வடக்கு மாகாண முதல்வரான சி.வி.விக்னேஸ்வரனுக்கு அதிகாரம் இல்லை- இலங்கை உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வடக்கு மாகாண முதல்வரான சி.வி.விக்னேஸ்வரனுக்கு அதிகாரம் இல்லை- இலங்கை உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

“வடக்கு மாகாண அரசுத் தலைமைச் செயலருக்கு உத்தரவிட அந்த மாகாண முதல்வரான சி.வி.விக்னேஸ்வரனுக்கு அதிகாரம் இல்லை’ என்று இலங்கை உச்ச நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பை திங்கள்கிழமை அளித்தது.

இலங்கையின் வடக்கு மாகாண அரசின் முதல்வராக உள்ள சி.வி.விக்னேஸ்வரன், அரசின் தலைமைச் செயலர் உள்பட அனைத்து துறைகளின் செயலர்கள் மற்றும் தலைமை அதிகாரிகளுக்கும், நிர்வாக வழிகாட்டு விதிமுறைகள் என்ற பெயரில் ஒரு சுற்றறிக்கையை  அனுப்பினார்.

அதன்படி, தலைமைச்செயலர் உள்பட அனைத்து உயர் அதிகாரிகளும் இனி அந்த மாகாண ஆளுநரிடம் நேரிடையாக தொடர்பு கொள்ளக் கூடாது என்றும் அமைச்சர்கள் கொண்ட குழுக்கள் மூலமாகவே தொடர்பு கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டிருந்தது. இதை எதிர்த்து தலைமைச்செயலர் விஜயலட்சுமி ரமேஷ் அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், “எனது பணியில் குறுக்கிடும் வகையில் முதல்வர் விக்னேஸ்வரன் செயல்படுகிறார். எனது பதவியைப் பறிக்க நினைக்கிறார்’ என்று குறிப்பிட்டிருந்தார். அந்த மனு மீதான விசாரணை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பாக திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், “தலைமைச் செயலருக்கு உத்தரவிடும் அதிகாரம் முதல்வருக்கு கிடையாது. தேசிய அரசுப் பணிகள் ஆணையத்துக்குத்தான் அந்த உரிமை உள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது.

இந்தத் தீர்ப்பால், வடக்கு மாகாணத்தில் ஆளும் தமிழ் தேசிய  கூட்டமைப்பு கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

ஆசிரியர்