Thursday, March 28, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சில நிமிட நேர்காணல் சினம்கொள் தமிழ் சினிமாவில் தனித்துவமாயிருக்கும்! ஒளிப்பதிவாளர் பழனிகுமார் மாணிக்கம் 

சினம்கொள் தமிழ் சினிமாவில் தனித்துவமாயிருக்கும்! ஒளிப்பதிவாளர் பழனிகுமார் மாணிக்கம் 

4 minutes read

யாழ்ப்பாணத்தில் படப்பிடிப்பில்

வானவராயன் வல்லவராயன், பகல், மாணிக், மறந்தேன் மன்னித்தேன் முதலிய தமிழ்த் திரைப்படங்களிலும் குண்டல்லோ கோதாரி, ஜோரு, துண்டரி, பாண்டவலு பாண்டவலு தும்மிதே முதலிய தெலுங்குத் திரைப்படங்களிலும் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய பழனிகுமார் மாணிக்கம் சினம்கொள் என்ற ஈழம் குறித்த திரைப்படத்திலும் பணியாற்றியுள்ளார். தமிழக சினிமா பகைப் புலத்தை தனது கமராக் கண்கள் வழியே காண்பித்த பழனிகுமார் மாணிக்கத்திற்கு இத் திரைப்படம் புதியதொரு அனுபவத்தை வழங்கியுள்ளது. தொடர்ந்தும் பல்வேறு திரைப்படங்களில் ஒளிப்பதிவு பணி புரிந்து வரும் பழனிகுமார் மாணிக்கம், வணக்கம் லண்டனுக்கு அளித்த நேர்காணல்

 சினம்கொள் படத்தில் பணியாற்றிய அனுபவத்தைக் குறிப்பிடுங்கள்?

சினம் கொள் அது ஒரு போராளி பற்றிய கதை. அதில் நடித்தவர்களை நடிகர் நடிகைகள் என்று மட்டும் சொல்ல முடியாது. அந்தந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்தார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.  அங்கு இருந்த உதவி இயக்குநர்கள் அனைவருக்கும் இந்த சினிமா புதியது ஆனால் எங்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் ஒரு மேனேஜர்கள் போல செய்து கொடுத்தார்கள். அங்கு உள்ள நமது மக்கள் அனைவரும் எங்களுக்கு ஆதரவாக இருந்தனர்.

புதியது அனுபவம் என்னவென்றால் எங்களுக்கு வந்த லைட் மேன் மற்றும் ஜிம்மி ஜிப் ஆபரேட்டர் கலை இயக்குனர் இவர்கள் அனைவரும் சிங்களவர்கள். அவர்களுக்கு சிங்களம் மட்டுமே தெரியும் எங்களுக்கு சிங்களம் தெரியாது. ஆனால் அவர்களும் எங்களுக்கு உதவியாக இருந்தார்கள். இதுதான் இந்த சினிமாவில் மிக பெரிய அனுபவமாகும்.  இன்னொன்று படத்தின் கிளைமாக்ஸ் காட்சியின் போது படபிடிப்பு முடிந்து அனைவரும் புறப்பட்டு விட்டார்கள்.Image may contain: one or more people and text

அந்த இடம் கல்முனை என்று ஒரு தீவு. அனைவரும் படகில் தான் யாழ்ப்பாணம் வரமுடியும். அதுவும் இருட்டு முன்பு கரைக்கும் வரவேண்டும். இல்லை என்றால் பாதை தெரியாது. சில இடங்களில் தண்ணீர் மிக தாழ்வாக இருக்கும் படகு மணலில் மாட்டிக்கொள்ளும் என்றார்கள். ஆனால் நாங்கள் (நான் இயக்குனர் மற்றும் உதவி இயக்குநர்கள்)அமர்ந்த படகு ரிப்பேர் ஆகி அங்கே நின்று விட்டது. பின்பு வேறு ஒரு படகு வந்து எங்கள் கரையில் நாங்கள் சேரும் போது இரவு 10 மணி ஆகிவிட்டது. அதுவும் ஒரு மிகப்பெரிய அனுபவம் தான்.

ஈழத்திற்கு வந்தபோது ஏற்பட்ட உணர்வு?

கிளிநொச்சியில் படப்பிடிப்பின் போது

சிறு வயதில் இலங்கை வானொலியில் ஈழத்தை பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். அங்கு உள்ள ஊர்களின் பெயர்களை சொல்லும் போது (யாழ்ப்பாணம் , வவுனியா, கிளிநொச்சி, மட்டக்களப்பு, திரிகோணமலை, முள்ளிவாய்க்கால், முல்லைத்தீவு)நாம் என்றாவது ஒரு நாள்அங்கு சென்று அந்த ஊர்களையும் அங்கு உள்ள நம் சொந்தங்களையும் பார்க்க வேண்டும் என்று மிகவும் ஆர்வமாக இருந்தது. ஆனால் ஒரு படப்பிடிப்புக்காக 2004 ஆண்டு இலங்கை செல்ல வேண்டும் என்று சொன்னார்கள் உடனே பாஸ்போர்ட் எடுத்தேன்.ஆனால் சில காரணங்களால் செல்ல முடியவில்லை பின்பு தான் இயக்குனர் ரஞ்சித் சார் நட்பு ஏற்பட்டது. அவர் என்னிடம் நிறைய கதைகள் சொல்லியிருக்கிறார். அது எல்லாமே உணர்வு பூர்வமான நல்ல கதைகள். அப்படித்தான் ஒரு நாள் எனக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு நான் ஒரு படம் இயக்குகிறேன், அது ஈழத்தில் தான் முழு படப்பிடிப்பும் என்றார்.

நீங்கள் அதற்கு ஒளிப்பதிவாளர் என்றார். நான் வேறு எதுவும் சொல்ல வில்லை. எப்பொழுது நான் வரவேண்டும் என்று கேட்டேன் 2004 ல் போகவேண்டும் என்று எடுத்த பாஸ்போர்ட் 2017 ல் எனக்கு அந்த வாய்ப்பளித்த இயக்குனர்க்கு தான் நன்றி சொல்ல வேண்டும். அங்கு சென்று நான் பார்த்த படப்பிடிப்பு நடந்த இடங்கள் எல்லாமே யுத்தம் நடந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள். ஒவ்வொரு இடத்திற்கு போகும் போது எனது உடல் என்னையும் அறியாமலே சிலிர்த்தது. நாம் சிறுவயதில் போகவேண்டும் என்று ஆசைப்பட்ட இடங்களுக்கு வந்தது சந்தோஷம். அது ஒரு புறம் இருந்தாலும் என்னையும் மீறிய ஒரு விதமான வலி என்னுள் இருந்தது மறக்க முடியாத நினைவுகள் உணர்வுகள்.

தமிழக சினிமாக்களில் சினம்கொள் எப்படி தனித்துவம் பெறுகின்றது? அல்லது வேறுபடுகின்றது?

நல்லூரில்..

தமிழகத்தில் உள்ள சினிமாவில் கொஞ்சம் மசாலா இருக்கும்  இந்த மாதிரியான படங்களும் ஒன்றிரண்டு வருகிறது. ஆனால் ” சினம்கொள் ” ஒர் உணர்வு பூர்வமான உண்மை கதைகளை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படம். மேலும் ஈழத்தில் வாழ்ந்த மக்கள், யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் சற்று அதிகமாக அந்த உணர்வு ஏற்படும். ஆதனால் தமிழக சினிமாவில் இருந்து சற்று வேறுபட்டே தான் இருக்கும். தமிழ் சினிமாவில் தனித்துவமான படமாக இருக்கும்.

தற்போது என்னென்ன படங்களில் பணியாற்றுகிறீர்கள்?

நான் தற்போது இயக்குனர் சேரன் அவர்களிடம் உதவி இயக்குனராக இருந்த திரு. எழில் பாரதி அவர்களின் இயக்கத்தில் பெயர் வைக்க படாத ஒரு படமும் மற்றும் ஹாலிவுட் பெண் இயக்குனர் திருமதி ராதா பரத்வாஜ் அவர்களின் இயக்கத்தில் space mom’s என்னும் ஆங்கிலப் படம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறேன்.

நேர்காணல்வணக்கம் லண்டனுக்காக தீபன்

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More