Thursday, April 18, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரைசிறப்பு கட்டுரை தன்பெயரை தருமம் செய்த ஆரையம்பதி | பிரசாத் சொக்கலிங்கம்

தன்பெயரை தருமம் செய்த ஆரையம்பதி | பிரசாத் சொக்கலிங்கம்

11 minutes read

இடங்களைக் குறிக்கும் பெயர்கள், அந்த இடத்தின் வரலாறு, மொழி, மானிடவியல், பண்பாடு, நாட்டார் வழக்கியல் போன்றவற்றிக்கான ஆய்வு மூலங்களில் பெறுமதியான பங்களிப்பை வழங்குவனவாகும்.

மூதாதையர்கள், அவர்களின் சமூக நடைமுறைகள், சடங்குகள், மரபுகள், நிர்வாக ஒழுங்குகள், அரசியல் வரலாறு, தரைத்தோற்றம், குடியேற்றம், நிலவளம், தொழில்வளம் போன்ற பல்வேறு தகவல்களை இந்த இடப்பெயர்களை முன்னிறுத்தி அறிந்து கொள்ளலாம் என்பதால் இவற்றின் மானுடவியல் முக்கியத்துவம் தவிர்க்க முடியாததாகின்றது.

இந்தப் பின்னணியில், இன்றைக்கு ஆரையம்பதி என்ற பெயர் கொண்டு அழைக்கப்படும் பிரதேசம் / ஊர் / இடம் வரலாற்றில் எவ்வகையான மாற்றங்களைக் கண்டபடி பயணித்திருக்கின்றது என சுருக்கமாக பார்ப்போம்.

ஆரையம்பதி

முன்னர்“ஆரைப்பற்றை என அழைக்கப்பட்ட கிராமம் திரு.த.நவரெட்ணராஜா மண்முனைப்பற்று பிரதேச சபை தவிசாளராக பதவி வகித்த காலமான 1992 இல்,  ஆரையம்பதி என உத்தியோக ரீதியாக மாற்றப்பட்டதிலிருந்து,  ஆரையம்பதி என அழைக்கவும் அறியவும் படலாயிற்று.  இது பரவலாக அறியப்பட்டதொரு தகவலாகும். ஆனாலும் இவ்வூரின் பெயரில் பல வரலாற்றுத் உண்மைகள் மறைந்து கிடக்கின்றன.

முதலாவது, 1992 இல் உத்தியோகபூர்வமாக மாற்றம் செய்யப்பட்ட ஆரையம்பதி எனும் பெயர் புதிதாக உருவாக்கப்பட்டுச் சூட்டப்பட்ட பெயர் அல்ல. அப்பெயரின் பழமையே நூற்றாண்டு தாண்டியவொன்றாகும்.   1941, 1948 களில் முறையே திருநீலகண்ட விநாயகர்,  கந்தசுவாமி ஆலயங்களின் கும்பாபிஷேக பிரசுரங்களில் ஆரையம்பதி என ஊர்ப்பெயர் குறிப்பிட்டிருப்பதும், 1911 ஆம் ஆண்டு தமிழ்நாடு தருமபுரியைச் சேர்ந்த ம.ற.ற.ஸ்ரீ தணிகாசலமுதலியார் அவர்கள் பாடிய ஆரையம்பதி திருநீலகண்ட விநாயகர் பதிகத்தில்

“வாவிகட் சூழ்வரு மேவியம் புரையும்

ஆரையம் பதியெனு மூரசு முடையோன்…..” 

(திருநீலகண்டர் அருளமுதம்  – 2008 : பக்  – 34)

என ஆரையம்பதி குறித்து காட்டப்படுவதும்,  1907 ல் கட்டப்பட்ட திருநீலகண்ட விநாயகர் கோயில் மணித்தூணில் ஆரையம்பதி என பொறிக்கப்பட்டிருந்தது என்ற தகவலும்,  அரச பதிவேடுகளில் ஆரைப்பற்றை என இக்கிராமம் குறிப்பிடப்பட்டிருந்தாலும் நூற்றாண்டுகளுக்கு முன்னர் மக்கள் தங்கள் கிராமத்தின் பெயரை “ஆரையம்பதி” என்றே அழைத்து வந்துள்ளார்கள் என்பதனை எடுத்துக்காட்டுகின்றது.

ஆரையம்பதியின் குறித்த சில  குடிகளின் பூர்வீகத் தொடர்பு மதுரையம்பதி (மதுரை) என்பதனால் ஆரைப்பற்றை,  ஆரையம்பதி என மாற்றமடைந்தது என திரு.க.சபாரெத்தினம் (ஆரையம்பதி மண் – 2013 : பக்  -16 ) முன்வைக்கும் கருத்தும் இவ்விடத்தில்  பதிவு செய்வது பொருத்தமானதாகின்றது.

ஆரைப்பற்றை

இரண்டாவது விடயம், ஆரைப்பற்றை என்ற இக்கிராமத்தின் முன்னய பெயரும் பழமை வாய்ந்ததொன்றாகும். மாரி காலத்தில் நீரோடுகின்றகோடை காலத்தில் வறண்டு ஆரைச்செடி படர்ந்து காணப்படும் வடிச்சல்கள் அல்லது நீரோடைகள் அதிகமாக கொண்ட இடமாக இருந்தமையால் அதாவது ஆரைச்செடி பற்றைகள் அதிகமாக இருந்தமையால் ஆரைப்பற்றை என்ற பெயர் உருவாகிற்று என்பது பெரும்பாலோனர்களது கருத்து. செங்குத்தாக வளர்ந்து தண்டில் நான்கு கால் வட்ட இலைகளாக்  கொண்ட மிகவும் சிறிய செடி ஆரைச் செடியாகும். மூலிகைத்தன்மை  வாய்ந்த இச் செடி  Marsilea quadrifolia என்ற தாவரப் பெயரால் அழைக்கப்படுகின்றது.

சங்க இலக்கியமான அகநானூறில், “வெள்ளை வெண் மறி… மன்றுழைக் கவை இலை ஆரின் அம் குழை கறிக்கும் சீறூர்” (அகநானூறு 104 : 9-12) என இவ் ஆரைச் செடி பற்றிக் கூறப்பட்டுள்ளது. அதாவது “வெள்ளை மறியாடுகள் பொது மண்டபமொன்றின் அருகே வளர்ந்துள்ள ஆரின் இருகவர் இலைகளை உண்ணும் சிற்றூர்” என்பது இதன்பொருள். அத்துடன் “ஆர மார்பின் சிறு கோல் சென்னி” (நற்றிணை 265: 4-6)  என ஆர் அல்லது ஆத்தியே சோழ மன்னனின் குலவிருதுச் சின்னம் என்பதற்கான சான்றை நற்றிணையில் காணலாம்.

இதை ஆரைச்செடி என்று கொண்டால், கோரைப்புல் அடர்ந்து கிடந்த குளத்தில் கோடைகாலத்தில் ஆரைச்செடிகள் வளர்ந்ததை திருமந்திரம், “கோரை எழுந்து கிடந்த குளத்தினில் ஆரை படர்ந்து தொடர்ந்து கிடந்தது” (திருமந்திரம் 29:11) என்று ஒரு மெய்யியல் குறியீடாகப் பாடுகிறது. இவ்வாறு பழந்தமிழ் இலக்கியங்களில் ஆரை செடி குறித்து காணப்படும் குறிப்புக்கள் அதன் சிறப்புக்கும் பழைமைக்கும் சான்றுகளாகின்றன.

“ஆரை” என்பது கோட்டை மதில் அல்லது அரண் என்றும் பொருள்படும். ஆரல்வாய்மொழி என்பதில் இருந்து திரிவடைந்த அரவாய்மொழி மற்றும் நாமக்கல் என்பதின் பழைய பெயர் ஆரைக்கல் என்றும் தமிழ்நாட்டில் காணப்படும்  ஆரை என்கின்ற ஈற்றும்பெயர் அரண் என்பதில் இருந்து தோன்றியிருக்கலாம் என்றும் பேராசிரியர் பாலசுந்தரம் முன்வைக்கும் கருத்துக்களோடு, இன்றைய ஆரையம்பதியில் ஆரைப்பற்றை தெரு என அழைக்கப்படும் தெருவினுடாக ஒடும் ஒடையின் அமைவிடம் வரைதான் மண்முனை ராட்சியத்தின் குடியிருப்பு இருந்திருக்கலாம் (மூனாக்கான – 2016) என கூறப்படும் கருத்தை முன்வைத்து அன்றைய மண்முனை ராட்சியத்தின் எல்லைகளாக அல்லது  அரணாக குறித்த ஒடை காணப்பட்டதா? மண்முனையின் வீழ்ச்சியின் பின் புதர் மண்டியதால் ஆரைப்பற்றை ஆனதா என இயல்பாக எழும்  சந்தேகமும் இங்கு மறுதலிக்க முடியாதவை.

இவற்றுக்கு அப்பால் ஆரைப்பற்றை என்பது “அறப்பத்த” என்கின்ற சிங்கள சொல்லின் திரிபு என க.சபாரெத்தினம் முன்வைக்கும் கருத்தை (ஆரையம்பதி மண் – 2013 : பக்  -16 ) சிங்கள மொழியின் தோற்றம்,  பூர்வீக மட்டக்களப்பில் சிங்கள மொழியின் செல்வாக்கு என மறுப்பதற்கான  காரணிகள் பலவுள்ளன.

பொதுவாக நீர் வழிந்தோடு ஒடைகளாலும் அதன் கரைகளில் ஆரை தாவரம் படந்திருப்பதாலும் மட்டக்களப்பு தமிழில் ஆரைப்பற்றை என அழைக்கப்பட்டிருக்கின்றதென்பதே சரியானதான அமைகின்றது.

ஆரையம்பதியல் காணப்படும் சமூக கட்டமைப்பு ஒழுங்கு முறையால் குறித்த சமூகங்களின் பெயரால்  “சாதிப்பெயர்“ தெரு என அழைக்கப்படும் முறைமை காணப்பட,  பெரும்பான்மை சமூகமான பரதவர் சமூகப்பிரிவான குருகுலத்தோர் (கரையார்) வாழ்ந்த தெருக்கள் முகத்துவாரத் தெரு, நடுத் தெரு, ஆரைப்பற்றை தெரு என அழைக்கப்படலாயிற்று.  இதில் முகத்துவாரத் தெரு என்பது 1924 களுக்கு முன்பு அதாவது கல்லடிப்பாலம் அமைக்கப்படும் வரை ஊருக்கு முகமாகவும் நுழைவாயிலாகவும் காணப்பட்டதால் (மட்டக்களப்பு வாவியுடான போக்குவரத்து அக்காலத்தில் காணப்பட்டதும் தீர்வைத்துறை இந்த தெருவில் அமைந்திருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது) ஆரைப்பற்றை தெரு என்பது மேலே கூறப்பட்ட ஆரை ஒடை குறுக்கறுத்து செல்லும் தெரு என்பதனாலும்,  நடுத்தெரு என்பது இரண்டு தெருக்களுக்கும்  மத்தியில் அமைந்திருந்த காரணங்களாலும் அழைக்கப்படலாயிற்று. இத் தெரு முறையை வகுத்து ஒழுங்கமைத்த பெரியர் ஸ்ரீமான் கதிரவேற்பிள்ளை பெருக்குதோர்  1858 இல் இறந்தார் என்ற தகவலும் (ஏட்டுக்குறிப்பு , ஆரையூர் கந்தன் – 1999 :  பக் –  46),  ஸ்ரீ கந்தசுவாமி கோயில் உற்சவம் சீராக நடப்பதற்கு இத் தெரு முறை உருவாக காரணமாகின்றது என்பதைனையும் கருத்தில் கொண்டு ஆரைப்பற்றை எனும் சொல்லாடல் 1800 களில்  தோற்றம் பெற்றது என கருத முடியும்.

இப்பிரதேசம் ஆரைப்பற்றை என்று 1872 ஆம் ஆண்டு அரசால் பிரகடனப்படுத்தப்படும் வரை காத்தான்குடி என்றே அழைக்கப்பட்டு வந்தது (ஏட்டுக்குறிப்பு, ஆரையூர் கந்தன் – 1999 : பக் – 46). மற்றொரு முக்கியமான விடயமாகும்.

1871 சனத்தொகை கணக்கெடுப்பில் ஆரைப்பற்றை கிழக்கு, ஆரைப்பற்றை மத்தி, ஆரைப்பற்றை மேற்கு என மூன்று பிரிவுகளாக குறிப்பிடப்படும் ஆரைப்பற்றை (Arappettei) என்ற பெயரை (Census – 1873 : pg – 78) அதற்கு முன் அதாவது  1816 இல் மேற்கொள்ளப்பட்ட சனத்தொகை கணக்கெடுப்பில் அவதானிக்க முடியவில்லை. மேலும் 1892 இல் வெளியிடப்பட்ட இலங்கை வரைபடங்களில் குறித்துகாட்டப்பட்ட ஆரைப்பற்றை (Arappettei) 1788 இல் வெளியிடப்பட்ட வரைபடத்தில் குறித்துக்காட்டப்படவில்லை என்பதும்  அவதானத்திற்குள்ளாகின்றது.

மட்டக்களப்பின் பழமையான கண்ணகை அம்மன் கோயில்கள் சார்ந்து பாடப்படும் ஊர்சுற்றுக்காவியத்தில்

நன்நில மதிக்க வரு காத்தநகர் தன்னில் வாழ்

நளினமல ரணயபத நடனசுந் தரியே …… 

(பத்தினி வழிபாடு – 1978  : பக் – 7)

என ஆரையம்பதி கண்ணகை அம்பாள் பாடப்படுவது ஆரையம்பதி, காத்தான்குடியிருப்பு என்ற பெயரிலே அழைக்கப்பட்டது என்பதற்கான இலக்கிய சான்றாகின்றது.

மேலும் 1788 இல் வெளிவந்த வரைபடத்தில் காத்தான்குடியிருப்பு (Katancoedierpoe) மட்டும் குறித்து காட்டப்பட்டிருப்பதும், 1814 அரச சனத்தொகை கணக்கெடுப்பில் இன்றைய ஆரையம்பதிக்கு இரண்டு பக்கமும் அமைந்துள்ள கிராமங்களான தாளங்குடா, நாவற்குடா குறிப்பிடப்பட, ஆரைப்பற்றை எனும் ஊர் குறிப்பிடப்படாமையும், காத்தான்குடியிருப்பு (Katancoedierpoe) குறிப்பிடப்பட்டுள்ளமையும். (Population of Ceylon – 1816  :  pg – 118 ) இன்றைய ஆரையம்பதியின் பழைய பெயர் காத்தான்குடியிருப்பு என்பதை வரையறுக்க ஏதுவாகின்றது.

இரு வேறுபக்கங்களில் தமிழர் மற்றும் இஸ்லாமியர்கள் வாழ்ந்த காத்தான்குடியிருப்பு என அழைக்கப்பட்ட இக்கிராமத்தில், இஸ்லாமியர் வாழ்ந்து பக்கத்திற்கு காத்தான்குடி என்ற பெயரை தொடர்ந்தும் பயன் படுத்தப்பட, தமிழர்கள் வாழ்ந்த பகுதிக்கு ஆரைப்பற்றை தெரு எனும் தெருவின் பெயரை ஊர் முழுவதற்கும் சூட்டி யிருக்கின்றனர்  என்பது மேற்படி தகவல்கள் மூலம் புரிந்துகொள்ள முடியும்.

வெருகல் ஆற்றில் இருந்து குமுக்கன் ஆறு வரையில் நீண்டு இருந்த மட்டக்களப்பு 1960 இல் அரசியல் காரணங்களுக்காக மட்டக்களப்பு – அம்பாறை என அரசால் பிரிக்கப்பட்ட போது அம்பாறை என்கின்ற இடப்பெயர், மாவட்டம் ஒன்றின் பெயராக மாற்றமடைந்தது என்ற நம்மால் அறியப்பட்ட உண்மையானது காத்தான்குடி இரண்டாக பிரிக்கப்பட்ட போது ஆரைப்பற்றை என்ற தெருப்பெயர் குறித்த கிராமத்தின் பெயராகியது என்பதற்கு மிகச்சிறந்த உதாரணமாக கொள்ளலாம்.

மேலும் தமிழ் –  முஸ்லீம் கிராமமான கருங்கொடித்தீவு, பிற்காலத்தில் மட்டக்களப்பின் பற்றுகளில் ஒன்றான அக்கரைப்பற்று என்ற பெயரைச் சூடிக்கொள்ள, இன்று அப்பெயர் முஸ்லீம்கள் வாழும் பகுதியையே பிரதானமாகக் குறித்து நிற்பதையும், கருங்கொடித்தீவு தமிழர் வாழ்ந்த இடம், இருபெயரையுமே இழந்து, இன்று ‘ஆலையடிவேம்பு’ என்ற  பெயரால் அறியப்படுவதையும் இங்கு இணைத்துப் பார்க்கலாம்.

காத்தான்குடியிருப்பு

இன்று காத்தான்குடி எனும் பெயர் அரசியல் மயப்படுத்தப்பட்டு உரிமைப் பிரச்சனையாகப் பேசப்படும் நிலையில், காத்தான்குடி என்ற பெயருக்கான காரணத்தையும் தேடுவது இங்கு அவசியமாகும்.

ஆரையம்பதி கந்தசுவாமி கோயில் வரலாற்றை சொல்லும் ஏட்டுப்பிரதி,  காத்தான் எனும் பெயருடைய வேடன் இருந்தான் என்றும்  இவனது தொழில் மீன்பிடித்தல் மற்றும் வேட்டையாடல் என்றும் இவன் வசித்திருந்த காலம் 1692 எனவும் அதாவது கலிபிறநது 4794 என கூறும் தகவலும், குறித்த காத்தான் வழிபட்ட லிங்க வடிவிலான முகூர்த்தமே ஆரையம்பதி கந்தசுவாமி கோயில் தோற்றுவாய்க்கு காரணமாயும் அமைந்திருக்கின்றது என்பதும் இங்கு கவனத்தில் கொள்ளப்படவேண்டியது.

காத்தான் என்ற வேடன் வாழ்ந்த இடமாகையால் காத்தான்குடி என பெயர் பெற்ற இக் கிராமம், மட்டக்களப்பில் இருந்து 3 மைல் தொலைவில் உள்ளது. என 1884 இல் வெளிவந்த இலங்கை பஞ்சாங்கத்தை ஆதாரப்படுத்தி பதிவு செய்கின்றார், மட்டக்களப்பு வரலாற்றை முதன்முதலில் எழுதிய எஸ்.ஒ.கனகரெத்தினம் (Manograph of Batticaloa – 2015 2nd edsion : pg – 121)

பழுவன், களுவன், புலியன், மஞ்சன், காங்கேயன் என்கின்ற வேடர்களின் பெயரால் பழுகாமம், களுதாவளை, புளியந்தீவு, மஞ்சன்தொடுவாய், காங்கேயன்ஒடை போன்ற இடப் பெயர்கள் அடையாளப்படுத்தப்படுவது போல காத்தன் என்கின்ற வேடுவத்தலைவன் குடியிருந்த இடம் காத்தான்குடியருப்பு என அழைக்கப்பட்டிருக்கின்றது என்பதே சரியான காரணமாக அமைகின்றபோதிலும் காத்தானின் காலம்பற்றிய கணிப்புக்கள் முன்பின் முரண்படுகின்றன.

1692 என ஏட்டுப்பிரதி சொல்ல திரு.க.இராஜரெத்தினம் 1612 என குறிப்பிடுகின்றார் ( ஆரையூர் கந்தன் – 1999 : பக் -32).  இவற்றை விட கிடைக்கும் ஒல்லாந்தர் கால குறிப்பு மிகவும் முக்கியமானதாகவும் காலக்கணிப்புக்கான தீர்வாகவும் அமைகின்றது.

1664 – 1675 வரை இலங்கையின் டச்சு ஆளுநராக பதவி வகித்தவர், ரைக்லொவ் வொல்கேர்ட்ஸ் வான்கூன்ஸ் (Rijcklof Volckertsz. van Goens). ஒல்லாந்து அதிகாரியான வான்கூன்ஸ், தன் அறிக்கையில் ஒரு குறிப்பைக் தருகின்றார்.

they ware not futher occupied than a narrow strip of land, stretching from the islet of Poelian to the fisher’s village named Cattencoedereripo, situated 3 hour’s journey from there on the seashore, and subsequently,……….

அதாவது

“போர்த்துக்கேயரால் மிகச் சிறிய நிலப்பரப்பொன்றையே இங்கு கைப்பற்றிக்கொள்ள முடிந்திருந்தது. புலியனின் தீவிலிருந்து கடற்கரையோரமாக மூன்று மணிநேரப் பயணத் தூரத்தில் இருந்த மீனவர் கிராமமான காத்தான்குடியிருப்பு வரையே போர்த்துக்கேயர் ஆதிக்கம் செலுத்தினர்.”

கீழைக்கரையில் போர்த்துக்கேயரின் ஆதிக்கம் பற்றிய குறிப்பாக இருந்தாலும் இக்குறிப்பில் வரும் “மீனவர் கிராமமான காத்தான்குடியிருப்பு” என்பது நமக்கு சொல்லும் சேதிகள் முக்கியமானதாகின்றன.

காத்தான்குடியிருப்பு மீனவர் என்று நெய்தல் குடிகளான குருகுல சமூக மக்களையே அவர் குறிப்பிடுவது இன்றைய ஆரையம்பதியை சுட்டிநிற்கின்றது என்பதோடு, வொல்கேர்ட்ஸ் வான்கூன்ஸ் ஆளுநராக பதவி வகித்த காலம் 1664 – 1675 என்பதனை கொண்டு  காத்தான்குடியிருப்பு என்ற கிராமத்தின் பெயர்  1664  க்கு பல ஆண்டுகளுக்கும் போத்திகேயர் காலம் அல்லது அதற்கு முந்தியது என நம்பிக்கை கொள்ளலாம். இதன் அடிப்படையில் காத்தான் என்கின்ற வேடன் வாழ்ந்த  காலமும் 1600களுக்கு முந்தியவை என்பது உறுதியாகின்றது.

காத்தனின் காலத்திற்கு முன் ஆரையம்பதி

ஆரையம்பதி கிராமத்தின் தோற்றத்தை ஈழத்துப்பூராடனார் செல்வராசகோபால் அவர்களைப் பின்பற்றி க. சபாரெத்தினம் போன்றவர்கள் கி மு 2 ஆம் நுாற்றாண்டு எனவும்,  மட்டக்களப்பு பூர்வகுடிகளான நாகர்களுடன் (குருகுல நாகர்) என குறித்து க.அமரசிங்கம்(மட்டக்களப்பு தமிழர் பண்பாட்டு மரபுகள் 2015 : பக்–50) க.இராஜரெத்தினம் (பிறந்த மண்ணில் பெற்ற சுகந்தம் 2001 : பக்–46) போன்றவர்கள் நாகர் காலத்துடனும்,  இன்னும் சிலர் உலகநாச்சி காலமான  3 ஆம் நுாற்றாண்டு என்றும் கருதுவர் (மட்டக்களப்பு தேசம், வரலாறும் வழக்காறும் – 2016 : பக்–142)  எவ்வாறாயினும் காத்தானின் காலத்துக்கு முந்திய வரலாற்றை ஆரையம்பதி கொண்டிருப்பது வெளிப்படையானது.

ஆரையம்பதின் பழைய பெயர் காத்தான்குடியிருப்பு என்றால் காத்தானின் காலத்திற்கு முந்திய பெயர் எதுவாக இருக்கும் என்பது நம் முன் எழும் அடுத்த கேள்வி. க.இராஜரெத்தினம், முன்னோர்கள் கூறியதாக ஆரையம்பதின் பழைய பெயர் ”ஆலஞ்சோலை” எனும் தகவலை முதன் முதலில் முன்வைக்கின்றார். (ஆரையூர் கந்தன் – 1999 :பக் -32).  ஆனாலும்  ஆலஞ்சோலை என்ற பெயருக்கு வேறு சான்றுகளை அவதானிக்க முடியவில்லை.

இதை தவிர்த்து மட்டக்களப்பு பூர்வசரித்திரம், மட்டக்களப்பு மான்மியம் போன்ற மட்டக்களப்பு வரலாறு சொல்லும் நூல்கள் எதிலும் எந்தவொரு குறிப்புக்களும் ஆரையம்பதி சார்ந்து இல்லை என்பது நமக்கு பெரும் ஏமாற்றமாக இருப்பினும், கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வர் கோயில் முட்டிகூறும் நிகழ்வில் இவ்வூர் கரையூர் என அழைக்கப்பட்டதற்கு சான்று காணப்படுகின்றது.

குறித்த முட்டிகூறும் நிகழ்வு நிகழ்ந்திருந்த வரை கரையாருக்குரிய முட்டியை ஆரையம்பதி மக்கள் வாங்குவது நடைமுறையாக இருந்துடன், இந்நிகழ்வின்போது   கண்டிராசாவால் பட்டயம் பெற்றவர்கள் “கரை ஊரவர்கள்” எனக்கூறப்படும்  என்ற குறிப்புக்களும் . (தேரோட்டம் 1998 :பக் – 72)

கரையூரார் கம்பிளியா ராறுகாட்டி 

கருதுமுதலித்தேவன் வயித்திவேலன்

தறைசெறி வங்காளம் வீரமாணிக்கன் தான்

கரையார்குடி… (மட்டக்களப்பு மான்மியம் – 1962 : பக் – 107)

என்ற கரையாரின் குடி சொல்லும் பாடலில் காணப்படும் பெரும்பாலான குடி வழியினர் ஆரையம்பதியில்  காணப்பட  கரையூரார் என்பது ஒரு ஊரை நேரடியாக குறித்து நிற்கின்றது எனவும் கருதவாய்ப்பிருப்பதன் அடிப்படையிலும். காத்தானுக்கு முந்தைய காலத்தில் கரையூர் என ஆரையம்பதி அழைக்கப்பட்டிருக்காலாம் எனவும் எண்ணத்தோன்றுகின்றது.

மேலும் மண்முனை ராட்சியம் எழுச்சியுடன் இருந்த காலத்தில் அது இன்றைய புதுக்குடியிருப்பு தொடக்கம் இன்றைய ஆரையம்பதி முகத்துவாரத்தெரு வரை (ஆரையூர் கந்தன் – 1999 :பக் -31).  அதன் முன்னரங்க காவல் அரண்கள் இருந்தாக கூறப்படும் ஐதீகங்களின் அடிப்படையில் ஆரையம்பதின் காத்தான் காலத்துக்கு முந்தைய பெயர் மண்முனை என்றே இருந்திருக்க வேண்டும் எனவும் சிலர் கருதுவார்.

முடிவுரை

இற்றைக்கு நாறு வருங்களுக்கு முன்னர் , 1911 இல் இலங்கையில் அதிக சனத்தொகை கொண்ட கிராமங்களின் வரிசைப்படுத்தலில், இலங்கையில் 31 ஆவது இடத்தை பெறும் ஆரையம்பதி கிராமானது, கிழக்கு மாகாணத்தில் காணப்பட்ட தமிழ் கிராமங்களில் அதிக சனத்தொகை கொண்டதாக முதன்மைபெறும் (CENSUS OF CEYLON, 1911 : pg – 392) போக்கிலும், குறித்த கிராமத்தின் சமூக கட்டமைப்பு மற்றும் வழக்காறு போன்றவற்றில் காணப்படும் தனிதுவமும் பழமையும் சிறப்பாக அடையாளப்படுத்தப்படும் போக்கிலும் ஆரையம்பதி மிகநீண்ட வரலாற்று பாரப்பரியத்தை கொண்டிருப்பது நிதர்சனமானது.

இருப்பினும் மட்டக்களப்பு வரலாற்றை பேசும் ஆரம்பகால குறிப்புகள், மட்டக்களப்பு மாண்மியம், மட்டக்களப்பு பூர்வசரித்திரம் போன்ற ஆவணங்கள் எதுவும் ஆரையம்பதி சாந்து எந்த குறிப்புக்களும் காணப்படாத நிலையில் இப்பிரதேசத்தின் வரலாறு சார்ந்து பேசும் போது, இடப்பெயர் பற்றிய தேடல் மிகமுக்கிய பங்கை வகிக்கின்றது.

கிடைக்கின்ற தகவல்களின் அடிப்படையில் இன்று ஆரையம்பதி என அறியப்படும் பிரதேசம் ஆரைப்பற்றை, காத்தான்குடியிருப்பு என்ற பெயர்களாலும் அதற்கு முன் ஆலஞ்சோலை, கரையூர் மண்முனை என்ற பெயர்கள் கொண்டும் அறிப்படுகின்றது என்கின்ற புரிதல், வரலாற்றை கட்டமைக்கும் போது, குறித்த பிரதேசத்தின் வரலாற்றை சரியான முறையில் அணுக வழிகோலும் என்பதுடன் இன்று தேற்றுவிக்கப்படும் உரிமைப் பிரச்சனைகளுக்கு முற்றுபுள்ளியிடுவதற்கான தொடக்கபுள்ளியாக அமையும் என்பதும் திண்ணம்.

பிரசாத்  சொக்கலிங்கம்

கிழக்கு ஈழத்தின் மட்டக்களப்பு மண்ணை சேர்ந்த பிரசாத் சொக்கலிங்கம் ஆவணப்படுத்தல்பணிகளின் தீவிரமாக இயங்கி வருபவர். 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More