March 26, 2023 11:47 pm

ஒரு கெரில்லாவின் இறுதிக்கணம் | தீபச்செல்வன்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

வரிகளில் தேசக்கனவை எழுதிய
சீருடைகளை அணிந்தனர்
நேற்றைய போரில் மாண்டுபோனவர்
கல்லறைகளின் முன்னே தலைசாய்த்து
அமைதி வணக்கத்தை முடித்து நிமிர்ந்தனர்

எல்லோருடைய அழுகையையும்
துடைக்கும் அவர்களால் தான்
இறுதிக்கணத்தில் புன்னகைக்க முடியும்

எல்லோருடைய துயரையும்
துடைக்கும் அவர்களால் தான்
இறுதிக்கணத்தில் ஒளிமுகத்துடன் செல்ல முடியும்

கழுத்தில் சைனைட் குப்பி
தோளின் குறுக்கே சன்னங்களின் மாலை
துப்பாக்கியைக் கையளித்து மாண்டுபோன
தோழியின் நினைவில் மறந்தாள்
களம் செல்லத் தடுக்கும் தாயின் குரலை

துப்பாக்கியை ஏந்திக்
கையசைக்கும் விழிகளில் தேசத்தின் வரைபடம்
நேற்றைய போரில்
கொல்லப்பட்ட குழந்தைகளின் நினைவில் மறந்தான்
தந்தையைத் தேடி அழும் தன் குழந்தையை

‘நாளை மீட்கப்படும் கிராமத்தில்
நான் இல்லாது போகலாம்
அம்மாவின் பொழுது சொந்தவூரில் புலர்கையில்
சாணி தெளித்த முற்றத்தில்
செவ்வரத்தம் பூவாய் பூத்திருப்பேன்’.

முதுகுப் பொதிக்குள்
உலர்ந்துபோன உணவுப் பொட்டலம்
ஒரு குவளை குடிநீர்
பெருந்தாகத்தில் ஊடறுக்கும்
கெரில்லாவின் இறுதிக் கணத்தில்
மனமெங்கும் பரவிக் கிடந்தது
கனவு பூத்த தாய் மண்.
¤

தீபச்செல்வன்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்