நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான தமிழரசு, ரெலோ, புளொட் ஆகியன தனித்தனியாகத் தங்களது சொந்தக் கட்சியின் சின்னங்களிலேயே போட்டியிட வேண்டும் என்று யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பில் நேற்று நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட பெரும்பான்மையான உறுப்பினர்களால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டது என்று கூட்டத்துக்குத் தலைமை தாங்கிய தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் முன்னாள் எம்.பி. பா.அரியநேத்திரன் ஆகியோர் தெரிவித்தனர்.
ஆயினும் இந்த யோசனை தொடர்பில் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான ரெலோ, புளொட் ஆகிய தலைவர்களுடன் நாளைமறுதினம் செவ்வாய்க்கிழமை (10 ஆம் திகதி) நடைபெறவுள்ள கூட்டத்தில் பேசியே இறுதித் தீர்மானம் எட்டப்படும் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் மட்டக்களப்பு – களுவாஞ்சிக்குடியில் அமைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா இந்தக் கூட்டத்துக்கு தலைமை தாங்கினார். நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், இரா.சாணக்கியன், தவராசா கலையரசன், வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம், தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளைத் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஈ.சரவணபவன், பா.அரியநேத்திரன், எஸ்.யோகேஸ்வரன் உட்பட மத்திய செயற்குழு உறுப்பினர்கள் இதில் பங்கேற்றனர். நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறீதரன் மற்றும் சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் குறித்தே இந்தக் கூட்டத்தில் அதிகம் பேசப்பட்டது.
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான தமிழரசு, ரெலோ, புளொட் ஆகியன தனித்தனியே தங்களது சொந்தக் கட்சியின் சின்னங்களிலேயே போட்டியிடுவது என்றும், ஆயினும் தேர்தல் பிரசாரத்தில் மூன்று கட்சிகளும் ஒரே மேடையில் பிரசாரத்தில் ஈடுபடுவது என்றும், இதன்போது ஒருவர் மீது ஒருவர் சேறு பூசும் பிரசாரங்களை மேற்கொள்வதில்லை என்றும், மூவரில் யாருக்காவது வாக்களிக்கலாம் என்றே கோருவது என்றும், இதன் ஊடாக தற்போதைய தேர்தல் முறைமையில் கூடிய ஆசனங்களை மூன்று கட்சிகளும் கைப்பற்றி மூன்று தரப்பும் இணைந்து ஆட்சியமைக்க வேண்டும் என்றும் கூட்டத்தில் கலந்துகொண்ட பெரும்பான்மையான உறுப்பினர்கள் யோசனை முன்வைத்தனர்.
ஆயினும் இந்த யோசனை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்தலைவர் இரா. சம்பந்தனுடனும், நாளைமறுதினம் (10) நடைபெறவுள்ள கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களின் கூட்டத்திலும் பேசியே இறுதித் தீர்மானத்தை எட்டுவது என்றும் முடிவெடுக்கப்பட்டது.