புலிகளை ஆதரித்ததாக மலேசியாவில் கைதான அனைவரும் விடுதலை!

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு தெரிவித்தது தொடர்பில் சொஸ்மா சட்டத்தின் கீழ் மலேசியாவில் கைது செய்யப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

இவர்கள் மீதான குற்றச்சாட்டை அரசு மீளப்பெற்றதை அடுத்து அனைவரும் விடுதலையாகினர்.

குற்றஞ்சாட்டப்பட்ட 9 பேர் ஏற்கனவே விடுவிக்கப்பட்ட நிலையில் இறுதி இரண்டு நபர்களான பி.சுப்ரமணியம் மற்றும் எஸ். தனகராஜ் ஆகியோரை இன்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் விடுதலை செய்தனர்.

சட்டத்துறை தலைவர் தோமி தோமஸின் உத்தரவைப் பெற்றதைத் தொடர்ந்து வர்த்தகரான 58 வயதுடைய சுப்ரமணியம் மற்றும் 27 வயதுடைய தனகராஜ் ஆகியோருக்கு எதிரான வழக்கை தொடர்வதில்லை என முடிவு செய்ததாக அரசு தரப்பு வழக்கறிஞர்களான முகமட் பர்ஹான் அலிப் அகமட் மற்றும் முகமட் அர்ப் மின்ஹாட் ஆகியோர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து அவ்விருவரையும் விடுவிக்கும் உத்தரவை உயர்நீதிமன்ற நீதிபதி முகமட் ஜைனி மஸ்லான் மற்றும் முகமட் நஸ்லான் முகமட் கஷாலி பிறப்பித்தனர்.

சுப்ரமணியம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ்.செல்வம், காயத்திரி தோமஸ் மற்றும் பினாங்கைச் சேர்ந்த களஞ்சியக் காப்பாளரான தனகராஜ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அகிலன் ஆகியோரும் குற்றச்சாட்டை மீட்டுக்கொள்வதற்கு சட்டத்துறை தலைவர் முன்வந்ததை சுட்டிக்காட்டினர்.

முகநூல் மூலம் தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு தெரிவித்தாக சுப்ரமணியம் மற்றும் தனகராஜ் மீது சொஸ்மா சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதன் கீழ் கைது செய்யப்பட்ட அவர்கள் கடந்த நான்கு மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே விடுவிக்கப்பட்டுள்ளனர்.

ஆசிரியர்