செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ரணில் மலையகத்துக்கும் பயணம்! – மனோ தகவல்

ரணில் மலையகத்துக்கும் பயணம்! – மனோ தகவல்

2 minutes read

“இப்போது வடக்குக்குப் போவதைப் போல், மலையகத்துக்கும் அரசியல் விஜயம் மேற்கொள்ளவுள்ளேன். அங்கே வாருங்கள் சந்திப்போம்” என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க என்னிடம் நேரடியாகக் கூறினார். வடக்கு, கிழக்குக்கு வெளியே வாழும் தமிழ் மக்களது பிரதான தலைமைக் கட்சியான எங்கள் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் எம்.பிக்கள் உங்களைக் கட்டாயம் சந்திப்பார்கள் என்று நான் அவருக்குப் பதிலளித்தேன். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மலையகத்துக்கு வந்து அங்கே என்ன சொல்ல, செய்யப் போகிறார் என்பதை தெரிந்துக்கொள்ள நானும் ஆவலாக இருக்கின்றேன்.

– இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் ஊடகங்களிடம் மேலும் கூறியதாவது:-

“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்களின் அரசியல் கோரிக்கைகள் தொடர்பிலும், இலங்கையிலேயே பின்தங்கிய பிரிவினராக ஐ.நா. சபையும், உலக வங்கியும் அறிவித்துள்ள பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதார நிலைமைகள் தொடர்பிலும் காத்திரமான காரியங்களைச் செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறேன்.

வடக்கு, கிழக்குக்கு வெளியே வாழும் தமிழர்களின் அரசியல், சமூக, பொருளாதார, கலாச்சார பிரச்சினைகளின் தள வேறுபாடுகளை இன்று ஐக்கிய நாடுகள் சபையே புரிந்துகொண்டு எம்முடன் தனியாகப் பேசுகின்றது.

இதை ஜனாதிபதியும் புரிந்துகொண்டு எம்மிடம் பேச வேண்டும் என அவரிடம் ஏற்கனவே கூறி விட்டேன்.

ஆகவே, வடக்கு, கிழக்கு வெளியே வாழும் தமிழ் மக்கள், குறிப்பாக மலையகத் தமிழ் மக்கள் தொடர்பில், பிரதான தலைமைக் கட்சியான தமிழ் முற்போக்குக் கூட்டணி நிச்சயமாக சாதகமாக நடந்துக்கொள்ளும்.

வடக்கில் ஜனாதிபதி செயலக உப காரியாலயம் ஒன்றை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திறந்து வைத்துள்ளார். நல்லது.

காணி, வீடமைப்பு, சுகாதாரம் தொடர்புகளில் பல்வேறு குழுக்களை அமைக்கப் போவதாக அறிவித்துள்ளார். இதுவும் நல்லதே.

ஆனால், இவை நடைமுறையாகி நல்லது நடக்குமானால் மாத்திரமே அங்கு வாழும் அப்பாவி தமிழ் உடன்பிறப்புகள் மகிழ்ச்சியடைவார்கள். நானும் மகிழ்ச்சியடைவேன்.

மலையகத்தில் ஜனாதிபதி ஆராய்ச்சி செய்ய வேண்டியதில்லை. ஏற்கனவே, ஐ.நா. சபை பெருந்தோட்டபுறங்களில் உணவின்மை 43 விகிதம் எனவும், உலக வங்கி பெருந்தோட்டபுறங்களில் வறுமை 53 விகிதம் எனவும் கூறியுள்ளன.

ஐ.நா. விசேட அறிக்கையாளர் டோமோயா ஒபொகடா, பெருந்தோட்டப் புறங்களில் நவீன கொத்தடிமை முறைமை இருக்கின்றது எனவும், அதுவும் தொழிலாளர் என்ற காரணத்தை தாண்டி, சிறுபான்மை தமிழர் என்பதால் நிகழ்கின்றது எனவும் அறிக்கை சமர்ப்பித்து கூறி விட்டார்.

ஆகவே, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மலையகம் வந்து, பிரச்சினைகளைத் தேடாமல், தீர்வுகளை அறிவிக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றேன். அதுதான் துன்புறும் பெருந்தோட்ட மக்களைத் திருப்தியடையச் செய்யும்.

200 வருடங்களாக உழைத்து நாட்டை உருவாக்கிய பெருந்தோட்ட மக்களின் இன்றைய நிலைமை பற்றி சர்வதேச சமூகம் சொல்லுவதைக் கேட்டு நம்நாட்டு ஜனாதிபதி பெருந்தோட்ட மக்களிடம் மன்னிப்புதான் கேட்க வேண்டும்.

அதைச் செய்யாவிட்டாலும், இனி விசேட உணவு வழங்கல் மற்றும் ஒதுக்கீட்டுத் திட்டங்களை அவர் அறிவிக்க வேண்டும் எனக் கோருகின்றேன்.

பெருந்தோட்ட மக்களின் உணவுப் பிரச்சினைகள் தொடர்பில் அரசுக்கு உதவ தாம் தயார் என ஐ.நா. சபை என்னிடம் கூறியுள்ளது. அவரிடமும் கூறி இருப்பார்கள்.

ஐ.நா. மற்றும் இந்திய நாட்டு உதவிகளைக் கோரி பெற்று பெருந்தோட்ட மக்களின் உணவு பிரச்சினைகளை முதலில் கவனியுங்கள்” – என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.