சபையில் ஆளுந்தரப்பை கண்டித்தார் சபாநாயகர்

பாராளுமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை காலை, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடிய வேளையில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு குறித்த சர்ச்சையும் பாராளுமன்றத்தில் வெடித்தது. 

இந்நிலையில் எதிர்க்கட்சியினர் தொடர்ச்சியாக கேள்வி எழுப்பிய வேளையில் ஆளுந்தரப்பு பக்கம் அமைச்சர்கள் சபையில் இருக்கவில்லை.

இதன்போது நிலைமைகளை அவதானித்த சபாநாயகர் ஆளும் தரப்பினருக்கு தமது பொறுப்பை சரியாக நிறைவேற்ற வேண்டும் என்ற அறிவுறுத்தலை விடுத்ததுடன், ஆளுங்கட்சியின் முன்வரிசை அமைச்சர்கள் எவரும் சபையில் இல்லை, இது துரதிர்ஷ்டவசமான ஒன்றாகும். 

நாட்டில் ஒரு பிரச்சினை எழுந்தவுடன் அதற்கு பதில் தெரிவிக்க சபையில் சகலருக்கும் பொறுப்பு உள்ளது. இது குறித்தும் சபை முதல்வர் மற்றும் ஆளுங்கட்சி பிரதம கொறடா ஆகியோர் கவனம் செலுத்த வேண்டும் எனவும் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி சபைக்கு வருகின்ற நிலையில் சகல அமைச்சர்களும் சபையில் இருப்பார்கள். அப்படியென்றால் பாராளுமன்ற சகல நாட்களிலும் ஜனாதிபதியை சபைக்கு அழைக்க வேண்டிவரும். 

ஆகவே பொறுப்பான அமைச்சர் என்ற ரீதியில் சகலரும் தமது கடமையில் இருந்து விலகாது சபையில் தமது பொறுப்பை நிறைவேற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தினார். 

ஆசிரியர்