செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை புதிய கூட்டுக்கான முயற்சி ஆரம்பத்திலேயே ‘அவுட்’ – விக்கி, மணி தனிவழி

புதிய கூட்டுக்கான முயற்சி ஆரம்பத்திலேயே ‘அவுட்’ – விக்கி, மணி தனிவழி

1 minutes read

இலங்கைத் தமிழரசுக் கட்சியை ஓரம் கட்டி, ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகளின் கூட்டை உருவாக்கும் முயற்சியில் உடன்பாடு இன்றி தமிழ் மக்கள் கூட்டணி வெளியேறியது.

அக்கட்சியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரனும், அவரது கட்சியில் இரண்டொரு தினங்களுக்கு முன்னர் இணைந்த முன்னாள் யாழ். மாநகர மேயர் மணிவண்ணனும் இது தொடர்பான கூட்டத்திலிருந்து வெளியேறினர்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியப் பரப்பில் செயல்படும் ஆறு கட்சிகள் ஒண்றினைந்து போட்டியிடும் முயற்சி தொடர்பில் இன்றும் யாழ். ரில்கோ விடுதியில் கூட்டம் இடம்பெற்றது.

கூட்டமைப்பில் தற்போது இடம்பெற்றுள்ள செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலான ரெலோ, த.சித்தார்த்தன் தலைமையிலான புளொட் ஆகிய கட்சிகளுடன் சேர்ந்து இயங்குவது தொடர்பாக சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி, சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எவ்., என்.சிறிகாந்தா தலைமையிலான தமிழ்த் தேசியக் கட்சி, முன்னாள் யாழ். மாநகர மேயர் வி.மணிவண்ணன் தலைமையிலான அணி, ஜனநாயக போராளிகள் கட்சி ஆகியன இந்தப் பேச்சில் கலந்துகொண்டன.

தேர்தல் கூட்டுக்கான சின்னம் தொடர்பான பேச்சில் தமது கட்சியின் ‘மான்’ சின்னத்திலிருந்து தமது கட்சி விலக முடியாது என்று நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் உறுதியாகத் தெரிவித்தார். பொதுச் சின்னமாக குத்துவிளக்கில் போட்டியிடலாம் என ஏனைய கட்சிகள் உறுதியாக தெரிவித்தமையால் சின்னத்தை மாற்றுவதாயின் எனது கட்சியின் மத்திய குழு உறுப்பினர்களுடன் பேசாது பதிலளிக்க முடியாது எனத் தெரிவித்து நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் வெளியேறினார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் வெளியேறியதையடுத்து அவரின் அணியில் இரண்டொரு தினங்களுக்கு இணைந்துள்ள முன்னாள் யாழ். மாநகர மேயர் வி.மணிவண்ணனும் கூட்டத்தில் இருந்து வெளியேறினார். விக்னேஸ்வரனின் கட்சியைச் சேர்ந்த பேராசிரியர் சிவநாதனும் அவர்களுடன் சேர்ந்து வெளியேறினார்.

இதையடுத்துத் தொடர்ந்து கூட்டத்தில் ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ்., தமிழ்த் தேசியக் கட்சியுடன் ஜனநாயகப் போராளிகள் கட்சியும் பங்குகொண்டுள்ளபோதும் மேலும் ஒரு கட்சி பல விடயங்களில் உடன்பாடு இன்றியே கருத்துக்களைத் தெரிவித்ததாகக் கூறப்பட்டது.

முன்னதாக, அந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டிருந்த விக்னேஸ்வரன், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளிகளின் ஜனநாயகப் போராளிகள் கட்சியை கூட்டமைப்பில் சேர்ப்பதைக் கண்டித்தமையுடன் அதனை ஏற்றுக்கொள்ளவும் மறுத்துவிட்டார்.

அத்துடன் அவர், மிக அண்மையில் பதிவு செய்யப்பட்ட தனது தமிழ் மக்கள் கூட்டணி என்ற கட்சியின் ‘மான்’ சின்னத்திலேயே தேர்தலில் போட்டியிடவேண்டும் என்றும் அல்லது உருவாக்கப்படும் கூட்டமைப்புக்குத் தன்னைப் பொதுச் செயலாளராக நியமிக்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

அதனை மற்றையவர்கள் ஏற்றுக்கொள்ள மறுத்ததைத் தொடர்ந்து அவர் கூட்டத்திலிருந்து வெளியேறினார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.