மட்டக்களப்பு – ஆரையம்பதி பிரதான வீதியில் நேற்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
காத்தான்குடி பொலிஸ் பிரிவின் தாழங்குடா பகுதியில் இரவு 11 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்துக்குள்ளான வான், கல்முனை – மட்டக்களப்பு பிரதான வீதி வழியாகப் பயணித்து வந்ததுடன், அதே வழியில் எதிர்த்திசையில் வந்த மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதியுள்ளது.
விபத்தின்போது மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற இளைஞர் உயிரிழந்துள்ளார்.
புதிய காத்தான்குடி – 06, இராசா ஆலிம் வீதி, அல் அமீன் வீதி, (தோணா சந்தி) எனும் முகவரியைச் சேர்ந்த அப்துஸ்லாம் அப்துல்லாஹ் (21 வயது) என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.
அவருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்றுமொரு இளைஞர் தீவிர காயங்களுடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்தையடுத்து காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.