செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா இந்தியாவில் கைவிடப்பட்ட நிலையில் 05 ஒராங்குட்டான் குட்டிகள் மீட்பு

இந்தியாவில் கைவிடப்பட்ட நிலையில் 05 ஒராங்குட்டான் குட்டிகள் மீட்பு

1 minutes read

தென்கிழக்காசிய நாடான இந்தோனேசியா மற்றும் மலேசியாவைத் தாயகமாகக் கொண்ட 5 அபூர்வ ஒராங்குட்டான் குட்டிகள், இந்தியாவின் கிழக்கு மாநிலமான ஒடிசாவின் பாலசோர் மாவட்டக் காடொன்றில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளன.

உள்ளூர் பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் வனத்துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை (08) காலை சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, வாழைப்பழங்களை உட்கொண்டிருந்த 5 குட்டிகளையும் மீட்டுள்ளனர்.

முதலுதவிக்குப் பின்னர், ஒடிசா மாநிலத் தலைநகர் புபனேஷ்வரில் உள்ள புகழ்பெற்ற நந்தன்கானன் உயிரியல் பூங்காவிற்கு கொண்டு செல்லப்பட்டு அவை தீவிரக் கண்காணிப்பு மற்றும் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளன.

மீட்கப்பட்ட குட்டிகள் அனைத்தும் 01 முதல் 02 வயதிற்குட்பட்ட சிறிய குட்டிகளாகும். பொதுவாக ஒராங்குட்டான் குட்டிகள் பல ஆண்டுகள் தாயின் அரவணைப்பிலேயே வாழும் என்பதால், தாய் இன்றி 05 குட்டிகள் மட்டும் தனியாகக் கண்டெடுக்கப்பட்டது வனவிலங்கு ஆர்வலர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்க எல்லைக்கு அருகிலுள்ள நெடுஞ்சாலை வழியாக வாகனத்தில் கடத்திவரப்பட்ட போது, பிடிபடும் அச்சத்தில் கடத்தல்காரர்கள் இக்குட்டிகளைக் காட்டில் வீசிச் சென்றிருக்கலாம் என பாலசோர் வன அதிகாரி பிரதீக் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

இந்திய வனவிலங்கு குற்றக்கட்டுப்பாட்டுப் பிரிவு, விசேடஅதிரடிப்படை மற்றும் பொலிஸார் இணைந்து சர்வதேச கடத்தல் கும்பல் குறித்து தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கடந்த 2022 ஆம் ஆண்டிலும் அசாம்-மிசோரம் எல்லைச் சாவடியில் 02 ஒராங்குட்டான் குட்டிகள் மியான்மர் வழியாக இந்தியாவுக்குள் கடத்தப்பட்டு மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

போர்னியன், சுமத்ரன் மற்றும் தபனுலி ஆகிய மூன்று வகை ஒராங்குட்டான்களும் சர்வதேச இயற்கை பாதுகாப்புச் சங்கத்தினால் ‘மிகவும் அழியும் அபாயத்திலுள்ள’ உயிரினங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.