நீட்சியின் பெருவெளியில்
குருதி தடங்களை மிதித்தபடி
கடக்கின்றேன்
அருகே பரந்து விரிந்த கடலலைகளை
மோதிடும் கார்மேகங்கள் எதையோ
சொல்லிவிட்டு கிடக்கின்றது
என் அருமை தெய்வங்களே
என்னை மன்னியுங்கள்
நீங்கள் புதைந்த தடங்கள்
மிதித்த வண்ணம் பயணிக்கின்றேன்
பாறைகளில் பட்தெரிந்த நீர்த்துளிகளை போல்
சில்லுசில்லாக சிதறிய சதை
துண்டங்கள் என் கால்கள்
நெருடுகிறது
ஆறடிகூட இல்லை உதிரம்
கொட்டிட புதைந்த என் அவயம்
மண் இன்னும் அமைதி
விரவுவது உணர்வாய்
என்றோ ஓர்நாள் இயேசுவின்
பணிப்புரையில் உயிர்ப்பெழ
மாட்டீரோ
தாகங்கள் தணியாமல்
அலைகளும் அடங்கவில்லை
நான் கடக்கும் பாதைகளும்
நீள்கிறது
செல்லும் இடமெல்லாம்
உதிரத்துளிகள் பட்டுப்பூச்சியாய்
ஊர்கிறது
அருகே கடல் அன்னையவள்
வீசிடும் காற்றுகளை சுவாசிக்கின்றேன்
என் சொந்தங்களின் அஸ்தியை
அள்ளி வீசுகிறாள்
தொண்டைக்குழியில்
அடைபட்டுக்கிடக்கிறது
ஓ கடல் தாயே
என் சொந்தங்கள் அள்ளி குவித்து
எரிக்கப்பட்ட சாம்பல்கள்
எத்தனை ஆயிரம் தொன்களை
கரைத்துள்ளாய்
நீ வீசிடும் காற்றில் கந்தகம்
அறிவேன்
அஸ்திகளை மறைத்துள்ளாய்
இப்போதறிவேன்
எனை கடந்த மேகங்கள்
இதைத்தான் கூறவந்ததுவோ
மண்டியிட்டு கடந்தேன்
எழ முடியவில்லை
கை கூப்பி அழுதேன்
கேட்கவில்லை
உதிரம் வழிந்தோட உணர்ந்தேன்
இனியும் வாழ வழியில்லை என
என் தேசம் எங்கே
குருதி வழிந்தோடும் தடங்களை
மிதித்தித்தபடி
பெருவெளி நீட்சியாய்
நகர்கிறது.
கேசுதன்