தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், தமிழக அரசியலில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மாற்றம் உருவாகியுள்ளது. நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகம் (தவெக), தனது முதல் தேர்தலிலேயே 108 தொகுதிகளில் வெற்றி பெற்று மாநிலத்தின் மிகப்பெரிய தனிக்கட்சியாக உருவெடுத்துள்ளது. இதனால், விஜய் முதல்வராக பதவியேற்கும் நிலை உருவாகி, அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனம் ஈர்க்கப்பட்டுள்ளது.
234 உறுப்பினர்களைக் கொண்ட தமிழக சட்டப்பேரவையில் ஆட்சி அமைக்க குறைந்தது 118 ஆசனங்கள் அவசியமாகும். ஆனால், தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால் தனிப்பட்ட பெரும்பான்மையை எட்டவில்லை. மேலும், விஜய் இரட்டை தொகுதிகளில் வெற்றி பெற்றிருப்பதால், ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயமும் உள்ளது. அதேபோல், சபாநாயகர் பதவிக்கு கட்சியிலிருந்து ஒருவரை தேர்வு செய்ய வேண்டியிருப்பதால், தவெக வசம் நடைமுறையில் 106 ஆசனங்களே இருக்கும். இதனால், ஆட்சி அமைப்பதற்காக கூடுதலாக குறைந்தது 12 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது.
இந்த நிலைமையால், தமிழகத்தில் “தொங்கு சட்டமன்றம்” உருவாகும் வாய்ப்பு அதிகரித்துள்ளதுடன், கூட்டணி அரசியல் அவசியமாகும் சூழல் உருவாகியுள்ளது. பல்வேறு கட்சிகளுடன் ஆதரவு பேச்சுவார்த்தைகள் நடைபெறும் வாய்ப்பும் அதிகமாகக் காணப்படுகிறது.
மறுபுறம், ஆளுங்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) இந்த தேர்தலில் குறிப்பிடத்தக்க பின்னடைவைச் சந்தித்துள்ளது. திமுக கூட்டணி மொத்தமாக 75 தொகுதிகளில் வெற்றி பெறும் நிலையில் உள்ளது. இதில் திமுக 56 இடங்களில், காங்கிரஸ் 5 இடங்களில், விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் தலா 2 இடங்களில், தேமுதிக 1 இடத்தில், ஏனைய கட்சிகள் 5 இடங்களில் வெற்றி பெறுகின்றன.
இந்த தேர்தலில் திமுக தலைவர் மற்றும் முதல்வர் மு.க. ஸ்டாலின் உட்பட பல முக்கிய அமைச்சர்கள் தோல்வியடைந்தது, கட்சிக்குள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில், நாம் தமிழர் கட்சி (நாதக) இந்த தேர்தலில் பெரிய பின்னடைவைச் சந்தித்துள்ளது. காரைக்குடி தொகுதியில் போட்டியிட்ட கட்சித் தலைவர் சீமான் உட்பட பெரும்பாலான வேட்பாளர்கள் டெபாசிட் இழந்துள்ளனர்.
நடிகராக இருந்து அரசியலுக்கு வந்த விஜய், எந்தவொரு கூட்டணியுமின்றி தனித்து போட்டியிட்டு முதல் தேர்தலிலேயே மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்திருப்பது அரசியல் வட்டாரங்களில் “புதிய புரட்சி” எனக் கருதப்படுகிறது. குறிப்பாக, எளிய பின்னணியில் இருந்து வந்த தவெக வேட்பாளர்கள், பல ஆண்டுகளாக நிலைத்து வந்த பாரம்பரிய திராவிடக் கட்சிகளை வீழ்த்தியிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
வாக்கு எண்ணிக்கை தொடக்கம் முதலே முன்னிலை வகித்த தவெக, இறுதியில் 108 இடங்களில் வெற்றி பெற்று தமிழகத்தின் முக்கிய அரசியல் சக்தியாக உருவெடுத்துள்ளது. இதனைத் தொடர்ந்து, கூட்டணி ஆதரவைப் பெற்று விஜய் முதல்வராக பொறுப்பேற்கும் நடவடிக்கைகள் விரைவில் முன்னெடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.