செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home ஆசிரியர் தெரிவு யாழ். பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி பீடங்களை வளாகமாகத் தரமுயர்த்தக் கோரிக்கை: துணைவேந்தருடன் ‘கிளி மக்கள்’ அமைப்பு சந்திப்பு

யாழ். பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி பீடங்களை வளாகமாகத் தரமுயர்த்தக் கோரிக்கை: துணைவேந்தருடன் ‘கிளி மக்கள்’ அமைப்பு சந்திப்பு

1 minutes read

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கீழ் கிளிநொச்சியில் இயங்கி வரும் மூன்று பீடங்களையும் ஒன்றிணைத்து, அதனை ஒரு முழுமையான கிளிநொச்சி வளாகமாக தரமுயர்த்துமாறு, யாழ். பல்கலைக்கழக துணைவேந்தரிடம் கிளி மக்கள் அமைப்பு (KILI PEOPLE) கோரிக்கை விடுத்துள்ளது.

கிளி மக்கள் அமைப்பின் பொருளாளர் திருமதி கலாராணி ராஜ்குமார் தலைமையில் மேற்கு இலண்டனில் நடைபெற்ற இச்சந்திப்பில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 10ஆவது துணைவேந்தராகப் பொறுப்பேற்றுள்ள மூத்த பேராசிரியர் திருநாவுக்கரசு வேல்நம்பி கௌரவிக்கப்பட்டார்.

கல்வித்துறையில் நீண்ட அனுபவம் கொண்ட அவர் துணைவேந்தராக நியமிக்கப்பட்டிருப்பது பல்கலைக்கழகத்தின் வளர்ச்சிக்கு மேலும் வலுசேர்க்கும் என இதன்போது நம்பிக்கை தெரிவிக்கப்பட்டது.

கல்வி மற்றும் பொருளாதார மேம்பாடு குறித்த ஆலோசனைகள், கிளிநொச்சியில் தற்போது இயங்கி வரும் விவசாய பீடம், தொழில்நுட்ப பீடம் மற்றும் பொறியியல் பீடம் ஆகியவற்றின் கல்விசார் வளங்களை அப்பிரதேச மக்களின் அறிவியல் மற்றும் பொருளாதார முன்னேற்றத்துக்காகப் பயன்படுத்தும் வழிமுறைகள் குறித்து இக்கலந்துரையாடலில் விரிவாக ஆராயப்பட்டன.

அத்துடன், கிளிநொச்சி பிராந்தியத்துக்காகத் தயாரிக்கப்படும் தூரநோக்குடனான 5 ஆண்டுகால கல்வித் திட்டத்துக்கு பல்கலைக்கழகத்தின் ஆலோசனைகள் கோரப்பட்டன.

கிளி மக்கள் அமைப்பினால் ஆரம்பிக்கப்பட்ட ‘KILI JOB CENTER PLUS’ மையத்துக்கு, பல்கலைக்கழகத்தின் தொழில் வழிகாட்டல் பிரிவின் (Career Guidance Unit) ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

பல்கலைக்கழகத்தின் புறநிலை கற்கைகள் நிலையத்தின் (Center for Open and Distance Learning – CODL) பாடநெறிகளை கிளிநொச்சியில் விரிவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் முன்வைக்கப்பட்டன.

மேலும், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடைபெறவுள்ள வேலைவாய்ப்புச் சந்தை (Job Fair) தொடர்பாகவும் துணைவேந்தருக்கு இதன்போது விளக்கமளிக்கப்பட்டது.

இந்த முக்கிய நிகழ்வில் கிளி மக்கள் அமைப்பின் பிரதிநிதிகளுடன், வவுனியா மாவட்டப் பாடசாலைகளின் கூட்டமைப்பு உறுப்பினர்கள், யாழ். பல்கலைக்கழக கலைப்பீடப் பழைய மாணவர்கள், இலண்டன் சட்பரி தமிழ்ப் பாடசாலை சமூகத்தினர் மற்றும் உள்ளூராட்சிச் சபை பிரதிநிதிகள் எனப் பல ஆர்வலர்கள் கலந்துகொண்டனர்.

இந்தத் தரமுயர்த்தல் நடவடிக்கை, கிளிநொச்சி பிரதேசத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.