எரிபொருள் விலை அதிகரிப்பு உள்ளிட்ட செலவினங்கள் காரணமாக ஆகக் குறைந்த பஸ் கட்டணத்தை 40 ரூபாவாக அதிகரிக்க நேரும் என தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன தெரிவித்துள்ளார். அதற்கிணங்க அனைத்து பஸ் கட்டணங்களும் 50 வீதத்தால் அதிகரிக்க நேரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜூலை மாதத்தில் மேற்கொள்ளப்படும் வருடாந்த பஸ் கட்டண திருத்தத்தின் போது கட்டணங்களை இவ்வாறு அதிகரிக்க நேரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஐஓசி எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் மாத்திரம் எரிபொருளின் விலைகள் அதிகரிக்கப்பட்டிருந்தாலும் நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடி நிலை மற்றும் சில பிரதேசங்களில் சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையங்கள் இல்லாத காரணத்தினாலும் அதிக விலைக்கு டீசலைப் பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.
எவ்வாறாயினும்தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் தற்போதைக்கு பஸ் கட்டணத்தில் திருத்தமொன்றை எதிர்பார்க்கவில்லையென்றும் எனினும் ஜூலை மாதத்தில் இடம்பெறும் வருடாந்த கட்டண திருத்தத்தின் போது மேற்படி விலை அதிகரிப்பை மேற்கொள்ள நேரும். முறையான முறைமையொன்றை உருவாக்கி செயற்படுத்தாவிட்டால் எதிர்கொள்ள நேரும் செலவினங்களை நிவர்த்திசெய்வதற்கு மேற்படி அதிகரிப்பை மேற்கொள்ள நேரிடும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.