December 2, 2023 4:56 pm

13 ஐ உடன் அமுல்படுத்த வேண்டும்! – விக்கி வலியுறுத்து

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
“இலங்கை அரசின் அனுசரணையோடு தமிழ் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் 13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தி மாகாண சபைகளை உருவாக்கி அதிகாரங்களை வழங்க வேண்டியது முன்னரை விடவும் இப்போது மிக அவசியமாகும்.”

– இவ்வாறு தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இந்த 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்த வேண்டுமென இந்தியாவும், அமுல்படுத்தப் போவதாக இலங்கையும் தெரிவித்திருந்த நிலையில் அதற்காக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் தாமதம் ஏற்படுவதால் இந்த விடயத்தில் இந்தியா கரிசனைகொள்ள வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

13 ஆவது திருத்த அமுலாக்கம் தொடர்பில் யாழ்ப்பாணத்திலுள்ள தமது கட்சி அலுவலகத்தில் இன்று நடத்திய கலந்துரையாடலின் பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“13ஆவது திருத்தச் சட்ட அமுலாக்கம் தொடர்பாக ஐனாதிபதியுடன் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்ட பலரும் இன்று என்னையும் சந்தித்துக் கலந்துரையாடி இருக்கின்றனர்.

குறிப்பாக 13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த  வேண்டும் என்கின்றபோது அந்தச் சட்டத்தில் இருந்து பறிக்கப்பட்ட அதிகாரங்களைத் திரும்பப் பெற வேண்டியது மிகவும் அவசியம்.

இதனடிப்படையில் பறிக்கப்பட்ட அதிகாரங்களைத் தொடர்ந்தும் எப்படி மீள எடுப்பது சம்பந்தமான நடவடிக்கைகளில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம். அதற்கமைய இன்றும் நாங்கள் தொடர்ந்து பேசி இருக்கின்றோம்.

கடந்த செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி இது சம்பந்தமாக விசாரணை செய்வதற்கான குழுவை வர்த்தமானி மூலம்  பிரசுரிப்பதாகச் சொல்லப்பட்டது. எனினும், அது வெளிவராத நிலையில் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதிக்கு என்று பின்னர் அறிவிக்கப்பட்டிருந்த்து.

இதற்கிடையில் ஜனாதிபதி வெளிநாடுகளுக்குச் சென்று விட்டார். இதனால் எங்களுக்குத் தாமதம் ஏற்படுவதால் இது சம்பந்தமான நிபுணர் குழுவின் ஊடாக எவ்வாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆராய்ந்திருக்கின்றோம். எனினும், நிபுணர்கள் குழு தீர்மானித்து அரசுக்கு அறிவுரை வழங்குவது தாமதமாகிக் கொண்டிருக்கின்றது.

ஆகவே, இதிலேயே இனியும் தாமதம் ஏற்படக்கூடாது என்ற காரணத்துக்காக நாங்கள் இது சம்பந்தமாக என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் தொடர்பில் இன்று பேசிக் கொண்டோம்.

முக்கியமாக இந்தச் சட்டத்தில் இருந்து பறிபோன அந்த அதிகாரங்களைத் திரும்பப் பெற வேண்டிய அவசியம் எங்களுக்கு இருக்கின்றது. அதனை இந்தியாவும் கருத்தில் எடுத்துக்கொண்டு இருக்கின்றபடியால் இது சம்பந்தமாக இந்தியாவும் தன்னுடைய கருத்தைத் தெரிவிக்க வேண்டும் என்ற ஒரு எண்ணம் எங்களுக்கு இருக்கின்றது.

ஆனால், ஜனாதிபதியினுடைய எண்ணங்கள் எவ்வாறு இருக்கின்றன என்பது பற்றி எங்களுக்குத் தெரியவில்லை.  ஆயினும் அவர் தனக்குப் பதிலாக இங்கு இருக்கும் மற்றைய அலுவலர்கள் அல்லது அரசியல்வாதிகள் ஊடாக அதற்குரிய நடவடிக்கைகளை எடுக்கக்கூடும்.

இந்த 13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தி மாகாண சபைகளை உருவாக்க வேண்டிய அவசியம் எப்போதும் இல்லாததைப் பார்க்கவும் இப்போது மிக மிக அதிகமாகியிருக்கின்றது.

குறிப்பாக தமிழ் மக்களுடைய சகல அதிகாரங்களும் குறைந்து குறைந்து கொண்டு வருகின்றன. அரசின் அனுசரணையோடு தமிழ் மக்களுக்கு எதிரான அல்லது ஏற்றுக்கொள்ள முடியாதவாறு பலவிதமான நடவடிக்கைகள்  முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக தமிழ் மக்களின் காணிகள் அபகரிப்பு உள்ளிட்ட அதிகாரங்களின் அபகரிப்பு என்பன தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன.

ஆகவே, இவற்றை நாங்கள் தடுத்து நிறுத்தி தமிழ் மக்களுடைய அதிகாரங்களைப் பலப்படுத்துவதற்கு முதல் கட்டமாக மாகாண சபைகள் அமைக்கப் பெறுவது அவசியம்.

அதற்குரிய நடவடிக்கைகள் எவ்வாறு எடுக்க வேண்டும் என்பது சம்பந்தமாக நாங்கள் ஆராய்ந்துள்ளோம். இன்றைய தினம் இவை பற்றி பலவிதமான கோணங்களில் நாங்கள் பேசியும் இருக்கின்றோம்.

விசேடமாக அரசியல் யாப்பில் எந்தெந்த உறுப்புரைகளின் அடிப்படையிலேயே இவற்றை நாங்கள் முன்னெடுக்க வேண்டும் என்பது தொடர்பில் முக்கியமாக 154 ரி இனுடைய ஏற்பாடுகளை நாங்கள் பரீட்சிர்த்துப் பார்த்தோம்.

இதில் முக்கியமாக யாழ். பல்கலைக்கழக சட்டத்துறை தலைவியான கோசலை மதனும் வந்திருந்து அவரும் இது சம்பந்தமாக தன்னுடைய கருத்துக்களைத் தெரிவித்திருந்தார்.

ஆகவே 13ஆவது திருத்தச் சட்ட அமுலாக்கம் சம்பந்தமாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் அந்தத் திருத்தத்தில் இருந்து பறிக்கப்பட்ட அதிகாரங்களை மீளப் பெறுவதற்கு நாங்கள் என்னென்ன செய்ய வேண்டும் என்பது பற்றியும் அரசினுடைய அனுசரணை இது சம்பந்தமாகப் பெற வேண்டும் என்பது பற்றியும் இந்தியாவினுடைய கரிசனையை இதற்குப் பெற வேண்டும் என்பது சம்பந்தமாகவும் நாங்கள் பேசிக்கொண்டோம்.” – என்றார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்