பிலிப்பைன்சில் போராளிகள் 10 பேர் பலிபிலிப்பைன்சில் போராளிகள் 10 பேர் பலி

பிலிப்பைன்சில் பெரும்பான்மை முஸ்லிம்கள் வாழும் சுலு மாகாணத்தின் அருகில் உள்ள அடர்ந்த வனப்பகுதி ஒன்றில் நேற்று அந்நாட்டு ராணுவத்தினர் காவலில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு நடமாடிய அபு சயப் போராளிகளுடன் ஏற்பட்ட கடும் மோதலில் அரசு துருப்பு வீரர்கள் ஏழு பேரும், போராளிகள் 10 பேரும் கொல்லப்பட்டதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

போராளிகளின் கிளர்ச்சிகளால் சீர்குலைந்துள்ள பிலிப்பைன்சின் தெற்குப் பகுதியில் நடைபெற்ற சமீபத்திய தாக்குதல் இதுவாகும் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. படிகல் நகருக்கு அருகில் நடைபெற்ற இந்தத் தாக்குதலில் கடற்படை வீரர் ஒருவரும் பலியானதாக ராணுவ தகவல் தொடர்பாளர் லெப்டினென்ட் கர்னல் ரமோன் சகலா கூறினார்.

இந்தத் தாக்குதலுக்குப் பத்து நிமிடங்கள் கழித்து ராணுவ புறக்காவல் பகுதியில் நடைபெற்ற வெடிகுண்டுத் தாக்குதலில் ஆறு வீரர்கள் பலியானதாகவும் பலர் காயமடைந்ததாகவும் சகலா குறிப்பிட்டார். இதில் மிகவும் மோசமான நிலையில் இருந்த மூன்று பேர் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் தெற்கில் உள்ள சம்போவங்கா நகரில் இருக்கும் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். மொத்தம் சுமார் 24 கடற்படை மற்றும் ராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளதாகப் பின்னர் வந்த தகவல் தெரிவித்தது.

10 போராளிகள் இந்தத் தாக்குதலில் இறந்ததாகக் குறிப்பிட்ட ராணுவம் மீதிப் பேரைத் தேடி வருவதாகத் தெரிவித்துள்ளது. இவர்களை அபு சயப் இயக்கத்தின் தலைவர் ஹைருல்லா அப்சங் வழி நடத்திச் சென்றதாக அரசு தகவல்கள் குறிப்பிடுகின்றன. பிலிப்பைன்சில் சமீபத்தில் பணத்திற்காக நடத்தப்பட்ட ஆள்கடத்தல் விவகாரங்களில் அப்சங் தொடர்பு கொண்டிருந்ததாக ராணுவம் கூறியுள்ளது.

ஆசிரியர்