வடக்கு, கிழக்கிலே இருக்கும் உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி நிர்வாகங்களை அமைப்பது தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இரு தலைவர்களுக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் இரு தலைவர்களுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுகளில் கொள்கை ரீதியான இணக்கப்பாடு எதுவும் உடன்பாடாக எட்டப்படவில்லை. ஆனால், இந்த விடயத்தில் இரு தரப்புகளும் இணங்கிச் செயற்படுவோம் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் உறுதிபடத் தெரிவித்தார்.
”வடக்கு, கிழக்கிலே இருக்கும் உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி நிர்வாகங்களை அமைப்பது தொடர்பில் தமிழரசுக் கட்சியினரின் நிலைப்பாடும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னியினரின் நிலைப்பாடும் ஏறத்தாழ ஒரே நிலைப்பாடாக இருக்கின்ற காரணத்தால் அந்த அடப்படையிலேயேதான் சபைகள் அமைக்கப்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம். அல்லது அதனை உறுதியாகச் சொல்லலாம். இதை ஓர் இணக்கப்பாடாக அறிவிக்க அவர்கள் விரும்பவில்லை. ஆகையினாலே இணக்கப்பாடு இல்லை என்றே வைத்துக் கொள்ளலாம். ஆனால், இணங்கியிருக்கின்றோம்.” – என்றும் சுமந்திரன் குறிப்பிட்டார்.
யாழ். தாவடியில் அமைந்துள்ள பொக்ஸ் விடுதியில் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் இடையில் நேற்று மாலை இரண்டு மணித்தியாலங்கள் நடைபெற்ற பேச்சின் நிறைவில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே சுமந்திரன் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இலங்கைத் தமிழசுக் கட்சிக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் இடையில் மாலை 5.30 மணி முதல் 7.30 மணி வரை நீண்ட பேச்சு இடம்பெற்றது. இந்தப் பேச்சு தற்போது முடிந்திருக்கின்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் நிர்வாகங்களை அமைப்பது சம்பந்தமான பேச்சு. அது உருவாகுவதற்கக் காரணம் தேர்தல் முடிந்த கையோடு நாங்கள் எங்களுடைய நிலைப்பாடு ஒன்றை வெளிப்படையாகச் சொல்லியிருந்தோம். அதாவது ஒவ்வொரு சபைகளிலும் எந்தக் கட்சிக்கு அதிகூடிய உறுப்பினர்கள் இருக்கின்றனரோ அந்தக் கட்சி அந்தச் சபையிலே நிர்வாகங்களை அமைப்பதற்கு மற்றக் கட்சிகள் ஆதரவு வழங்க வேண்டும் என்று சொல்லியிருந்தோம். இந்தப் பொதுவான கோட்பாட்டை நாங்கள் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியுடனும் இரண்டு சுற்றுப் பேச்சுகளின்போது பேசியிருக்கின்றோம். பொதுவாக அவர்களும் அதற்கு இணக்கம் தெரிவித்திருக்கின்றார்கள்.
ஒரு கட்சிக்கு ஆட்சி அமைக்க மற்றுமொரு கட்சி ஆதரவளிக்கின்றபோது அந்தச் சபையிலே மற்றக் கட்சிக்குக் கணிசமான ஆசனங்கள் இருந்தால் அவர்களுக்குப் பிரதி தவிசாளர் பதவி கொடுக்கப்படும் என நாங்கள் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியுடன் ஏற்றுக்கொண்ட ஒரு விடயம். அப்படியெனில் இலங்கைத் தமிழரசுக் கட்சி வடக்கு, கிழக்கிலே 35 இற்கும் மேற்பட்ட சபைகளில் ஆட்சி அமைக்கும். ஆனால், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணிக்கு வவுனியா மாநகர சபையில் மட்டும்தான் அவர்களின் பிரதிநிதி ஒருவர்மேயராக வரக்கூடிய சந்தர்ப்பம் இருந்தது. இதனால் ஓர் நல்லெண்ண சமிக்கையாக மேலும் நான்கு சபைகளில் தங்களுக்குத் தவிசாளர் பதவிகளை வழங்க முடியுமா என்று அவர்கள் கேட்டிருந்தார்கள். நாங்கள் அது சம்பந்தமாக ஆராய்கின்றோம், எமது கட்சியில் அரசியல் குழுவில் இது தொடர்பில் ஒரு தீர்மானம் எடுக்கப்பட வேண்டும் என அவர்களுக்குச் சொல்லியிருக்கின்றோம். சில வேளைகளிலே அப்படியான ஒரு சந்தர்ப்பம் ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது. ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணிக்கு நாங்கள் அந்த விடயத்தைச் சொல்லியுள்ளோம்.
இந்தச் சூழலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தானாக ஓர் அறிவிப்பை விடுத்திருந்தார். அதாவது நாங்கள் சொன்ன அதே நிலைப்பாட்டை அவர் தெரிவித்திருந்தார். எந்தச் சபையில் எந்தக் கட்சிக்கு அதிகூடிய ஆசனங்கள் இருக்கின்றதோ அங்கே அந்தக் கட்சி ஆட்சி அமைக்கத் தாங்கள் ஆதரவு வழங்குவோம் என்று அவர் அறிவித்திருந்தார்.
இணக்கப்பாட்டோடு சேர்ந்து இயங்குவதாக இருந்தால் கொள்கை அளவிலே முழுமையாக ஏற்பட வேண்டும் என்றும் அவர் சொல்லியிருக்கின்றார். நிர்வாகங்கள் அமைப்பதிலே அவர்களுடைய நிலைப்பாடும் நாங்கள் ஏற்கனவே அறிவித்திருந்த நிலைப்பாடும் (ஏற்கனவே எனச் சொல்கின்றபோது இந்தத் தடவை மட்டுமல்ல 2018 இலும் நாங்கள் இதே நிலைப்பாட்டையே அறிவித்திருந்தோம்) ஒரே மாதிரியான நிலைப்பாடாக இருந்த காரணத்தினால்தான் எங்களுடைய கட்சியில் தலைவர் அவர்களோடு இது தொடர்பில் பேச வேண்டும் என்று அழைத்தபோது அவர்கள் உடனடியாக அதற்கு இணங்கி எங்களோடு பேசுவதற்கு வந்திருக்கின்றார்கள். அப்படியாக எந்தவிதமான மறுப்பும் இல்லாமல் தயக்கமும் இல்லாமல் பேச வந்தமைக்காக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் அவர்களுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கின்றோம். எமது கட்சியின் தலைவர் கூட்ட ஆரம்பத்திலேயே இதனை அவர்களுக்குத் தெரிவித்தார்.
நாங்கள் பேசியபோது அவர்கள் தங்களது தனிப்பட்ட நிலைப்பாடாக அதனை அறிவித்ததாகச் சொன்னார்கள். அது எங்களுக்குத் தெரியும். கடந்த புதன்கிழமை ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியினருடன் இடம்பெற்ற பேச்சின்போதும் அதையே தாங்கள் சொன்னதாக எங்களுக்குச் சொன்னார்கள். ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியினரும் எங்களுக்கு அதையேதான் அறவித்திருக்கின்றார்கள்.
இப்போது வடக்கு, கிழக்கிலே இருக்கின்ற சபைகளில் நிர்வாகங்கள் அமைப்பதில் எங்களுடைய நிலைப்பாடும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரின் நிலைப்பாடும் ஏறத்தாள ஒரே நிலைப்பாடாக இருக்கின்ற காரணத்தால் அந்த அடிப்படையிலேயேதான் சபைகள் அமைக்கப்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம் அல்லது உறுதியாகச் சொல்லலாம். இதை ஓர் இணக்கப்பாடாக அறிவிக்க அவர்கள் விரும்பவில்லை. ஆகையினாலே இணக்கப்பாடு இல்லை என்றே வைத்துக்கொள்ளலாம். ஆனால் இணங்கியிருக்கின்றோம்.
கொள்கை விடயங்கள் சம்பந்தமாக நாங்கள் இன்று பெரிதாகப் பேசிக்கொள்ளவில்லை. ஆனாலும், ஓரளவு மக்கள் நலன் சார்ந்து, தமிழ் மக்களின் எதிர்காலம் சார்ந்து எமது கட்சியின் தலைவர் அவர்களிடத்தில் ஒரு கோரிக்கையை முன்வைத்தார். நாங்கள் இணங்கிச் செயற்படுவதற்கான வழிவகைகளை ஆராய வேண்டும் எனச் சொன்னபோது அவர்கள் அதற்குப் பெரிதாக மறுப்புத் தெரிவிக்கவில்லை.
இந்தப் பேச்சின் அடிப்படையை எங்களது மத்திய செயற்குழுவுக்கும், அரசியல் குழுவுக்கும் தெரிவிப்போம். நாங்கள் ஒரு முடிவை எடுத்து எதிர்வரும் நாள்களில் தமிழ்த் தேசிய முன்னணியினரோடும், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியுடனும் ஒருமித்த ஒரு நிலைப்பாட்டுக்கு இணங்குவதை ஒரு குறிக்கோளாக வைத்து பேச்சுகளில் ஈடுபடுவதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம்.” – என்றார்.