தமிழகத்தில் ஆட்சி அமைப்பதற்காக தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வமாக ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளது. இதனால், தொங்கு சட்டமன்ற நிலைமையில் இருந்த அரசியல் சூழல் தற்போது புதிய கட்டத்தை எட்டியுள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருந்தாலும், ஆட்சி அமைக்க தேவையான 118 என்ற பெரும்பான்மை எண்ணிக்கையை எட்டவில்லை.
மேலும், கட்சித் தலைவர் விஜய் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றிருப்பதால், அதில் ஒரு தொகுதியை இராஜினாமா செய்ய வேண்டியிருப்பதால், தவெகவின் பலம் 107ஆக குறையும் நிலை உருவாகியுள்ளது. இதனால், பெரும்பான்மையை நிரூபிக்க குறைந்தது மேலும் 12 எம்.எல்.ஏக்களின் ஆதரவு அவசியமாக இருந்தது.
இந்த சூழலில், 5 தொகுதிகளில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியின் ஆதரவை தவெக தலைவர் விஜய் கோரியிருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தின் பின்னர், தமிழ்நாடு காங்கிரஸ் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தவெகவின் கோரிக்கையை ஏற்று ஆதரவு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்த ஆதரவு நிபந்தனையுடன் வழங்கப்படுவதாகவும், “மதவாத சக்திகளுக்கு ஆதரவாக செயல்படக்கூடாது” என்ற முக்கிய நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்த நிபந்தனை, எதிர்கால அரசியல் மற்றும் கொள்கை முடிவுகளில் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காங்கிரஸின் இந்த ஆதரவுடன், தவெக தலைமையிலான ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பு மேலும் வலுவடைந்துள்ளது. இருப்பினும், முழுமையான பெரும்பான்மையை உறுதிப்படுத்துவதற்காக, ஏனைய கட்சிகள் மற்றும் சுயேட்சை எம்.எல்.ஏக்களின் ஆதரவும் தேவைப்படக்கூடும்.
தமிழக அரசியல் அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் இந்த தருணத்தில், விஜய் தலைமையிலான தவெக எவ்வாறு கூட்டணியை விரிவுபடுத்தி ஆட்சி அமைக்கிறது என்பது மிகுந்த கவனத்தை ஈர்த்துள்ளது.