March 26, 2023 10:26 pm

யாழில் ரணிலின் பொங்கல் விழாவுக்கு எதிராகப் பேரணி! – பல்கலை மாணவர் ஒன்றியம் அழைப்பு

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

“வடக்கு, கிழக்கு வாழ் மக்களினுடைய பிரச்சினைகளுக்கு இதுவரை காலமும் தீர்வு வழங்கப்படாத நிலையில், தேசிய பொங்கல் விழாக் கொண்டாட்டத்தை யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்து, சர்வதேசத்துக்குத் தமிழர்களுடன் இணைந்திருக்கின்றோம் என்பதை வெளிப்படுத்தவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முயல்கின்றார். அதற்காகவே இந்தப் பொங்கல் விழாவுக்கு அவர் யாழ்ப்பாணம் வருகின்றார். ஜனாதிபதி யாழ். வருகின்ற போது அந்த வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அமைதி வழிப் போராட்டம் ஒன்றுக்கு அனைத்துத் தரப்பினருக்கும் அழைப்பு விடுக்கின்றோம்.”

– இவ்வாறு யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியக் கேட்போர் கூடத்தில் நேற்று மாலை இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே அமைதி வழிப் போராட்டத்துக்கான இந்த அழைப்பை மாணவர் ஒன்றியம் விடுத்துள்ளது.

இது குறித்து யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் அழகராசா விஜயகுமார் கருத்துத் தெரிவிக்கையில்,

“எங்களுடைய தமிழ் மக்கள் வடக்கு, கிழக்கு எங்கிலும் பல்வேறு பிரச்சினைகளுக்குள் சிக்குண்டு, தொடர்ச்சியாக எதுவித அரசியல் தீர்வுகளும் இன்றி, தங்களுடைய நாள் ஒவ்வொன்றையும் கழித்து வருகின்ற நிலையில் காணாமல் ஆக்கப்பட்டோர், அரசியல் கைதிகள், காணி விடுவிப்பு ,இராணுவ ஆக்கிரமிப்பு. பௌத்தமயமாக்கல் என அரசின் திட்டமிடப்பட்ட இனப்பிரச்சனைகளுக்குள் இருந்து மக்கள் இதுவரை வெளிவராத நிலையிலும், தேசிய பொங்கல் விழா ஒன்றை இந்த ஜனாதிபதி எவ்வாறான மனநிலையில் யாழ்ப்பாணத்தில் நிகழ்த்த முடியும்?

ஜனாதிபதி பொங்கல் விழாவை மேற்கொள்வதில் எங்களுக்கு எதுவித ஆட்சேபனையும் கிடையாது. தமிழர்களுக்குரிய பிரச்சினைகளுக்குரிய தீர்வு ஒன்றை வழங்கிய பின்னர் அவர் அந்தப் பொங்கல் நிகழ்வை முன்னெடுப்பதற்குத் தமிழ் மக்களாக நாங்களும் இணைந்து கொள்வோம்.

ஆகவே, முதலில் தமிழ் மக்களினுடைய பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். இது தீர்க்கப்படாது மேற்கொள்ளப்படுகின்ற இந்தப் பொங்கல் நிகழ்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து எங்களுடைய பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய கேட்போர் கூடத்தில் சிவில் அமைப்புகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடல்களுக்கு அமைவாக தீர்மானம் எடுத்துள்ளோம்.

பொங்கல் தினமான ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் இந்தப் பொங்கல் நிகழ்வு நல்லூர்ப் பகுதியில் அமைந்துள்ள சிவன் ஆலயத்தில் நடைபெற இருக்கின்ற தருணத்தில. பிற்பகல் ஒரு மணியளவில் யாழ். பல்கலைக்கழக முன்றிலில் கவனயீர்ப்புப் போராட்டம் ஆரம்பமாகி, தொடர்ச்சியாகப் பொங்கல் நிகழ்வு இடம்பெறும் இடத்துக்குச் சென்று நிறைவவடையும்.

அதே நிலையில் இந்த பொங்கல் நிகழ்வை வடக்கு, கிழக்கு மக்களின் பிரதிநிதிகளாகத் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், கட்சித் தலைமைகள் உட்பட்டவர்கள் அரசியல் பேதமின்றி முற்றாக நிராகரிப்பதோடு, எங்களுடைய இந்தச் சாத்வீகப் போராட்டத்தில் பங்குகொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கின்றோம். அனைத்து சிவில் அமைப்புக்கள், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரையும் இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றோம்” – என்றார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்