அயர்லாந்து குடியரசின் கவுண்டி கில்டேர் (County Kildare) பகுதியில் உள்ள M9 நெடுஞ்சாலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சுமார் 3 மணியளவில் நடந்த ஒரு கோர விபத்தில் ஐந்து இளைஞர்கள் உயிரிழந்தனர்.
இந்த விபத்து இரு கார்கள் நேருக்கு நேர் மோதியமையால் இடம்பெற்றுள்ளது. கார் ஒன்று, நெடுஞ்சாலையின் தவறான திசையில் வந்ததே இந்த விபத்துக்குக் காரணம் என்று பொலிஸ் உறுதி செய்துள்ளது.
விபத்தில் பலியான ஐந்து இளைஞர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக நாஸ் (Naas) பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
இரண்டாவது காரில் பயணம் செய்த நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர். இதில் 30 மற்றும் 20 வயதுகளில் உள்ள மூன்று பெண்களும், ஒரு சிறுவனும் அடங்குவர். இவர்களில் காரின் ஓட்டுநர் மற்றும் முன் இருக்கையில் இருந்த பெண்ணின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் குறித்துப் பேசிய கார்டா கமிஷனர் ஜஸ்டின் கெல்லி, இந்த விபத்தை “மிகவும் பயங்கரமானது” என்று விவரித்தார். மேலும், சமூக ஊடகங்களில் ‘லைக்’ வாங்குவதற்காக சிலர் இதுபோன்று நெடுஞ்சாலைகளில் தவறான திசையில் வாகனங்களை ஓட்டும் ஆபத்தான மற்றும் பொறுப்பற்ற செயல்களில் ஈடுபடுவதாக அவர் கவலை தெரிவித்துள்ளார். கடந்த வாரமும் டப்ளினில் உள்ள M50 நெடுஞ்சாலையில் இது போன்ற ஒரு விபத்து நடந்ததை அவர் சுட்டிக்காட்டினார்.
பொலிஸ் அதிகாரிகள் இந்த விபத்து நடந்த சூழ்நிலை குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தை நேரில் பார்த்தவர்கள் அல்லது விபத்து குறித்த வீடியோ பதிவுகள் (dashcam footage) வைத்திருப்பவர்கள் உடனடியாகத் தகவல் தெரிவிக்குமாறு பொலிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளது.