சென்னையை சேர்ந்த பிக்சல் கிராப்ட் ஸ்டுடியோஸ் நவீன தொழில்நுட்ப கலைகளில் பிரசித்தி பெற்ற நிறுவனம். அந்த நிறுவனம் மறைந்த பிரபல எழுத்தாளர் சுஜாதாவின் கதைகளை, நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய முழுநீள திரைப்படமாக்க இருக்கிறார்கள்.
சுஜாதாவின் படைப்புகள் தொடராகவும் அதற்கு பின்னர் புத்தகமாகவும் வெளிவந்தபோது எல்லோரையும் கவர்ந்த ‘என் இனிய எந்திரா’ மற்றும் ‘மீண்டும் ஜீனோ’ இரண்டுமே ரசிகர்கள் கண்டுகளிக்க திரைப்படமாக உருவெடுக்கிறது.
இந்த கதைகள் வெளிவந்த நேரத்தில், விஞ்ஞான வளர்ச்சியால் எதிர்காலம் எப்படி இருக்ககூடும் என்பதை நமக்கு கண்முன் காட்டியது. விஞ்ஞான வளர்ச்சி பற்றிய விவரமான இந்த கதைகளுக்கு விஞ்ஞான வளர்ச்சி அபரிதமாக உள்ள இந்த காலகட்டமே சிறந்த காலம் என தெரிவிக்கிறார்
பிக்செல் கிராப்ட் நிறுவனத்தின் முதன்மை அதிகாரியும், இப்படங்களின் இயக்குனருமான சித்தார்த். விர்ச்சுவல் கிராபிக்ஸ் என்ற தொழில்நுட்பம் மூலம் நடிகர்களை மட்டுமே நடிக்க வைத்துவிட்டு, இடம், பொருள் ஆகிய மற்ற விஷயங்களை தொழில்நுட்ப முறையில் ஒரு இடத்தில் இருந்தே படமாக்கும் இந்த முறையால் திரைப்படம் படைப்பது எளிதாகும் என்கிறார் சித்தார்த்.