ஜப்பானில் நேற்று (08) நடைபெற்ற பொதுத் தேர்தலில் சனாயே தக்காய்ச்சி வரலாற்று வெற்றியீட்டியுள்ளார்.
ஜப்பான் நாட்டின் பிரதமராக கடந்த ஒக்டோபர் மாதம் பதவியேற்ற சனாயே தக்காய்ச்சி, மக்களிடையே 70 சதவீதத்துக்கும் அதிகமான ஆதரவை பெற்றிருந்தார்.
பாராளுமன்றத்தில் அவரது கூட்டணிக்கு குறைந்த அளவிலான பெரும்பான்மை மட்டுமே இருந்த நிலையில், தனது பொருளாதார மற்றும் பாதுகாப்பு கொள்கைகளை தடையின்றி செயல்படுத்தவும் அரசியல் வலிமையை உறுதிப்படுத்தவும் பொதுத் தேர்தலை நடத்த முடிவு செய்தார்.
வரவு – செலவுத் திட்டம் தாக்கல் செய்ய வேண்டிய முக்கியமான நேரத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டமை நாட்டின் நிர்வாகத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் என எதிர்க்கட்சிகள் விமர்சித்தன.
இருப்பினும், புதிய அரசு அமைந்தவுடன் வரவு – செலவுத் திட்டம் நிறைவேற்றப்படும் என பிரதமர் உறுதியளித்தார்.
இதையடுத்து, ஜப்பான் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு, தேர்தல் அறிவிக்கப்பட்டது. அறிவிப்பின் படி, பெப்ரவரி 8ஆம் திகதி நேற்று நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஆளும் LDP கட்சி 465 இடங்களில் 352 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மை வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் பிரதமர் என்ற வரலாற்றுச் சாதனையை சனாயே தக்காய்ச்சி பெற்றுள்ளார்.
அவரது வெற்றிக்கு அரசியல் மற்றும் சமூகத்தின் பல்வேறு தரப்பினரும் பாராட்டுகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, சனாயே தக்காய்ச்சிக்கு அமெரிக்க ஜனாதிபதியும் ஆதரவு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்தி – ஜப்பான் தேர்தல்: சனாயே தக்காய்ச்சிக்கு டிரம்ப் ஆதரவு; வலிமையான தலைவர் என புகழாரம்!