இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் வருகையின் போது, லண்டன், சாட்தம் ஹவுஸில் அவரது பாதுகாப்பில் குறைபாடு ஏற்பட்டதற்கு இங்கிலாந்து வெளியுறவு துறை அலுவலகம் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது.
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் சாட்தம் இல்லத்திற்கு சென்றிருந்த போது, காலிஸ்தான் ஆதரவாளர்கள் மஞ்சள் நிற கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காலிஸ்தான் ஆதரவாளர்களில் ஒருவர் அமைச்சர் ஜெய்சங்கர் காரை நோக்கிய ஓடியதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
தொடர்புடைய செய்தி : இந்திய தேசியக் கொடியை கிழித்து லண்டனில் எதிர்ப்பு நடவடிக்கை!
இந்நிலையில், “வெளியுறவுத் துறை அமைச்சரின் இங்கிலாந்து வருகையின் போது சாட்தம் இல்லத்தின் வெளியே நடைபெற்ற சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறோம். அமைதியான முறையில் போராடுவதற்கு இங்கிலாந்து அனைத்து உரிமைகளையும் வழங்குகிறது. எனினும், பொது நிகழ்வுகளில் எச்சரிக்கை விடுப்பது அல்லது நிகழ்ச்சியை சீர்குலைக்கும் செயல்களில் ஈடுபடுவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.
இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்கும் நோக்கில் பொலிஸார் ஈடுபட்டனர். எங்களது தூதரக விருந்தாளிகளுக்கு முழுமையான பாதுகாப்பு வழங்குவதில் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்,” என்று இங்கிலாந்து வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.