செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் நீ எனக்கு பயங்கரவாதி | கேசுதன்

நீ எனக்கு பயங்கரவாதி | கேசுதன்

1 minutes read

 

இராணுவ சிப்பாயின் காலணி
இடுக்கில் ஒட்டிய இரத்தத்தின்
பொருமல்கள் முகிழ்த்தது

யாதுமறியும் புத்தபிரானே
உன் சிங்களன் வெறியாடிய
வினை எத்தர்மத்தில்
போதித்துள்ளாய்

எம் தேச கனா சூறையாடிய
வஞ்சகன் எங்கே?
எம் இனமானம் சிதைத்தவன்
எங்கே?

எம் குருதி வெப்பம் அடங்காமல்
அங்கலாய்க்கிறது
உயிர்த்தெழ துடிக்கிறது
வீசிடும் காற்றிடம் கூறு
என் தேசத்தில் வழியும்
குருதியின் வெப்பம்
அடக்கிடச்சொல்

என்னை பயங்கரவாதி என
முழங்கியவன் எவன்?

என்னை பயங்கரவாதியெனில்
யாம் உனை ஏது உரைப்பேன்

நான் பயங்கரவாதியெனில்
எம் இனம் அழித்த -நீ
பயங்கரவாதி

என் இன மங்கையர்
பெண்குறி சிதைத்த -நீ
பயங்கரவாதி

என் மொழியழித்து
உன்மொழி திணிக்க முயலும் – நீ
பயங்கரவாதி

என்நிலத்தில்
பாட்டன் புலிக்கொடி
இறக்கி – உன்
அதர்மக் கொடியேற்றுவாய்
கடிந்தால் நான்
பயங்கரவாதியென்பாய்

என் குழந்தை ஏதுரைத்தது
கண் திறவா பிஞ்சின் தேகம்
சுடும் தாரில் பொசுக்கிய – நீ
பயங்கரவாதி

என் கோவில் பண்பாடு விழுமியத்திற்குள்
குண்டெறிந்து நொறுக்கிய – நீ
பயங்கரவாதி

என் பள்ளிகளை நொறுக்கி
என் சக தோழமைகளை
சாய்ப்பாய் கேட்டால்
புலிமுகாம் என்பாய்
எம் பள்ளி கனவுகளை சிதைத்த
கொடூரன் -நீ
எனக்கு பயங்கரவாதி

என் திரு ஈழக்காற்றில் கந்தகம்
தோய்த்த – நீ
பயங்கரவாதி

கைதூக்கி சரணடைந்த
என் அண்ணன் அக்காமார்
கைகட்டி வெடியிட்டழித்த – நீ
பயங்கரவாதி

என் தேசமெங்கும்
புதைகுழியால் நிரப்பிய – நீ
பயங்கரவாதி

என் மக்கள் வணங்கிய
மறவர் படை துயிலும் இல்லம்
தகர்த்த – நீ
பயங்கரவாதி

விசாரணை எனும் பெயரில்
அழைத்தொழித்த -நீ
பயங்கரவாதி

என் சனம் ஒரு நேர
கஞ்சிக்கு கையேந்த -நீ
பயங்கரவாதி

என் மக்கள் சோற்றில்
மண்ணள்ளி போட்ட – நீ
பயங்கரவாதி

என் தேசமழித்து அதில்
உன்னினம் வாழவைப்பாய்
கேட்டால் நான் பயங்கரவாதி
என்கிறாய் எவ்வகையில்
நியாயம்

என் சொந்த வீட்டில்
புத்தனை அமர்த்துவாய்
கேட்டால் நான் பயங்கரவாதி
என்கிறாய் -பிரானே
உனை குடியேற்றிய – அவன்
யார் ?
எம் சகோதரர்கள் இனமழிக்க
ஒருபோதும் எத்தனிக்கவில்லை
அத்தனையும் தாங்கும்
என்னிதயம் விடுதலை
கேட்டால் பயங்கரவாதி
என்கிறாய்

என் கையில் துப்பாக்கியை தந்தவன் -நீ
இப்போது கைகளுக்கு விலங்கிட்டு
எனை பயங்கரவாதி என்பாய்
உனை எதில் அடக்குவது

ஒவ்வொரு கணங்களிலும்
கூறுவேன்
என் மூச்சடங்கும் வேளையிலும்
கூறுவேன் -நீ
பயங்கரவாதி
சிந்திடும் ஒற்றைத்துளி
இரத்தமும் கூறிடும்
நீ எனக்கு பயங்கரவாதி

என்னை நீ பயங்கரவாதியெனில்
நீ எனக்கு பயங்கரவாதி
என் இனத்திற்கு – நீ
பயங்கரவாதி
என் தேசத்திற்கு- நீ
பயங்கரவாதி.

கேசுதன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More