செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா பரமசிவன் பாத்திமா | திரைவிமர்சனம்

பரமசிவன் பாத்திமா | திரைவிமர்சனம்

1 minutes read

பரமசிவன் பாத்திமா – திரைப்பட விமர்சனம்

தயாரிப்பு : ஸ்ரீ லட்சுமி கிரியேஷன்ஸ்

நடிகர்கள் : விமல், சாயாதேவி, எம். எஸ். பாஸ்கர், இசக்கி கார்வண்ணன், எம். சுகுமார், கூல் சுரேஷ், வீர சமர், மனோஜ் குமார் ,ஆதிரா, அருள்தாஸ், சேஷ்விதா, ஸ்ரீரஞ்சனி மற்றும் பலர்.

இயக்கம் : இசக்கி கார்வண்ணன்

மதிப்பீடு : 2/5

தமிழக நகரான திண்டுக்கல்லின் மலை சார்ந்த பகுதியில் சுப்ரமணியபுரம் – யாக்கோபுரம்-  சுல்தான் பேட்டை – எனும் பெயரில் இந்துக்கள்- கிறிஸ்தவர்கள்- இஸ்லாமியர்கள் – ஆகியோர் வசிக்கிறார்கள்.

இதில் சுப்பிரமணியபுரம் எனும் ஊரில் வாழும் இந்துக்களுக்கும், யாக்கோபுரம் எனும் ஊரில் வாழும் கிறித்தவ மக்களுக்கும் இடையே அடிக்கடி மத ரீதியான மோதல்கள் ஏற்படுகிறது. இந்த தருணத்தில் யாக்கோபுரத்தில் ஒரு திருமணம் நடைபெறுகிறது.

திருமணத்திற்கு முதல் நாள் மணமக்கள் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார்கள். இதனால் காவல்துறை கொலை வழக்கு பதிவு செய்து விசாரிக்க தொடங்குகிறது.

இந்நிலையில் மீண்டும் திருமணத்திற்கு முதல் நாள் மணமக்கள் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார்கள். தற்போது காவல்துறையினர் கொலை செய்வது பரமசிவன் -பாத்திமா என்ற தம்பதியர் என கண்டறிகின்றனர்.

அவர்களை கைது செய்வதற்காக அவர்கள் பதுங்கி இருக்கும் இடத்திற்கு செல்கிறார்கள். அங்கு ஒரு அதிர்ச்சிகரமான தகவல் காவல்துறையினருக்கு தெரிய வருகிறது.

அது என்ன? என்பதும், அதன் பிறகு அந்த ஊரில் கொலை நடந்ததா? இல்லையா? என்பதும், பரமசிவன்- பாத்திமா யார்? என்பதை தெரிந்து கொள்வதும் தான் இப்படத்தின் கதை.

மக்களிடத்தில் மதம் தொடர்பான நம்பிக்கை-  மதமாற்றம்-  மதமாற்றத்தின் பின்னணி- என தென் தமிழகத்தில் உள்ள மக்களின் தற்போதைய சமூக அரசியல் குறித்தும், மத அரசியல் குறித்தும்.. இயக்குநர் ஓரளவு ஜனரஞ்சகமான முறையில் சொல்ல முயற்சித்திருக்கிறார். படத்தின் முதல் பாதி ஒரு கோணத்திலும்…. இரண்டாவது பாதி மற்றொரு கோணத்திலும் இருப்பது படத்தின் பலவீனம்.

இரண்டாம் பாதியில் பரமசிவன் பாத்திமா இடையேயான காதலும், அவர்களின் மதம் குறித்த நம்பிக்கையும் காட்சிகளாக விவரித்திருப்பது ஒரு பக்க சார்பு நிலையை அப்பட்டமாக விவரிக்கிறது.

பரமசிவன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விமல், பாத்திமா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சாயாதேவி ஆகியோர்களை விட பாத்திமாவின் தோழியான ஜெனிபர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகை சேஷ்விதா – காந்த கண்களாலும், கட்டற்ற இளமையாலும் ரசிகர்களை எளிதில் கவர்கிறார்.

காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் தயாரிப்பாளரும் , இயக்குநருமான இசக்கி கார்வண்ணன் தனக்கு தெரிந்த விடயங்களை நடிப்பில் முயற்சித்திருக்கிறார்.

கிறித்துவ பாதிரியாராக நடித்திருக்கும் எம். எஸ். பாஸ்கர் இயக்குநர் சொன்னதை செய்திருக்கிறார்.

வில்லனாக அறிமுகமாகி நடிப்பில் கவனம் செலுத்தியதால் ஒளிப்பதிவாளர் சுகுமார் ஒளிப்பதிவில் தன் தனித்துவத்தை முன்னிறுத்தவில்லை. தீபன் சக்கரவர்த்தியின் பாடல்களும், பின்னணி இசையும் ரசிகர்களுக்கு ஓரளவு ஆறுதல்.

படத்தில் எல்லா கதாபாத்திரங்களும் பிரச்சார பாணியிலேயே உரையாடல்களை நிகழ்த்துவதால் ரசிகர்களுக்கு எரிச்சல் ஏற்படுகிறது.

மத அரசியல் – மதமாற்ற அரசியல் குறித்து தான் புரிந்து கொண்டதை படைப்பாக வழங்க முயற்சித்திருக்கிறார் இயக்குநர்.

பரமசிவன் பாத்திமா – மதம் படுத்தும் பாடு.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More