும் வேறுபாடுகள் இருந்த போதிலும், ஒருவருக்கொருவர் கலாசாரம் மற்றும் மொழிக்கு வழங்கும் பரஸ்பர மரியாதை மற்றும் அன்பால் நாம் ஒன்றுபட்டுள்ளோம்” என்று தூதுவர் வெளிப்படுத்தினார்.
“கொரிய-இலங்கை நட்பை வளர்ப்பதற்கு அதிகமான இலங்கை இளைஞர்கள் கொரிய மொழியைக் கற்பதற்கு ஊக்குவிக்கப்பட வேண்டும். மாணவர் பரிமாற்றங்களும் கலாசார உறவுகளும் வலுப்பெறும். எனவே அது எங்கள் உறவுகளை பலப்படுத்துவதில் தொடர்ந்து அதிக பங்களிப்பை வழங்கும் என்பது எங்கள் வலுவான நம்பிக்கையாகும்” என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.