செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை பழைய முறையிலாவது மாகாணசபை தேர்தலை நடத்த வேண்டும் | கட்சிகள் வலியுறுத்தல்

பழைய முறையிலாவது மாகாணசபை தேர்தலை நடத்த வேண்டும் | கட்சிகள் வலியுறுத்தல்

3 minutes read

இடை நிறுத்தப்பட்டிருக்கும் மாகாணசபை தேர்தலை தற்காலிகமாகவேனும் பழைய முறையில் நடத்தி மாகாணசபையை அமைக்க வேண்டும். அதன் பின்னர் புதிய சட்டம் தொடர்பில் கலந்துரையாடலாம் என அனைத்து அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் ஏகமனதாக  வலியுறுத்தினர்.

மாகாணசபை தேர்தலை விரைவாக நடத்துவது மற்றும் தேர்தலை எந்த முறையில் நடத்துவது தொடர்பில் அரசியல் கட்சிகளுடனான கலந்துரையாடல் ஒன்று நேற்று கொழும்பில் இடம்பெற்றது. பெப்ரல் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த கலந்துரையாடலில் அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் என பலர் கலந்துகொண்டிருந்தனர். இதில் கருத்து தெரிவிக்கையிலேயே அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் இவ்வாறு ஏகமனதாக தெரிவித்தனர்.

அங்கு கருத்து தெரிவித்த பொதுஜன ஐக்கிய முன்னணியின் செயலாளர் லசன்த் அலகியவண்ண குறிப்பிடுகையில்,

மாகாணசபை தேர்தல் இடம்பெறாமல் தாமதிப்பதற்கு எங்களால் ஏற்பட்ட தவறுகளும் காரணமாக இருக்கலாம். அதனாலே மக்கள் எங்களை நிராகரித்து, மாகாணசபை தேர்தலை விரைவாக நடத்துவதாக தெரிவித்த, இந்த அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவந்தார்கள். அதனால் தொடர்ந்தும் தாமதிக்காமல் மாகாண சபை தேர்தலை தற்காலிகமாகவேனும் பழைய முறையில் நடத்தி,  பின்னர் புதிய தேர்தல் முறை தொடர்பில் காலம் எடுத்து, விரிவாக கலந்துரையாடி தீர்மானி்க்க முடியும். இது தொடர்பில் அனைத்து கட்சிகளும் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி அதனை பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு கையளி்தால், அது அவர்களின் நடவடிக்கைக்கு இலகுவாக அமையும்  என்றார்.

அதனைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த  சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளர் சாகல காரியவசம்  குறிப்பிடுகையில், மாகாணசபைகளை ஜனாதிபதியின் பிரதிநிதிகளான ஆளுநர்கள் 9பேர், ஜனாதிபதியின் தீர்மானத்துக்கமைய செயற்பட்டு தீர்மானம் எடுப்பது ஜனநாயக முறையல்ல. அதனால் மாகாணசபை தேர்தலை புதிய முறையில் நடத்துவதற்கு இறுதித் தீர்மானம் எடுக்கும்வரை தற்காலிகமாக, பழைய முறையில் தேர்தலை  நடத்தி மாகாண சபைகளை நிறுவுவதற்கு நாங்கள் இணக்கம் என்றார்.

அதனைத் தொடர்ந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகம் நிசாம் காரியப்பர் கருத்து தெரிவிக்கையில்,  அரசியல் நோக்கங்கள் அல்லாமல்  மாகாணசபை தேர்தலை நடத்துவதற்காக நாங்கள் வலுவான பிரேரணை ஒன்றை தயாரித்து வருகிறோம். அதில்  தேசிய மக்கள் கட்சியின் கருத்துக்களையும் பெற்றுக்கொண்டு விரைவாக கையளிக்க எதிர்பார்க்கிறோம். என்றாலும் தற்போதுள்ள நிலைமையில் தேர்தல் மேலும் பிற்படுத்தப்படுவதை தவிர்க்குமுகமாக இந்த முறை மாத்திரம் பழைய முறையில் தேர்தலை நடத்துவதற்கும் நாங்கள் இணக்கம் என்றார்.

சிறிலங்கா கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் சபை உறுப்பினர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வீரசிங்க குறிப்பிடுகையில், மாகாணசபை முறைமையை ஏற்படுத்துவதற்கு எமது கட்சி ஆதரவளித்தபோது, நாங்கள் பாரிய விமர்சனங்களுக்கு ஆளாகி இருந்தோம். அவ்வாறு அர்ப்பணிப்புடன் அமைக்கப்பட்ட மாகாணசபைகள் தற்போது செயலிழந்துள்ளன். ஜனாதிபதியின் பிரதிநிதிகளான ஆளுநர்கள் பெயரளவிலே அங்கு செயற்படுகிறார்கள். பெலவத்தையிலிருந்தே மாகாண சபைகள் நிர்வகிக்கப்படுகின்றன. மாகாணசபை தேர்தல் பிற்படுத்தப்படும்போது முன்னர் தமிழ் கட்சிகள் அதற்கு எதிராக குரல்கொடுப்பார்கள். இந்தியாவும் அழுத்தம் கொடுக்கிறது. ஆனால் தற்போது ஒருசில தமிழ் உறுப்பினர்களே இதுதொடர்பில் கதைக்கிறார்கள். இந்தியாவும் எதுவும் தெரிவிப்பதில்லை. அதனால் தொடர்ந்தும் தாமதிக்காமல் பழைய முறையிலாவது  தேர்தலை நடத்துவதற்கு நாங்கள் இணக்கம் என்றார்.

ஐக்கிய மக்கள் சக்தி பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார குறிப்பிடுகையில், மாகாணசபை தேர்தலை நடத்துவது தொடர்பில் ஆராய அமைக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழுவில் எதிர்க்கட்சி சார்ப்பில் 4 உறுப்பினர்களே இருக்கின்றனர் ஆளும் தரப்பில் 8பேர் இருக்கின்றனர். அதனால் நாங்கள் எந்த தீர்மானம் எடுத்தாலும் அரசாங்கம் நினைத்தால் தேர்தலை விரைவாக நடத்தலாம். ஆனால் தெரிவுக்குழுவில் இடம்பெறும் கருத்துக்களை பார்க்கும்போது அரசாங்கம் தேர்தலை மேலும் பிற்படுத்துவதற்கே நடவடிக்கை எடுத்துவருகிறதாகவே தெரிகிறது. அதிகாரங்களை அரசாங்கம் தனக்குள் வைத்துக்கொள்ளவே முயற்சித்து வருகிறது. தேர்தலை நடத்துவதற்கான தேவை அரசாங்கத்துக்கு இருக்குமானால் சிறிய திருத்தம் ஒன்றை மேற்கொண்டு பழைய முறையில் தேர்தலை நடத்தலாம்  என்றார்.

இலங்கை தமிழரசு கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் எம்.பி குறிப்பிடுகையில், மாகாணசபை தேர்தலை விருப்பு வாக்கு முறையில் நடத்துவோம் என பாராளுமன்ற தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்கும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 4பேரும் தெரிவித்திருந்தோம். ஆனால் இந்த தெரிவுக்குழு மேலும் கால தாமதத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கை என நாங்கள் தெரிவித்திருந்தோம். அதேநேரம் இந்த தேர்தலை நடத்துவதற்கு சட்டமா அதிபர் திணைக்கள மேலதிக சோலிசிட்ட ஜெனரால் ஒருவர்  2 யோசனைகளை முன்வைத்திருந்தார். அதில் ஒன்றுதான் என்னால் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் மாகாணசபை தேர்தலை பழைய முறையில் நடத்துவதற்கான தனிநபர் பிிரேரணையில் பெண்கள், மற்றும் இளைஞர் பிரதிநிதித்துவம் தொடர்பில் சிறிய திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்பதாகும்  என்றார்.

அதனைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அத்துகோரள குறிப்பிடுகையில்,  மாகாண நிறுவனங்கள் இன்று முற்றாக செயலிழந்துள்ளன.  அதனால் தொடர்ந்தும்  இதுதொடர்பில் கதைத்துக்கொண்டிருக்காமல், பெண்கள் மற்றும் இளைஞர் பிரதிநிதித்துவத்தை பாதுகாத்துக்கொண்டு பழைய முறையிலாவது தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசாங்கத்துக்கு இதனை பிற்படுத்துவதற்கு எந்த காரணமும் இல்லை என்றார்.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன் குறிப்பிடுகையில், மாகாண சபை தேர்தலை நடத்துவது தொடர்பில் அனைத்து கட்சிகளும் இணைந்து மேற்கொள்ளும் தீர்மானத்தை பாராளுமன்ற தெரிவுக்குழுவில் சமர்க்க எங்களுக்கு முடியும். அதேநேரம் பெண்கள் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கும் மாகாணசபை முறையை ஏற்படுத்தவும் நாங்களே முன்னின்னு ஆரம்பமாக செயற்பட்டோம். அதேநேரம் வாக்களிக்கும் உரிமையை மக்களுக்கு பெற்றுக்கொடுக்கும் உரிமை தேர்தல் ஆணைக்குழுவுக்கு இருக்கிறது. மாகாணசபை தேர்தலை விரைவாக நடத்துமாறு அரசாங்கத்துக்கு தெரிவித்திருக்கிறதா என நாங்கள் தேர்தல் ஆணைக்குழுவிடம் நாங்கள் கேள்வி எழுப்பினோம். இப்போதுதான் அவர்கள் அரசாங்கத்துக்கு இதுதொடர்பில் கடிதம் எழுதி இருக்கிறார்கள். எவ்வாறு இருந்தாலும் விரைவாக தேர்தலை நடத்துவதற்கு நாங்கள் இணக்கம் என்றார்.

இறுதியாக இந்த கலந்துரையாடலுக்கு தலைமை தாங்கிய பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ராேஹன ஹெட்டியாரச்சி குறிப்பிடுகையில், தற்காலிகமாகவேனும்  மாகாணசபை தேர்தலை பழைய முறைக்கு நடத்தவும் பெண்கள் மற்றும் இளைஞர் பிரதிநிதித்துவத்தை அரசியல் கட்சிகள் தங்களது வேட்புமனுவில் உள்வாங்க சுயாதீனமாக தீரமானிக்க இடமளிப்பதாக உறுதியளித்து, அனைவரும் கைச்சாத்திட்டு ஒரு மகஜரை பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு கையளிப்பதற்கு நடவடிக்கை எடுப்போம் என்றார். அதன் பிரகாரம் மகஜர் தயாரிக்கப்பட்டு, அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் மகஜரில் கையெழுத்திட்டனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.