“சொல்வதைச் செயலில் காட்டும்படி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு உங்கள் நல்லுறவைப் பயன்படுத்திக் கூறுங்கள் என இலங்கை வந்த அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான பிரதி இராஜாங்கச் செயலாளர் விக்டோரியா நூலண்டிடம் தமிழ் பேசும் கட்சிகளின் தலைவர்கள் என்ற முறையில் கூறினோம்” – என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. தெரிவித்தார்.
இதுவே தமிழ், முஸ்லிம் கட்சிகளின் ஏகோபித்த நிலைப்பாடாக இருந்தது என்று தெரிவித்த மனோ கணேசன் எம்.பி., மேலும் கூறியதாவது:-
“இந்த ஜனாதிபதிக்கு எதிரணித் தலைவர் சஜித், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த, ஜே.வி.பி. தலைவர் அநுரகுமார ஆகியோரது 13 ஆவது திருத்தம் தொடர்பான சாதகமான நிலைப்பாடு இருக்கின்றது. அதைக்கூட அமுல் செய்ய அவர் தயங்குகின்றார்.
வடக்கு, கிழக்கு தமிழ் கட்சிகள், இந்திய வம்சாவளி மலையகக் கட்சிகள், முஸ்லிம் கட்சிகள் ஆகிய மூன்று தரப்புகள் இப்போது இலங்கை பிரச்சினை தொடர்பில் இருக்கின்றன. இது கடந்த கால சமாதான பேச்சு சூழலின் பின் இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றம் ஆகும். ஆகவே, இப்போது இந்த மூன்று தரப்புகளுடனும் தனித்தனியாக பேசும்படியும், அதன்பின் சர்வகட்சி மாநாட்டை நடத்தும்படியும், ஜனாதிபதிக்கு ஆலோசனையும் கூறுங்கள் என நான் அவரிடம் கூறினேன்.
இதை அனைத்து தமிழ் பேசும் கட்சிகளும் ஆமோதிக்கிறீர்களா என அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான பிரதி இராஜாங்கச் செயலாளர் விக்டோரியா நூலண்ட் எம்மிடம் வினவினார். இந்நிலையில் அனைத்து தமிழ் பேசும் கட்சி பிரதிநிதிகளும் இந்த நிலைப்பாட்டை ஆதரித்து, அனைவரிடமும் பேசச் சொல்லுங்கள் என்று கூட்டாக விக்டோரியா நூலண்ட்டிடம் தெரிவித்தனர்.
தமிழ் பேசும் கட்சிகளின் தலைவர்களின் இந்த நிலைப்பாடுகளை ஜனாதிபதிக்கு, நாடு திரும்பும் முன் தெரிவிப்பதாக விக்டோரியா நூலண்ட் எம்மிடம் உறுதியளித்தார்.
தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளைப் படிபடியாக ஆராய்ந்து தீர்வு காணும் செயன்முறை அமுலாக வேண்டும். அதற்கு அமெரிக்கா துணை இருக்கும் என விக்டோரியா நூலண்ட் எம்மிடம் கூறினார்” – என்றார்.