செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home ஆசிரியர் தெரிவு வடக்கு மாகாணத்துக்கு 83,544 கனேடிய டொலர் பெறுமதியான 6 குருதி சுத்திகரிப்பு இயந்திரங்கள்!

வடக்கு மாகாணத்துக்கு 83,544 கனேடிய டொலர் பெறுமதியான 6 குருதி சுத்திகரிப்பு இயந்திரங்கள்!

2 minutes read

செந்தில்குமரன் நிவாரண நிறுவனமும் வடக்கு மாகாண சபையும் இணைந்து வடக்கு மாகாண வைத்தியசாலைகளுக்கு ஆறு குருதி சுத்திகரிப்பு (டயாலிசிஸ்) இயந்திரங்களை வழங்கும் நிகழ்வு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீடத்தின் மருத்துவ சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் இன்று வியாழக்கிழமை (20) நடைபெற்றது.

இந்நிகழ்வில் கனடா உயர்ஸ்தானிகர், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன், வடக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மற்றும் வைத்தியத்துறை நிபுணர்கள் பலர் கலந்துகொண்டனர்.

சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளி தொடர்ந்து வாழ்வதற்கான வாய்ப்பை வழங்கும் நோக்கில், 83,544 கனேடிய டொலர் பெறுமதியான இந்த ஆறு குருதி சுத்திகரிப்பு இயந்திரங்களும், வவுனியா மற்றும் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைகளுக்கும், மல்லாவி ஆதார வைத்தியசாலைக்கும் வழங்கப்படவுள்ளன.

இவ்வியந்திரங்களுக்கான இறக்குமதி வரித்தீர்வையாக 3.5 மில்லியன் இலங்கை ரூபாயை வடக்கு மாகாண சபை வழங்கியுள்ளது. இதன்மூலம் பிராந்திய மட்டத்திலேயே சிறுநீரக நோயாளிகளுக்கான சிகிச்சை வசதிகளை விரிவுபடுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிகழ்வில் உரையாற்றிய ஆளுநர் நா.வேதநாயகன், சிறுநீரக நோயாளிகள் சிகிச்சைக்காக வாரத்தில் பல முறை நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளதால், அது முழுக் குடும்பத்தின் வாழ்வியலையும் பொருளாதாரத்தையும் பாதிக்கிறது எனச் சுட்டிக்காட்டினார். எனவே, இந்த சிகிச்சை வசதிகளை நோயாளிகளின் வாழ்விடங்களுக்கு அருகிலேயே கொண்டு செல்வது அவர்களின் வாழ்க்கைச் சுமையைக் குறைக்கும் ஒரு மகத்தான மனிதநேயப் பணியாகும் என்று அவர் தெரிவித்தார்.

வடக்கு மாகாணத்தில், குறிப்பாக முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களில் சிறுநீரக நோய் தொடர்பான கவனம் அதிகரிக்க வேண்டியுள்ளது என்று ஆளுநர் தெரிவித்தார். குடிநீரின் தரம், நீண்டகால நீர் பயன்பாடு, விவசாய இரசாயனங்களின் தாக்கம் குறித்து ஆய்வுகள் நடைபெற்று வருவதாகவும், இந்நோய்க்கு ஒரே ஒரு காரணியை மட்டும் அறிவியல் ரீதியாகக் காரணம்காட்ட முடியாது என்றும் அவர் விளக்கினார். விவசாயம், சுற்றுச்சூழல், குடிநீர் மற்றும் மக்களின் சுகாதாரம் ஆகியவற்றை ஒருங்கிணைத்துப் பார்க்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய அவர், நோய் சிகிச்சையோடு நின்றுவிடாமல் தடுப்பு நடவடிக்கைகளிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

கனடாவில் வசித்துக்கொண்டு, தாயக மக்களுக்காகத் தொடர்ந்து உதவி வரும் செந்தில்குமரன் நிவாரண நிறுவனத்தின் நிறுவனர் செந்தில்குமரனின் சேவைகளை ஆளுநர் வெகுவாகப் பாராட்டினார். விமர்சனங்களைக் கடந்து மக்களின் நலனுக்காக அவர் ஆற்றிவரும் பணிகள் போற்றத்தக்கவை என்று குறிப்பிட்டார்.

இந்நிறுவனம் 2018 முதல் 2022 வரையிலான காலப்பகுதியில் 100க்கும் மேற்பட்ட இலவச இருதயச் சத்திரசிகிச்சைகளை மேற்கொண்டு வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களைச் சேர்ந்த 201 சிறுவர்கள் மற்றும் இளம் நோயாளிகளுக்கு உயிர்காக்கும் உதவிகளை வழங்கியுள்ளது. மேலும், மல்லாவி மற்றும் மாஞ்சோலைப் பகுதிகளில் குருதி சுத்திகரிப்பு வசதிகளை உருவாக்கவும் இந்நிறுவனம் பங்களித்துள்ளது.

“கனடாவில் உழைத்த வளம் தாயகத்தில் உயிராக மாறுகிறது” என்ற உணர்வை முன்னிறுத்திய ஆளுநர், புலம்பெயர் தமிழர்கள் தாயகத்தில் முதலீடு செய்யவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், தொழில்நுட்பங்களைப் பகிரவும் அல்லது மருத்துவமனைகளின் தேவைகளை ஏற்று உதவவும் முன்வர வேண்டும் என அழைப்பு விடுத்தார்.

எந்தெந்த மருத்துவமனைகளுக்கு என்னென்ன உபகரணங்கள் தேவை என்பதைத் திட்டமிட்டு, புலம்பெயர் உறவுகளுடன் இணைந்து நேர்மையுடன் செயல்பட மாகாண நிர்வாகம் தயாராக இருப்பதாகவும் அவர் உறுதியளித்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.