March 24, 2023 4:16 pm

2015ஆம் ஆண்டு முதல் தானியங்கி கார்களுக்கான சோதனை ஓட்டம் இங்கிலாந்தில்2015ஆம் ஆண்டு முதல் தானியங்கி கார்களுக்கான சோதனை ஓட்டம் இங்கிலாந்தில்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

இங்கிலாந்து நாட்டில் போக்குவரத்து நெரிசலால் காற்று மாசுபாடு அதிகரித்து வருவதாக சமீபத்திய தகவல்கள் தெரிவித்துள்ளன. இங்கு நிலவிவரும் அதிகமான மாசுபாடு நிலைகள் குறித்து சமீபத்தில் இங்கிலாந்து அரசினை நீதிமன்ற விசாரணைக்கு ஐரோப்பிய கமிஷன் உட்படுத்தியது.

காற்று மாசுபாட்டினைக் குறைக்கும் விதத்திலும் பாதுகாப்பினை அதிகரித்து நெருக்கடியைக் குறைக்கும் விதத்திலும் வரும் 2015ஆம் ஆண்டு முதல் தானியங்கி கார்களுக்கான சோதனை ஓட்டத்திற்கு இங்கிலாந்து அரசு தற்போது அனுமதி அளித்துள்ளது.

தானியங்கி கார்கள் குறித்த ஆராய்ச்சிக்காக 10 மில்லியன் டாலர் நிதி உதவியினை அந்நாட்டின் வணிக செயலாளரான வின்ஸ் கேபிள் அறிவித்துள்ளார். இதற்கான விண்ணப்பங்களை அனுப்புவதற்கு அக்டோபர் ஒன்றாம் தேதி இறுதி நாளாக குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் மூன்று நகரங்கள் இந்த சோதனை ஓட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டு 18 முதல் 36 மாதங்கள் வரை அங்கு தானியங்கி கார்கள் இயக்கப்படும்.

இவற்றுக்கான தொழில்நுட்பம் இரண்டு வழிகளில் ஆய்வு செய்யப்பட உள்ளன. திறமையான ஓட்டுனருடன் கூடிய தானியங்கி கார்கள் மற்றும் தன்னிச்சையாகவே செயல்படக்கூடிய கார்கள் என இரண்டு விதமாகவும் இவை சோதனையிடப்பட உள்ளன.

அதேபோல் இத்தகைய போக்குவரத்திற்கு ஏதுவாக சாலைகளின் தரமும், விதிகளும் மேம்படுத்தப்பட அமைச்சர்கள் ஒரு ஆய்வினை நடத்தவும் ஏற்பாடு செய்துள்ளனர். இங்கிலாந்தின் போக்குவரத்து அமைப்பை பாதுகாப்பாகவும், நெருக்கடியில்லாமலும், குறிப்பாக கார்பன் டை ஆக்ஸைட் வெளிப்படுவதைக் குறைக்கும்விதமாகவும் இந்தத் தானியங்கி கார்கள் மாற்றும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் கிளேர் பெர்ரி தெரிவித்தார்.

தானியங்கி கார்களின் தொழில்நுட்பத்தில் முன்னோடியாக இருக்கும்விதத்தில் இங்கிலாந்து அற்புதமாக செயல்பட்டு வருகின்றது. கார்கள், செயற்கைக்கோள்கள், பெரும் தரவு மற்றும் நகர்ப்புற வடிவமைப்பு போன்றவை எங்களின் பலமாக செயல்படுகின்றன என்று அறிவியல் அமைச்சரான கிரேக் கிளார்க் குறிப்பிட்டார்.

தற்போது தனியார் சாலைகளில் மட்டுமே அனுமதிக்கப்படும் இத்தகைய தானியங்கி வாகனங்கள் புதிய விதிமுறைகள் மூலம் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்படும்போது இங்கிலாந்தும் ஜப்பான், சிங்கப்பூர் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளின் வரிசையில் இணையக்கூடும்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்