செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மகளிர் குழந்தைகள் ஏன் சாப்பிட மறுக்கிறார்கள்? உடல் பருமன் ஏன்? காரணமும் தீர்வும்!

குழந்தைகள் ஏன் சாப்பிட மறுக்கிறார்கள்? உடல் பருமன் ஏன்? காரணமும் தீர்வும்!

4 minutes read

குழந்தைகள் ஏன் சாப்பிட மறுக்கிறார்கள்? பெரும்பாலான குழந்தைகளுக்கு ஏன் உடல் பருமன் ஏற்படுகிறது? குழந்தைகளுக்கு என்னென்ன உணவுகளைக் கொடுக்க வேண்டும்? பார்க்கலாம்..

சமீபத்தில் 9 வயது சிறுவனுக்கு பரிசோதனை செய்ததில் அவனுக்கு உயர் ரத்த அழுத்தம் இருப்பது கண்டறியப்பட்டது. சிறுவனின் தாய் வேலைக்குச் செல்வதால் சிறுவன் பள்ளி முடிந்து வந்து டிவியில்தான் பொழுதைக் கழித்திருக்கிறார். இரவு 9 மணிக்கு மேல் வந்து சமைத்து சிறுவனுக்கு தாய் சாப்பாடு கொடுக்க, சிறுவனும் சாப்பிட்டவுடன் தூங்கிவிடுகிறார். இதையே அன்றாட வழக்கமாகவும் வைத்திருக்கிறார்.

அந்த சிறுவனுக்கு வாழ்க்கை முறை மாற்றங்கள், உணவில் உப்பைக் குறைத்தல், உடல் இயக்க செயல்பாடுகளை ஊக்குவித்தல், ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கங்களின் மூலமாக உடல் எடையையும் ரத்த அழுத்தத்தையும் குறைத்ததாக சிம்ஸ் மருத்துவமனையின் குழந்தைகள் நல நிபுணர் டாக்டர் வித்யா கூறினார்.

உடல் பருமன்

உடல் பருமனை ஒரு முக்கியமான பொது சுகாதாரப் பிரச்னையாக அங்கீகரிக்க வேண்டும் என்று நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். மத்திய சுகாதார அமைச்சக தரவுகளின்படி, 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளின் எடை விகிதம் 2015-2016ல் 2.1% ஆக இருந்த நிலையில் 2019-2021-ல் 3.4% ஆக அதிகரித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பின்படி, உடல் பருமன் என்பது உடல் ஆரோக்கியத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் அசாதாரண அல்லது அதிகப்படியான கொழுப்பு சேர்வது என வரையறுக்கப்படுகிறது. உடலில் எடை மற்றும் உயரத்தை வைத்துக் கணக்கிடும் உடல் நிறை குறியீட்டெண் (BMI) 25 அல்லது அதற்கு மேலாக இருந்தால் அது அதிக உடல் எடையைக் குறிக்கிறது. பி.எம்.ஐ. அளவு 30 அல்லது அதற்கு அதிகமாக இருந்தால் அது ‘உடல் பருமன்’ என குறிக்கப்படுகிறது.

இந்தியாவைப் பொருத்தவரை பி.எம்.ஐ. 23 முதல் 24.9 வரை இருந்தால் அதிக எடை என்றும் பி.எம்.ஐ. 25 அல்லது அதற்கு மேல் இருந்தால் உடல் பருமன் என்றும் 35 அல்லது அதற்கு மேல் இருக்கும்போது நோயுற்ற உடல் பருமன் என்றும் மத்திய சுகாதார அமைச்சகம் வரையறுத்துள்ளது.

காரணிகள்

கார்போஹைட்ரேட்டுகள், நிறைவுற்ற கொழுப்புகள் நிறைந்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகம் சாப்பிடுவது, உடல் செயல்பாடு இல்லாதது, உணவகங்களில் சாப்பிடும் கலாசாரம் வளர்ந்து வருவது, உட்கார்ந்து வேலை செய்யும் வாழ்க்கை முறை ஆகியவை உடல் பருமனுக்கு முக்கிய காரணிகள்.

விளைவுகள்

குழந்தைப் பருவத்தில் உடல் பருமன் ஏற்படுவது டைப் 2 நீரிழிவு, இதய நோய், உயர் ரத்த அழுத்தம், அதிக கொழுப்பு, மது அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய் உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். இளம் பெண்களில் இது இன்சுலின் எதிர்ப்பை உருவாக்குகிறது. இதனால் பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (பிசிஓஎஸ்) ஏற்படுகிறது என்று டாக்டர் வித்யா கூறினார்.

“குழந்தையின் முதல் 6 மாதங்கள் தாய்ப்பால் மட்டும் கொடுப்பது உடல் பருமனைத் தடுக்கும். அடுத்து அவர்களுக்கு சரிவிகித உணவை வழங்க வேண்டும். ஒரு கிலோ எடைக்கு ஒரு கிராம் புரதம் கிடைக்க உறுதி செய்ய வேண்டும். பெரியவர்களுக்கும் அதுதான். புரதம் கிடைக்கும்போது குழந்தைகள், இனிப்புப் பொருள்களுக்காக ஏங்கமாட்டார்கள். அடுத்து குழந்தை வளரும்போது, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு விளையாட்டு போன்ற உடல் இயக்க செயல்பாடுகளை கற்றுக்கொடுத்து அவர்களுடன் விளையாட வேண்டும். பள்ளிகளில் பல மணி நேரம் அமர்ந்தே இருக்கும் குழந்தைகள் வீட்டிற்கு வந்ததும் விளையாட வைக்க வேண்டும். உடல் பருமனுக்கு சிகிச்சையளிப்பதைவிட அது வராமல் தடுப்பதே நல்லது. உடல் பருமனாக இருக்கும் குழந்தைகளுக்கு ஹைப்போ தைராய்டிசம் போன்ற பிரச்னைகள் இருக்கிறதா என பரிசோதனை செய்வது அவசியம்” என்கிறார்.

குழந்தைகளுக்கு என்ன உணவு கொடுக்கிறீர்கள்?

உடல் பருமனைத் தடுக்க குழந்தைகளுக்கு சரிவிகித உணவை கொடுக்க வேண்டும். ஊட்டச்சத்து இல்லாத பாஸ்ட் புட், பீசா, பர்கர் போன்ற பதப்படுத்தப்பட்ட உணவுகள் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். உணவகத்தில் சாப்பிட நேரிட்டால் கட்டுப்பாட்டுடன் சாப்பிடுங்கள். பள்ளிகளில் குழந்தைகளுக்கு சுண்டலுக்கு பதிலாக ஒரு பாக்கெட் பிஸ்கட், சிப்ஸ் கொடுத்து அனுப்புகிறார்கள். இது முற்றிலும் தவறு. ஸ்நாக்ஸ் கொடுப்பதைவிட முழு தானியங்களை கொடுத்துப் பழக வேண்டும் என சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையின் உணவியல் நிபுணர் மீனாட்சி பஜாஜ் கூறினார்.

“குழந்தைப் பருவத்தில் உடல் பருமனைக் கட்டுப்படுத்த விழிப்புணர்வும் கல்வியும்தான் முக்கியம். உணவகங்களில் இன்று சீஸ், வெண்ணெய், கார்பன் கலந்த பானங்கள் ஆகியவற்றை அதிகளவில் கொடுக்கிறார்கள். பாரம்பரிய உணவுப் பழக்கங்களுக்கு நாம் மீண்டும் மாற வேண்டும். சிறு தானியங்கள், ஆப்பிள், வாழைப்பழம், நட்ஸ் ஆகியவற்றைக் கொடுத்துப் பழக்கலாம். பெற்றோர்கள் பாஸ்ட் புட் போன்ற உணவுகளைச் சாப்பிடுவதால்தான் குழந்தைகளும் அதற்கு பழகுகின்றனர். அதனால் பெற்றோர்களும் இதுபோன்ற துரித, பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும்” என்றார்.

என்ன செய்ய வேண்டும்?

ஒரு வீட்டில் உள்ளவர்கள் குறைந்தது ஒரு நாளைக்கு ஒரு முறையாவது ஒன்றாக அமர்ந்து சாப்பிட வேண்டும். இது குழந்தையின் உணவுப் பழக்கத்தில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும் என்று குழந்தை ஊட்டச்சத்து நிபுணர் பேபி ஸ்ரீ கரண் கூறினார்.

“பெற்றோர்கள் காய்கறிகளைச் சாப்பிட்டால் குழந்தைகளும் அதைப் பார்த்து பின்பற்றும். பெற்றோர்கள் டிவி பார்த்துக்கொண்டே சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அதுவும் பெற்றோர்கள் கற்றுக்கொடுக்கும் பழக்கம்தான்.

அனைத்து சத்துகள் அடங்கிய அனைத்து உணவுப்பொருள்களையும் கொடுத்துப் பழக்க வேண்டும். குழந்தைகள் சாப்பிடமாட்டார்கள் என்று நினைத்து பெற்றோர்கள் பல சத்தான காய்கறிகளை, பழங்களை கொடுப்பதைத் தவிர்த்துவிடுகின்றனர். அது மிகவும் தவறு.

குழந்தைகளுக்கு ஒரு புதிய உணவு கொடுக்கும்போது குழந்தை பயப்படும். அனைத்து வகையான உணவையும் சாப்பிடும் நிலைக்கு வரும்போது மட்டுமே குழந்தைக்கு இருக்கும் பயம் நீங்கும். ஒரே உணவை திருப்பி திருப்பி கொடுக்கக் கூடாது என்று கிடையாது. தினமும் இட்லி கொடுத்தாலும் குழந்தைகள் அதற்கு பழகிவிடுவார்கள். பெற்றோர்களும் அதைச் சாப்பிடும்போது குழந்தைகள் தானாகவே பின்பற்றுவார்கள்.

ஒருவேளை நல்ல உணவுகளை சாப்பிட மறுக்கும்போது குழந்தையைத் திட்டுவதோ எதிர்மறையான வார்த்தைகளைக் கூறுவதோ கூடாது. ஏனெனில் அது அவர்களை உணர்ச்சி ரீதியாக பாதிக்கும். பதிலாக பெற்றோர்கள் அந்த உணவுகளை சாப்பிட குழந்தைகளை ஊக்குவிக்க வேண்டும்.

ஆறாவது மாதத்திலிருந்து உப்பு மற்றும் சர்க்கரை இல்லாத உணவு கொடுப்பது மிகவும் முக்கியம். ஆரம்பத்திலேயே சர்க்கரையை அறிமுகப்படுத்தினால், அந்தக் குழந்தை காய்கறிகளையே சாப்பிடாது. ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவை தானாக உண்ணப் பழக்கப்படுத்த வேண்டும். தோசை, இட்லியை சிறிய துண்டுகளாகச் செய்து ஒரு தட்டில் வைக்கலாம், பெற்றோர்கள் அதை குழந்தையின் முன் சாப்பிட வேண்டும், இதனால் குழந்தை தானாக உணவருந்தக் கற்றுக் கொள்ளும்.

சாப்பிடும்போது ஸ்மார்ட்போன் பார்ப்பது உடல் பருமனுக்கான முக்கிய காரணங்களில் ஒன்று. ஏனெனில் குழந்தைக்கு சாப்பிடுவதை எப்போது நிறுத்த வேண்டும் என்று தெரியாது. போன் பார்த்துக்கொண்டே அவர்கள் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ சாப்பிடுவார்கள்.

சாதாரணமாக உணவில் கவனம் செலுத்தி சாப்பிடும்போது குழந்தை எப்போது போதும் என்று நினைக்கிறதோ அப்போது நிறுத்திவிட வேண்டும். இவை அனைத்தையும் முயற்சித்த பிறகும் குழந்தை சாப்பிடவில்லை என்றால், ஏதேனும் குறைபாடுகளைக் கண்டறிய ஒரு குழந்தை மருத்துவர் அல்லது ஊட்டச்சத்து நிபுணரை அணுகுவது நல்லது” என்று ஸ்ரீ கரண் தெரிவித்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More