40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டில் வசித்து வரும் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை அல்லது நீண்டகால விசா வழங்கி, மனிதாபிமான அடிப்படையில் நிலையான நிரந்தர தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில், வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழர்கள் தொடர்பான விவகாரம் மனிதாபிமான, அரசியலமைப்பு மற்றும் தேசிய நலன் சார்ந்த முக்கியத்துவம் வாய்ந்தது எனக் குறிப்பிட்டுள்ளார். 1983 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் ஏற்பட்ட இன மோதல்களால் தங்கள் உயிரைக் காப்பாற்றுவதற்காக இந்தியாவிற்கு அகதிகளாக வந்த இலங்கைத் தமிழர்களுக்கு, ஒன்றிய அரசின் அனுமதியுடன் தமிழ்நாடு அரசு தங்குமிடம், வாழ்வாதார உதவி, கல்வி மற்றும் மருத்துவ வசதிகளை வழங்கி வருவதாகவும் தெரிவித்துள்ளார். தற்போது சுமார் 89,000 இலங்கைத் தமிழர்கள் தமிழ்நாட்டில் வசித்து வருவதோடு, இவர்களில் பெரும்பாலானோர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் வாழ்ந்து வருகின்றனர் என்றும், சுமார் 40 சதவீதத்தினர் இந்திய மண்ணிலேயே பிறந்தவர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசு தனது மனிதாபிமான கடமைகளைச் சிறப்பாக நிறைவேற்றி வந்தாலும், இலங்கைத் தமிழர்கள் நீண்ட காலமாக சட்ட ரீதியான நிச்சயமற்ற நிலையில் வாழ்ந்து வருவதாகவும், குடியுரிமை அல்லது நீண்டகால விசா போன்ற நிரந்தர சட்டத் தீர்வுகள் இதுவரை வழங்கப்படவில்லை என்றும் முதல்வர் சுட்டிக்காட்டியுள்ளார். இதனைத் தீர்க்கும் வகையில், வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் தலைமையில் அமைக்கப்பட்ட ஆலோசனைக் குழு மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த இலங்கைத் தமிழர்கள் தற்போதுள்ள சட்டவிதிகளின்படி குடியுரிமை அல்லது நீண்டகால விசா பெறத் தகுதியுடையவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2003 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டத்தில் “சட்டவிரோத குடியேறியவர்” என்ற வரையறை, மனிதாபிமான அடிப்படையில் இந்தியாவிற்கு வந்த இலங்கைத் தமிழர்களுக்கு எதிர்மறையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதாகவும், இது அவர்களின் சட்டப்பூர்வ தீர்வுகளுக்கு தடையாக இருப்பதாகவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட குடிவரவு மற்றும் வெளிநாட்டினர் (விலக்கு) ஆணை, 2025 மனிதாபிமான அணுகுமுறையை வெளிப்படுத்துவதாகவும், அதன் அடிப்படையில் 2015 ஜனவரி 9 வரை இந்தியாவில் வசித்து வந்த இலங்கைத் தமிழர்களை “சட்டவிரோத குடியேறியவர்கள்” எனக் கருதக்கூடாது என்ற விளக்கத்தை ஒன்றிய அரசு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், குடியுரிமை விண்ணப்பங்களை பரிசீலிப்பதில் உள்ள முந்தைய நிர்வாகத் தடைகளை நீக்க வேண்டும் என்றும், தமிழ்நாடு அரசு வழங்கிய அடையாள ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு கடவுச்சீட்டு மற்றும் விசா தேவைகளில் தளர்வு வழங்கி, மாவட்ட அளவிலான அதிகாரிகளுக்கு விரைவான முடிவெடுக்கும் அதிகாரம் வழங்க வேண்டும் என்றும் முதல்வர் கோரிக்கை வைத்துள்ளார்.
நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் மரியாதையுடனும், பண்பாட்டு உறவுகளுடனும் வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழர்களை தொடர்ந்து “சட்டவிரோத குடியேறியவர்கள்” என வரையறுப்பது, அவர்கள் இந்தியாவிற்கு வந்த மனிதாபிமானச் சூழலையும், அரசின் அனுமதியுடன் தங்கியிருப்பதையும் பிரதிபலிப்பதில்லை என்றும் கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் விரைவாக மனிதாபிமான அடிப்படையிலான நல்ல முடிவு எடுக்கப்படும் என நம்புவதாகவும், பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.