June 8, 2023 6:51 am

நாளை இலங்கை முற்றாகச் செயலிழக்கும் நிலை!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

அரசின் புதிய வரி கொள்கைக்கு எதிராக இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அஞ்சல் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

அத்துடன், நாளை காலை 9 மணி முதல் சட்டப்படி வேலைசெய்யும் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக, இலங்கை மின்சார சபை தொழிற்சங்கக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

மேலும், திட்டமிட்டபடி இன்று நள்ளிரவு முதல் ஒருநாள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக ரயில்வே தொழிற்சங்கக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

அதன்படி, 5 கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக ரயில்வே தொழிற்சங்கக் கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது.

ரயில்வே ஒழுங்குபடுத்தல் சேவையாளர்கள், ரயில்வே நிலைய அதிபர்கள், இயந்திர சாரதிகள், தொழில்நுட்பவியலாளர்கள் உள்ளிட்ட பலர் இந்தப் பணிப்புறக்கணிப்புக்கு ஆதரவளிக்கவுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, அகில இலங்கை தாதியர் சங்கம், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தொழிற்சங்கக் கூட்டமைப்பு, அகில இலங்கை பொதுத் துறைமுக ஊழியர் சங்கம், இலங்கை வங்கி ஊழியர் சங்கம், அரச மற்றும் அரச ஆதரவு தொழிற்சங்கக் கூட்டு, ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் தொழிற்சங்கக் கூட்டமைப்பும் இந்த வாரம் எதிர்ப்புகள் மற்றும் வேலைநிறுத்தங்களைத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில், நேற்று முதல் துறைமுக அதிகாரசபை ஊழியர்கள் ஆரம்பித்துள்ள 48 மணி நேர சட்டப்படி வேலை தொழிற்சங்க நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மேலும் நேற்று தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட 4 மாகாணங்கள் தவிர்ந்த ஏனைய 5 மாகாணங்களில் இன்று தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது என்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இன்றைய தினத்துக்குள் தீர்வு வழங்கப்படாவிட்டால் நாளைய தினம் சகல மாகாணங்களில் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்றும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய மற்றும் ஊடகக்குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் அறிவித்துள்ளார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்