2011 ICC ஆண்கள் கிரிக்கெட் உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் சந்தேகம் கொள்வதற்கு காரணமே இல்லை என, சர்வதேச கிரிக்கெட் சபையின் ஊழல் தடுப்பு பிரிவின் பொது முகாமையாளர் அலெக்ஸ் மார்ஷல் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில், முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே முன்வைத்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் பதிலளித்துள்ள, சர்வதேச கிரிக்கெட் சபையின் ஊழல் தடுப்புப் பிரிவு இவ்வறிக்கையை வெளியிட்டுள்ளது.
குறித்த குற்றச்சாட்டுகளை ஐ.சி.சி ஒருமைப்பாடு பிரிவு ஆராய்ந்துள்ளதாகவும், குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் எவ்வித ஆதாரமும் தங்களுக்கு வழங்கப்படவில்லை அல்லது ICC ஊழல் தடுப்பு விதிகளின் கீழ் விசாரணைகளை ஆரம்பிக்க தகுதியான காரணங்களும் இல்லை என அலெக்ஸ் மார்ஷல் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக அப்போதைய இலங்கை விளையாட்டு அமைச்சரால் ICC இற்கு எந்தவொரு கடிதமும் வழங்கப்ட்டதாக பதிவுகள் இல்லை எனவும், அப்போதைய ICC யின் சிரேஷ்ட அதிகாரிகளும் அவ்வாறான எவ்வித கடிதங்களும் கிடைக்கப் பெறவில்லை என உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அவ்வாறு கிடைத்திருந்தால் அவை விசாரணைகளுக்கு வழி வகுத்திருக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், 2011 ICC ஆண்கள் கிரிக்கெட் உலகக் கிண்ணத்தின் இறுதிப்போட்டியின் நேர்மைத்தன்மையை சந்தேகிக்க எமக்கு எந்தவித காரணங்களும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“இவ்வனைத்து குற்றச்சாட்டுகளையும் நாங்கள் மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளோம், இது தொடர்பில் உறுதிப்படுத்தப்பட்ட ஏதேனும் ஆதாரங்கள் கிடைக்குமானால், நாம் தற்போதுள்ள நிலையிலிருந்து விலகுவது தொடர்பில் ஆய்வு செய்வோம்” என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த போட்டியோ அல்லது வேறு ஏதேனும் போட்டியோ ஆட்ட நிர்ணயத்திற்கு உட்பட்டது என்பதற்கு யாரிடமாவது ஆதாரம் இருக்குமானால், ICC ஒருமைப்பாட்டு குழுவுடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்வதாக, அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.