‘மச்சமுனி சித்தர் இயற்றிய ஒரு பாடலில் ககன மார்க்கன் என்ற சொல்லாடல் இடம் பிடித்திருக்கிறது. அதனை மையப்படுத்தி தான் இந்த ஃபெண்டஸி திரில்லர் திரைப்படத்திற்கு ‘ மார்கன்’ என பெயரிட்டிருப்பதாக விஜய் அண்டனி நடிப்பில் வெளியாகும் ‘மார்கன்’ படத்தின் இயக்குநர் லியோ ஜோன் பால் தெரிவித்திருக்கிறார்.
பட தொகுப்பாளராக பணியாற்றி பல வெற்றி படங்களை அளித்த லியோ ஜோன் பால் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் ‘மார்கன்’. விஜய் அண்டனி, அஜய் திஷான், பிரிகிடா, தீப்ஷிகா, மகாநதி சங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.
எஸ்.. யுவா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு விஜய் அண்டனி இசையமைத்திருக்கிறார். ஃபெண்டசி மிஸ்ட்ரி திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை விஜய் அண்டனி பிலிம் கொர்ப்பரேசன் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
எதிர்வரும் ஜூன் மாதம் 27ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் திரையுலக பிரபலங்கள் பலர் சிறப்பு அதிதிகளாக பங்கு பற்றினர்.
இந்நிகழ்வில் இயக்குநர் லியோ ஜோன் பால் பேசுகையில், ” கொரோனா தொற்று பரவல் காலகட்டத்தில் .. கிடைத்த அதீத ஓய்வில் கதையை எழுதி இயக்குநராக வேண்டும் என திட்டமிட்டேன். அந்த தருணத்தில் எம்முடைய நண்பர் ஒருவர் சித்தர் தொடர்பான ஒரு குறிப்பினை கதையாக விவரித்தார்.
அதில் உள்ள சுப்பர் நேச்சுரல் ..எம்மை கவர்ந்தது. தொடர்ந்து அது தொடர்பான தேடலில் ஈடுபடும் போது மச்சமுனி சித்தர் எழுதிய ஒரு பாடல் கிடைத்தது.அந்த பாடலில் ஒரு சொல்லாடல் தான் ‘ ககன மார்க்கன்’ . ககன மார்க்கன் என்பது சித்தர்களின் சித்து விளையாட்டுகளில் ஒன்றாகும்.
இதைப் பற்றி அறிந்து கொள்ளும் போது சுப்பர் ஹீரோவை போல் இருந்ததால் .. அதனையே கதையாக எழுதி இயக்க தீர்மானித்தேன். இதனைத் தொடர்ந்து இந்த கதையை விஜய் அண்டனியுடன் சொன்னவுடன் அவருக்கு பிடித்தது. அவருக்கு மட்டுமல்ல அனைவருக்கும் இந்த திரைப்படம் பிடிக்கும்” என்றார்.