செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை சைக்கிள் – சங்கு கொள்கை ஒப்பந்தம்! – யாழில் இன்று கைச்சாத்து (படங்கள் இணைப்பு)

சைக்கிள் – சங்கு கொள்கை ஒப்பந்தம்! – யாழில் இன்று கைச்சாத்து (படங்கள் இணைப்பு)

3 minutes read

தமிழ்த் தேசியப் பேரவைக்கும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணிக்கும் இடையிலான கொள்கை ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்பட்டது.

யாழ்ப்பாணம் நகரில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் வைத்து இன்று பிற்பகல் 12.45 மணியளவில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

தமிழ்த் தேசியப் பேரவையின் சார்பில் அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் சார்பில் அதன் செயலாளர் நாகலிங்கம் இரட்ணலிங்கமும் கையொப்பமிட்டனர்.

ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வில் தமிழ்த் தேசியப் பேரவையின் சார்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன், ந.சிறீகாந்தா, பொ.ஐங்கரநேசன், எம்.கே.சிவாஜிலிங்கம், ஈ.சரவணபவன், க.அருந்தவபாலன், க.நாவலன் ஆகியோரும், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் சார்பில் தர்மலிங்கம் சித்தார்த்தன், கோவிந்தன் கருணாகரம், சுரேஷ் பிரேமச்சந்திரன், முருகேசு சந்திரகுமார், நாகலிங்கம் இரட்ணலிங்கம், பா.கஜதீபன், க.சர்வேஸ்வரா உள்ளிட்டோரும் கலந்துகொண்டிருந்தனர்.

தமிழ்த் தேசியப் பேரவை, ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி ஆகிய தரப்புக்களிடையே தொடர்ச்சியாக நடைபெற்ற சந்திப்புக்களைத் தொடர்ந்து இன்று இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“சுதந்திர இலங்கைத் தீவில் கடந்த 77 ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழர் தேசம் தனது அரசியல் அபிலாஷைகளைத் திருப்திப்படுத்தும் விதத்திலும் தன்னுடைய தனித்துவம், பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கிலும், வடக்கு, கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய தனது மரபுவழித் தாயகத்தில் ஒரு தனியான தேசம் என்ற அடிப்படையில் தனது பிறப்புரிமையான சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தனது விவகாரங்களைத் தானே கையாளக்கூடிய விதத்திலும் தனது சுதந்திரத்தை நிலைநிறுத்தும் வகையிலும் பூரண பொறுப்பு வாய்ந்த ஒரு சுயாட்சி அரசியல் ஆட்சி முறையைப் பெற்றுக்கொள்வதற்கு உரித்துடையது என்ற யதார்த்தத்தின் அடிப்படையிலும், இந்த இலக்கினை அடைவதற்கு தமிழ்த் தேசத்தினால் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வந்திருக்கும் ஒற்றையாட்சி எனப்படும் அரசியல் ஆட்சி முறையின் எந்தவொரு ஏற்பாட்டின் கீழும் அறவே இடமில்லை என்பதுடன் பூரண சுயாட்சி அதிகாரம் கொண்ட அரசு ஒன்றினை, தமிழ்த் தேசத்தின் மரபுவழித் தாயகத்தில், இலங்கைத் தீவு என்ற யாதார்த்த ரீதியான வரையறைக்குள் ஏற்படுத்துவதற்கு, ஒற்றுமையாகவும் உறுதியாகவும் பாடுபட நாம் தீர்மானித்துள்ளோம் என்பதையும் பிரகடனப்படுத்துகின்றோம்.

இலங்கைத் தீவில் இனப்பிரச்சினைக்கு நிலையானதும் நீதியானதுமான அரசியல் தீர்வு என்பது ஒரு புதிய அரசியல் சாசனத்தை திட்டவட்டமானதும் தெளிவானதுமான முறையில் உள்ளடக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுவதற்கு ஏதுவாக, தமிழ்த் தேசத்தின் அரசியல் ஒற்றுமையை தமிழ்த் தேசியச் சக்திகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில், இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்த் தேசியப் பேரவைக்கும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணிக்கும் இடையில் பின்வரும் அம்சங்களை உள்ளடக்கி ஏற்படுத்தப்படுகின்றது.

1. தமிழ் மக்களின் பிறப்புரிமையான சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலும் தமிழ்த் தேசத்தின் இறைமையின் பாற்பட்டும் வடக்கு, கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய மரபுவழித் தாயகத்தில், ஒரு பூரணமான சம்ஷ்டி ஆட்சி முறை, அரசியல் சாசன ரீதியாக ஏற்படுத்தப்படுவதே தமிழ்த் தேசத்தின் இறைமையை ஏற்பதாகவும் தியாகம் செறிந்ததுமான நீண்ட விடுதலைப் போராட்டத்தின் அர்த்தமுள்ள அங்கீகாரமாகவும் இருக்க முடியும் என்பதை நாங்கள் வலியுறுத்தி நிற்கின்றோம். மேலும், தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட எமது முஸ்லிம் சகோதரர்களின் உரிமைகளையும் அபிலாஷைகளையும் நிலைநிறுத்தும் விதத்தில் அரசியல் சாசன ரீதியானவையும், வலுவானவையுமான அரசியல் நிர்வாக ஏற்பாடுகள், முஸ்லிம் சமூகத்தின் சம்மதத்துடனும் இணக்கப்பாட்டுடனும் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதையும் நாங்கள் வலியுறுத்துகின்றோம்.

2. அரசியல் யாப்புக்கான 13 ஆவது திருத்தம் என்பது தமிழ்த் தேசிய இனப்பிரச்சினைக்கான முழுமையானதோ, இறுதியானதோ தீர்வு அல்ல என்பதனைச் சுட்டிக்காட்டுகின்றோம்.

3. கடந்த 2015 ஆம் ஆண்டு பதவிக்கு வந்த அரசின் அரசியல் நிர்ணய சபையினால் உருவாக்கப்பட்ட அரசியல் சாசன வரைபு என்பது, ஒற்றையாட்சிக்கு உட்பட்டது என்ற காரணத்தால் தமிழ்த் தேசத்தின் சுயாட்சிக்கு இடமளிக்கப்படவில்லை என்ற அடிப்படையில் அதனை நாங்கள் ஏற்கனவே நிராகரித்துள்ளோம் என்பதனை இரு தரப்பினரும் வெளிப்படுத்துகின்றோம்.

4. போரின் போதும் அதற்குப் பின்னும் இழைக்கப்பட்ட மற்றும் இழைக்கப்பட்டுக்கொண்டிருக்கும் இனப்படுகொலை, யுத்தக் குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பில், உள்ளகப் பொறிமுறைகளை முழுமையாக நிராகரித்துச் சர்வதேசக் குற்றவியல் விசாரணை ஒன்று அவசியமானது என்பதனை இரு தரப்பினரும் வெளிப்படுத்துகின்றோம்.

5. இந்த இலட்சியப் பயணத்தில் தமிழ்த் தேசத்தின் நலனை விரும்பும் சகல தமிழ்த் தேசிய சக்திகளும் நேர்மையாகவும், விரைவாகவும் இணைத்துக் கொள்ளப்படுவதற்குச் சாத்தியமான சகல முயற்சிகளும் எடுக்கப்படவேண்டும் என்பதையும் நாம் வலியுறுத்துகின்றோம்.

6. இந்த அடிப்படையில் பிரதிநிதித்துவ ஆட்சி முறை ஒன்றின் கீழ் கிடைக்கும் சகல சந்தர்ப்பங்களையும் வாய்ப்புகளையும், தமிழ்த் தேசியம் சார்ந்து நேர்மையாக செயற்படும் சக்திகள் ஒன்றிணைந்து பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதையும், அதே நேரத்தில் இலங்கைக்கு வெளியே வாழ்ந்துகொண்டிருக்கும் புலம்பெயர் ஈழத் தமிழர்கள் மற்றும் பரந்த தமிழர் சமுதாயத்தின் பல்வேறு தரப்பினரதும் ஒருமித்த ஆதரவு பெற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்றும் நாங்கள் விரும்புகின்றோம். இந்த அடிப்படையில் இந்த முயற்சிகளுக்கு எமது மக்கள் அனைவரினதும் ஆதரவையம் ஒத்துழைப்பையும், பங்களிப்பையும் நாங்கள் நாடி நிற்கின்றோம்.

7. தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை வலியுறுத்துவதிலும் அரசியல் சாசன ரீதியாக அவற்றை நிலைநாட்டிக் கொள்வதிலும் தமிழ் மக்கள் நேர்மையாகவும் உறுதியாகவும் தொடர்ந்து செயற்பட்டு வந்துள்ளனர். தமிழ் மக்களின் முழுமையான அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் முகமாக எதிர்காலத்தில் நேர்மையுடனும் கொள்கை உறுதியுடனும் தமிழர் தேசத்தின் அரசியல் செயற்பாடு தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டும். இதற்காக ஏற்கனவே பல்வேறு தமிழ்த் தேசியக் கட்சிகளும் வெகுசன அமைப்புகளும் ஒருங்கிணைந்து, மக்களின் பங்கேற்புடன் தயாரித்து 2016 ம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் திகதி வெளியிடப்பட்ட தீர்வுத் திட்டத்தை அடிப்படையாகக் கொள்ள முடியும் என நாம் கருதுகின்றோம்.

8. இந்தக் குறிக்கோளை ஜனநாயக ரீதியான செயற்பாடுகளாலும், மக்கள் எழுச்சியினாலுமே சாதிக்க முடியும் என்பதை நாங்கள் வலியுறுத்தி, ஒரு பரந்த ஜனநாயக அரசியல் கட்டமைப்பாகவும், இந்த இலக்கினை முன்வைத்து சகல தமிழ்த் தேசியச் சக்திகளையும் ஒன்றிணைத்துச் சாத்தியமான விதத்தில் ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்கும், அதை முன்னெடுத்துச் செல்வதற்கும் எமது மக்களின் ஆதரவை நாடி நிற்கின்றோம்.

9. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடும் இரண்டு தரப்பினரும் எதிர்காலத்தில் தமிழ் மக்களின் விடுதலை கருதி ஓரணியாகச் செயற்படுவோம் என்பதனையும் வெளிப்படுத்துகின்றோம்.” – என்றுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More