May 31, 2023 5:27 pm

வெடுக்குநாறி ஆலயத்தில் கைது செய்யப்பட்ட மூவரும் விடுதலை!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

வவுனியா, நெடுங்கேணி – வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலயத்தில் விக்கிரங்களை மீள பிரதிஷ்டை செய்வதற்கான வேலைகளில் ஈடுபட்ட போது கைது செய்யப்பட்ட மூவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்றும், அமைச்சர்களின் பங்குபற்றுதலுடன் இது தொடர்பில் தீர்க்கமான முடிவு நாளை (02) எடுக்கப்படும் என்றும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான கு.திலீபன் தெரிவித்தார்.

வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலயத்தில் விக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்வது தொடர்பில் கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“வெடுக்குநாறி மலையில் ஆதி சிவன் ஆலய விக்கிரகத்தையும் உடைக்கப்பட்ட ஏனைய விக்கிரகங்களையும் நாளை ஞாயிற்றுக்கிழமை மீள பிரதிஷ்டை செய்வதற்கான நடவடிக்கைகளை ஆலய நிர்வாகத்தினர் முன்னெடுத்திருந்தனர். அதனடிப்படையில் அதற்கான வேலைகள் இன்று காலையில் இருந்து நடைபெற்றன. அங்கு வந்த தொல்பொருள் திணைக்களத்தினர் அங்கு வேலை செய்து கொண்டிருந்தவர்கள் தொல்பொருள் சின்னங்களைச் சேதப்படுத்துகின்றனர் என்று பொலிஸாருக்கு எழுத்து மூலம் வழங்கிய முறைப்பாட்டையடுத்து பொலிஸார் மூவரைக் கைது செய்தனர்.

அத்துடன், பிள்ளையார், முருகன் உள்ளிட்ட ஏனைய விக்கிரகங்களையும் எடுத்துச் செல்ல முற்பட்டனர். நான் ஆலயத்தில் நின்றமையால் விக்கிரங்களை எடுத்துச் செல்ல அனுமதிக்கவில்லை.

பொலிஸாருடன் கடுமையாகத் தர்க்கத்தில் ஈடுபட்டு ஒரு தொகுதி விக்கிரகங்களை அங்கிருந்து எனது வாகனத்தில் கொண்டு வந்து வேறு ஒரு ஆலயத்தில் தற்காலிகமாக வைத்துள்ளோம்.

கைது செய்யப்பட்டவர்களை விடுவிப்பது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடனும், அவர் ஊடாக பொலிஸ்மா அதிபர் ஆகியோருடனும் பேசியிருந்தேன். நீண்ட இழுபறியின் பின் கைது செய்யப்பட்ட மூவரும் விடுவிக்கப்பட்டனர்.

அமைச்சர்களான டக்னளஸ் தேவானந்தா, ஜீவன் தொண்டமான் மற்றும் வடக்கு மாகண பிரதிப் பொலிஸ்மா அதிபர் உள்ளிட்டோர் வெடுக்குநாறி மலைக்கு நாளை (02) வருகை தரவுள்ளனர். இதன்போது குறித்த ஆலய பிரதிஷ்டை தொடர்பில் தீர்க்கமான முடிவு எட்டப்பட்டு ஆலய பிரதிஷ்டை விரைவாக இடம்பெறும்” – என்றார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்