செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை உள்ளூராட்சித் தேர்தலின் பின் தமிழ்க் கட்சிகளின் நகர்வு என்ன? – சுமந்திரனிடம் கேட்டறிந்த இந்தியத் தூதுவர்

உள்ளூராட்சித் தேர்தலின் பின் தமிழ்க் கட்சிகளின் நகர்வு என்ன? – சுமந்திரனிடம் கேட்டறிந்த இந்தியத் தூதுவர்

1 minutes read

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பொருளாதார அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்குத் தாம் மிகுந்த ஆர்வம் கொண்டிருப்பதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரனிடம் தெரிவித்துள்ள இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா, தமிழ்த் தேசியக் கட்சிகளின் சமகால அரசியல் நகர்வுகள் தொடர்பில் கேட்டறிந்துள்ளார்.

இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜாவுக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரனுக்கும் இடையிலான சந்திப்பு கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் நடைபெற்றது.

இந்தச் சந்திப்பின்போது வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தித்திட்டங்கள் மற்றும் அவற்றின் நிலைவரம் என்பன தொடர்பில் கேட்டறிந்த இந்தியத் தூதுவர், தாம் அம்மாகாணங்களில் பொருளாதார அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்கு மிகுந்த ஆர்வம் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார். அதுமாத்திரமன்றி அவ்வாறான திட்டங்கள் குறித்த முன்மொழிவுகள் இருப்பின், அதனைத் தம்மிடம் வழங்குமாறும், அது பற்றி அரசுடன் பேசுவதற்குத் தாம் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதேவேளை உள்ளூராட்சி சபைத் தேர்தல்களின் பின்னரான தமிழ்த் தேசியக் கட்சிகளின் அரசியல் நகர்வுகள் தொடர்பில் கேள்வி எழுப்பிய இந்தியத் தூதுவருக்குப் பதிலளித்த சுமந்திரன், ஒவ்வொரு உள்ளூராட்சி சபையிலும் அதிகூடிய ஆசனங்களைப் பெற்ற கட்சி ஆட்சியமைப்பதற்கு ஏனைய கட்சிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்ற கோட்பாட்டைத் தாம் முன்வைத்ததாகவும், இருப்பினும் அதற்கு முரணாக இரண்டு ட்சிகள் கூட்டணி அமைத்து தம் வசமே அதிக ஆசனங்கள் இருப்பது போல் காண்பித்துக்கொள்வதாகவும் சுட்டிக்காட்டினார்.

அத்தோடு சகல தமிழ்த் தேசியக் கட்சிகளும் ஒரே கொள்கையையே கொண்டிருப்பதாகவும், அணுகுமுறைகளே மாறுபட்டவையாகக் காணப்படுவதாகவும் தெரிவித்த சுமந்திரன், இருப்பினும் அதனைத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மறுப்பதற்கான காரணம் தனக்குத் தெரியவில்லை எனவும் விசனம் வெளியிட்டார்.

அதேவேளை புதிய அரசமைப்பு உருவாக்கத்தைப் பொறுத்தமட்டில் 2015 – 2019 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் தாம் தயாரித்த அரசமைப்பு வரைவு சிறந்த பல கூறுகளைக் கொண்டிருப்பதாக இந்தியத் தூதுவரிடம் எடுத்துரைத்த சுமந்திரன், அதிலுள்ள குறைபாடுகள் பற்றி சகலரும் ஒன்றிணைந்து கலந்துரையாடி திருத்தங்களை மேற்கொள்வதற்குப் பதிலாக, அதனை முற்றாக நிராகரிக்க வேண்டும் என கஜேந்திரகுமார் கூறி வருவது ஏற்புடையதன்று என்றும் தெரிவித்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More