எளிதான சமையல் குறிப்பு

கலத்துப்பொடி
தேவையான பொருட்கள்

 1. சுக்கு – பெரிய கொம்பு
 2. சீரகம்- ஒரு டீஸ்பூன்
 3. மிளகு – ஒரு டீஸ்பூன்
 4. வேப்பம் பூ – சிறிதளவு
 5. உளுத்தம்பருப்பு- 2 டேபிள்ஸ்பூன்
 6. துவரம்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்
 7. பெருங்காயம் – சிறிதளவு
 8. உப்பு – தேவையான அளவ
 9. கறிவேப்பிலை – சிறிதளவு.

செய்முறை

மேலே கூறிய பொருட்களை தனித்தனியே எண்ணெய் விடாமல் வறுத்து, பொடித்து சலித்துக் கொள்ளவும். குறிப்பு: குழந்தை பிறந்த பெண்கள் இந்தப் பொடியில் ஒரு ஸ்பூன் சுடுசாதத்தில் போட்டு நெய் விட்டு, பிசைந்து சாப்பிட்டால் வயிற்றில் வாயு அண்டாது, பால்குடிக்கும் குழந்தையும் கக்காது.

அகத்திக்கீரைச் சாறு
தேவையான பொருட்கள்

 1. அகத்திக்கீரை – 1 கட்டு
 2. பெரிய வெங்காயம் – 1
 3. பச்சை மிளகாய் – 2
 4. சீரகம் – 1 டீஸ்பூன்
 5. தேங்காய்த்துருவல் – 2 டேபிள்ஸ்பூன்
 6. நல்லெண்ணெய்- 1 டீஸ்பூன்
 7. கடுகு – 1/2 டீஸ்பூன்
 8. உப்பு – 1/2 டீஸ்பூன்

செய்முறை

 1. கீரையை காம்பிலிருந்து உருவிக் கொள்ளவும்.
 2. வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
 3. ஒரு வாணலியில் எண்ணை விட்டு சூடானதும் கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து சற்று வதக்கவும். அத்துடன் கீரையை அலசிப் போட்டு, சீரகம், உப்பு சேர்க்கவும். அதில் ஒரு கப் தண்ணீரையும் சேர்த்து மூடி போட்டு, சிறு தீயில் வேக விடவும்.
 4. தேங்காயை நன்றாக அரைத்து வெந்தக் கீரையில் சேர்த்து சில நிமிடங்கள் கொதிக்க விட்டு இறக்கி வைக்கவும்.
 5. சூடான சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம். வாய் மற்றும் வயிற்றுப் புண்ணை ஆற்ற வல்லது. இந்தச் சாற்றை வடிகட்டி சூப் போலவும் குடிக்கலாம்.
 6. இந்தச் சாற்றை வெறும் தண்ணீருக்குப் பதில், அரிசி கழுவிய நீரில் செய்தால் இன்னும் சுவையாக இருக்கும்.

கொத்தமல்லி துவையல்
தேவையான பொருட்கள்

 1. பச்சை கொத்தமல்லித் தழை – ஒரு கட்டு
 2. பச்சை மிளகாய் – 2
 3. புளி – ஒரு பட்டாணி அளவு
 4. உப்பு – 1/2 டீஸ்பூன்

செய்முறை

 1. கொத்தமல்லித் தழையை நன்றாகக் கழுவி விட்டு, அத்துடன் பச்சை மிளகாய், உப்பு, புளி சேர்த்து நன்றாக அரைத்தெடுக்கவும். தண்ணீர் சேர்க்க தேவையில்லை. கொத்துமல்லித்தண்டோடு சேர்த்து அரைக்கலாம்.
 2. நல்ல வாசனையோடு இருக்கும். இட்லி, தோசை மட்டுமின்றி, தயிர் சாதத்திற்கும் தொட்டுக் கொள்ள ஏற்றது.
 3. புளிக்குப் பதிலாக எலுமிச்சம் பழச்சாற்றை சேர்க்கலாம். பித்தம், வாய் கசப்பு போன்றவற்றை நீக்க வல்லது.

மக்காச்சோளம் சாலட்
தேவையான பொருள்கள்

 1. மக்காச்சோளம் – 2 கப்
 2. தக்காளி – 1
 3. வெங்காயம் – 1
 4. மிளகுத்தூள் – 2 ஸ்பூன்
 5. எலுமிச்சை பழச்சாறு – 1 ஸ்பூன்
 6. கொத்தமல்லி இலை – சிறிதளவு
 7. உப்பு – தேவையான அளவு

செய்முறை

தக்காளி மற்றும் வெங்காயத்தை சிறிதாக நறுக்கி கொள்ளவும். மக்காச்சோளத்தை பாதி அளவு வேக வைத்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் நறுக்கிய தக்காளி, வெங்காயம் மற்றும் வேக வைத்த சோளம் ஆகியவற்றை போட்டு அதனுடன் மிளகுத்தூள், உப்பு சேர்த்து கிளறி விட்டு எலுமிச்சை பழச்சாறு மற்றும் கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும். உடலுக்கு ஆரோக்கியமான, சத்து நிறைந்த “மக்காச்சோளம் சாலட்” தயார்.

மருத்துவ குணங்கள்

மக்காச்சோளத்தில் குளோரைடு, கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம், சோடியம், கோபால்ட், குரோமியம், காப்பர், புளூரின், இரும்பு, அயோடின், மாங்கனீசு, செலினியம் மற்றும் துத்தநாகம் ஆகியவை காணப்படுகிறது.
மேலும் வைட்டமின் “ஏ”, வைட்டமின் “பி”, வைட்டமின் “சி”, வைட்டமின் “டி”, வைட்டமின் “கே” வைட்டமின் “பி6″, வைட்டமின் “பி12″ மற்றும் ஃபோலிக் அமிலம் காணப்படுகிறது.
சிறுநீரக கோளாறுகள் அனைத்தையும் குறைக்கும் சக்தி வாய்ந்தது. உடல் பருமன், மூலநோய் மற்றும் நீரிழிவை குறைக்கும். இவ்வாறு மருத்துவ குணங்கள் நிறைந்த உணவுகளை சாப்பிட்டு ஆரோக்கியாக நோயின்றி வாழ்வோம்.

மாங்காய் நெல்லிக்காய் தொக்கு
தேவையான பொருட்கள்

 1. மாங்காய் – 1 பெரியது
 2. நெல்லிக்காய் – 200 கிராம்
 3. மிளகாய்தூள் – 200 கிராம்
 4. உப்பு – 11/2 டீஸ்பூன்
 5. பெருங்காயம் – 1/2 டீஸ்பூன்
 6. கடுகு – டீஸ்பூன்
 7. வெல்லம்- சிறிதளவு

செய்முறை

மாங்காய், நெல்லிக்காய் ஆகியவற்றை பொடியாக நறுக்கி மிக்சியில் அரைத்துக் கொள்ளவேண்டும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, பெருங்காயம் போட்டுத் தாளித்து, அரைத்த விழுதைப் போடவேண்டும்.
மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். நன்றாக வதங்கிய பின்பு சிறிதளவு வெல்லம் சேர்த்து இறக்க வேண்டும். இப்பொழுது சுவையான மாங்காய்

நெல்லிக்காய் தொக்கு தயார்.
மருத்துவ பயன்கள்

 1. நெல்லிக்காய் இதயத்தை வலிமைப்படுத்தும்.
 2. நெல்லிக்காய் குடல்புண், கண்நோய்கள், இரத்தப்பெருக்கு, நீரழிவு நோய் ஆகியவற்றை குறையச் செய்யும்.
 3. நெல்லிக்காயில் புரதம், கொழுப்பு, சுண்ணாம்புச் சத்து, தாதுப் பொருள், இரும்புச்சத்து, வைட்டமின் சி ஆகிய சத்துக்கள் அடங்கியுள்ளது.
 4. மாம்பிஞ்சுகளை வெயிலில் காயவைத்து உணவோடு சேர்த்து சாப்பிட்டு வந்தால் பசியின்மை குறையும்.

இனிப்பு கம்பு அடை
தேவையான பொருட்கள்

 1. கம்பு மாவு – 1 கப்
 2. வெல்லம் -1/2 அல்லது 3/4 கப்
 3. தேங்காய் துண்டுகள் – 1/3 கப்
 4. ஏலக்காய் – 2
 5. உப்பு – சிறிதளவு
 6. நல்லெண்ணெய் அல்லது நெய் – 2 டீஸ்பூன்

செய்முறை

முதலில் ஏலக்காயை உடைத்து உள்ளே இருக்கும் விதைகளை பொடி செய்துக் கொள்ளவேண்டும்.

வெல்லத்தை சிறிதளவு தண்ணீரில் கரைத்துக் கொள்ளவேண்டும். அந்த தண்ணீருடன் கம்பு மாவு, பொடித்த ஏலக்காய், சிறிதளவு உப்பு, தேங்காய்துண்டுகள் ஆகியவற்றை கலந்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்துக் கொள்ளவேண்டும்.

பிசைந்த மாவு கலவையை ஒரு மணி நேரம் ஈரத்துணியால் மூடி வைக்கவேண்டும். பின்பு சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவேண்டும்.

இந்த உருண்டையை உள்ளங்கை அல்லது எண்ணெய் தடவிய ப்ளாஸ்டிக் கவரின் மேல் வைத்து மெல்லிதாக தட்டிக் கொள்ளவேண்டும்.

தட்டியதை தவாவில் போட்டு நெய் அல்லது நல்லெண்ணெய் விட்டு மிதமான தீயில் வேக வைத்துக் கொள்ளவேண்டும். ஒரு பக்கம் வெந்ததும் அடைகளை மெதுவாக திருப்பி போட்டு மேலும் சிறிது நேரம் வேகவைத்து எடுக்கவேண்டும்.

இப்பொழுது சுவையான இனிப்பு கம்பு அடை தயார்.

மருத்துவ பயன்கள்

கம்பு தாய்மார்களுக்கு பால் உற்பத்தியைப் பெருக்கும். உடல் வலிமையை அதிகமாக்கும்.

கம்பில் புரதம், சுண்ணாம்பு, பாஸ்பரஸ் போன்ற தாதுக்களும் உயிர்ச்சத்துக்களும் உள்ளன. கம்பு அரிசியைவிட பல மடங்கு சத்து மிகுந்த உணவு. கம்பு ஜீரண சக்தியை அதிகரிக்கும்.

கம்பு உடல் வெப்பநிலையை சமநிலையில் வைத்திருக்க உதவும். வேண்டாத கொழுப்புகளை கரைத்து பருமனைக் குறைக்கும்.

புரதச் சத்து, மாவுச் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு உள்ளிட்ட தாதுப் பொருள்கள், வைட்டமின் சி, அனைத்து வகை பி காம்ப்ளக்ஸ் சத்துக்கள், நார்ச்சத்து என உடல் இயக்கத்துக்குத் தேவைப்படும் அனைத்துச் சத்துகளும் தேங்காயில் உள்ளன. தேங்காய்ப் பால் உடல் வலிமைக்கு நல்லது.

குழந்தை நல்ல நிறமாகப் பிறக்க தேங்காய்ப் பூவை சாறாக்கி கர்ப்பிணிகளுக்குக் கொடுக்கும் வழக்கமும் உண்டு.

ஆதாரம்: பாட்டி வைத்தியம்

ஆசிரியர்