பொலிவூட் நடிகர் கோவிந்தா தனது துப்பாக்கியை துடைத்தபோது தவறுதலாக வெடித்ததில் காலில் காயம் அடைந்துள்ளார்.
பொலிவூட் நடிகர் கோவிந்தா மும்பை ஜுகு பகுதியில் தனி பங்களாவில் தனது குடும்பத்தோடு வசித்து வருகிறார்.
அவர் செவ்வாய்க்கிழமை அதிகாலை கொல்கத்தாவில் நடக்கும் நிகழ்ச்சி ஒன்றுக்கு செல்வதற்காக காலை 4 மணிக்கே எழுந்து தயாரானார். அவர் தன்னுடன் தனது ரிவால்வரையும் எடுத்துச் செல்ல முடிவு செய்தார். இதற்காக தனது துப்பாக்கியை காலை 4.45 மணிக்கு துடைத்துக்கொண்டிருந்தார். அந்நேரம் எதிர்பாராத விதமாக கைபட்டு துப்பாக்கி வெடித்துள்ளது.
இதன்போது, தோட்டா கோவிந்தாவின் காலில் பட்டது. உடனே காயத்துடன் கோவிந்தா தனது வீட்டிற்கு அருகில் உள்ள வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். அவருக்கு வைத்தியர்கள் சிகிச்சையளித்தனர். காலில் பாய்ந்த தோட்டாவை அப்புறப்படுத்தி சிகிச்சை கொடுத்துள்ளனர்.
60 வயதாகும் கோவிந்தா 1990களில் பிரபலமாக விளங்கினார். அதன் பிறகு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து எம்.பி.யானார். பின்னர் கடந்த மக்களவை தேர்தலுக்கு முன்பு மகாராஷ்டிராவில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவில் தன்னை இணைத்துக்கொண்டார். அத்தோடு மக்களவை தேர்தலில் பிரசாரமும் செய்துள்ளார்.